செல்போன் தயாரிப்பு-உலக கேந்திரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் உயர் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மோட்டோரோலா தொழிற்சாலையின் புதிய உற்பத்திப் பிரிவை கருணாநிதி திறந்து வைத்து பேசுகையில்,
இந்த மோட்டோரோலா தொழிற்சாலை அரசுட் ஒப்பந்தம் போட்ட 2 ஆண்டுகளுக்குள் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இதற்காக நீங்கள் விரைந்து மேற்கொண்ட முயற்சிகள், உங்களுடைய செயல்திறன்கள் ஆகியவற்றிற்காக உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
எங்கள் அரசு வழங்கும் ஊக்கத்தினாலும், முதலீட்டாளர்களுடன் தோழமை பாராட்டும் அணுகுமுறையினாலும், ஒப்புதல் அளித்த ரூ. 135 கோடி என்ற இலக்கை கடந்து, மோட்டோரோலா நிறுவனம் ரூ.172 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் செல்பேசிகளை இந்த நிறுவனம் தயாரிக்கும் என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
செல்பேசிகளைத் தயாரிப்பதில் உலகில் 2வது பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 1997ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால் 2007ம் ஆண்டு டிசம்பர் இறுதியில், இந்தியா 27 கோடி தொலைபேசி இணைப்புகளைக் கொண்டுள்ளது.
இனி வருங்காலங்களில் இந்த வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்.
இயந்திரங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக்குகள், கைத்தொழில் புரிவோர் போன்ற சுயதொழில் புரிவோரின் பொருளாதார நிலைகள் செல்பேசிகளால் உயரும் என்று கருதுகிறேன். மேலும், கிராமப்புற மக்களிடையே தொடர்புகளையும், விழிப்புணர்வுகளையும் கூட செல்பேசிகள் மேம்படுத்திடும். இனி வருங்காலங்களில் விவசாயிகள் பல்வேறு தகவல்களைப் பெறுவதற்கும், அவர்கள் தங்களுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலைகளைப் பெறுவதற்கும் செல்பேசிகள் அதிக அளவில் பயன்படும் என உறுதியாக நம்புகிறேன்.
உலகின் நம்பர் ஒன் ஆகும் ஸ்ரீபெரும்புதூர்:
செல்பேசிகள் தயாரிப்பில் உலகில் மிகப்பெரிய கேந்திரமாக ஸ்ரீபெரும்புதூரை உருவாக்கிட இந்த அரசு விரும்புகிறது. ஏற்கனவே செல்பேசிகளை அதிக அளவில் தயாரிக்கும் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக நோக்கியா நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. சாம்சங் நிறுவனமும் செல்பேசிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவி வருகிறது. சோனி எரிக்சன் நிறுவனம் பாக்ஸ்கான் மற்றும் பளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் மூலமாக செல்பேசிகளை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த தொழிற்சாலைகள் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவதுடன், துணைத் தொழில்கள் மற்றும் சேவைத் தொழில்கள் மூலமாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கின்றன. இந்த வளர்ச்சி வேகம் தொடர்ந்து நிலையாய் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
கார் தயாரிப்பில் உலகின் டாப் 10ல் தமிழகம்:
இந்த அரசின் ஒளிவு மறைவற்ற, இனக்கமான அணுகுமுறை, தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல் இவைகள் தான் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குப் பெரிதும் விரும்பும் இடங்களில் ஒன்றாகத் தமிழகத்தைத் தேர்வு செய்கின்றன என்பதற்கு மோட்டோரோலா தொழிற்சாலை மற்றுமொரு சான்றாகும்.
செல்பேசித் தயாரிப்பில் மட்டுமல்லாமல், மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, வன்பொருள்கள் உற்பத்தி, உதிரிபாகங்கள் உட்பட வாகனங்கள் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவின் மிகப்பெரிய மையமாகவும் ஸ்ரீபெரும்புதூர் வளர்ச்சி பெற்று வருகிறது.
2010ம் ஆண்டில் ரெனால்ட்-நிசான் கார் தொழிற்சாலை செயல்படத் தொடங்கும்போது இருங்காட்டுக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மறைமலைநகர் தொழில் மையங்களில் கார் உற்பத்தி செய்யும் 6 தொழிற்சாலைகள் அமைந்து, அவை கார் உற்பத்தியில் ஆண்டுக்கு 12 லட்சம் கார்களுக்கு அதிகமாக உற்பத்தி செய்யும் திறனுடன் திகழும்.
இது உலகின் முதன்மையான 10 கார் உற்பத்தி மையங்களில் ஒன்றாக இப்பகுதியை வளர்த்திடும். கார் உற்பத்தி தவிர வணிக வாகனங்கள், நில அகழ்வு வாகனங்கள், கட்டுமான இயந்திரங்கள், டிராக்டர்கள் உட்பட பிற மோட்டார் வாகனங்களையும் இந்தத் தொழில் மையமானது உற்பத்தி செய்து, இப்பகுதியை ஆசியாவின் டெட்ராய்ட் என உயர்த்திடும்.
விரைந்து செயல்பட்டுச் சாதனைகளை நிகழ்த்துவதில் எங்கள் அரசு பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளது. செயல்முறைக்கு உகந்த எங்களுடைய அணுகுமுறை காரணமாக 500 தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பல நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளன.
உலகப் புகழ்வாய்ந்த தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்காகக் கடந்த 2 ஆண்டுகளில் 13 ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டுள்ளன.
இந்த தொழிற்சாலைகளில் ரூ.17,583 கோடி அளவுக்குத் தொழில் முதலீடுகள் அமையும். இவை 1.42 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
இந்த 13 தொழில் நிறுவனங்களில் சாம்சங், சான்மினா, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் இரண்டாம் தொழிற்சாலை, டெல் கணினிகள், கெப்பாரோ ஆகியவற்றுடன் தற்பொழுது தொடங்கப்படும் மோட்டோரோலா தொழிற்சாலையையும் சேர்த்து மொத்தம் 6 தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை தொடங்கி விட்டன.
மேலும், பல தொழிற்சாலைகள் தொடர்ந்து வரவிருக்கின்றன. வரும் மாதங்களில் இந்த 2008ம் ஆண்டிலேயே, எங்களுடைய அரசு கடந்த 16 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை விட அதிகமான அளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல ஒப்பந்தங்களை மேற்கொள்ளவிருக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.
மத்திய வர்த்தகத் துறை செயலாளர் கோபால் கே.பிள்ளை பேசுகையில்,
இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 2 வருடங்களும் 2 மாதங்களும் ஆகின்றன. இதில் மொத்தம் ரூ. 67,000 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 1.76 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் இந்தியாவிலேயே பெரிய மின்னணு தொழில்பேட்டையாக உருவாகியிருக்கிறது. இதற்காக தமிழக அரசைப் பாராட்டுகிறேன் என்றார்.