2 ஆண்டுகளில் சென்னையில் மெட்ரோ ரயில்

சென்னை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ரூ.9,757 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. மத்திய-மாநில அரசுகளின் கூட்டுத் திட்டமாக இது செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை- பிராட்வே- அண்ணாசாலை- சைதாப்பேட்டை- கிண்டி வழியாக விமான நிலையம் வரை ஒரு ரயில் பாதையும்,
கோட்டை- சென்டிரல்- வேப்பேரி- அமைந்தகரை- ஷெனாய் நகர்- அண்ணா நகர்- கோயம்பேடு, உள்வட்டச்சாலை- வடபழனி- அசோக் நகர்- சிட்கோ- ஆலந்தூர் வழியாக பரங்கிமலை ரயில் நிலையம் வரை மற்றொரு பாதையும் அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பாதையில் சுற்றுச்சூழல் பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட ஆய்வுகள், மதிப்பீடு தொடர்பாக பொது மக்களுடன் கலந்தாலோசனை கூட்டங்களை அரசு நடத்த ஆரம்பித்துள்ளது.
முதல் கட்டமாக ஆலந்தூர், சிட்கோ, மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு, ஆலந்தூரிலும் கே.கே.நகர், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அசோக் நகரிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் அந்தப் பகுதியில் உள்ள நலச்சங்கங்களின் நிர்வாகிகள், குடியிருப்போர், வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பொது மக்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு முனீர் ஹோடா பதிலளி்க்கையி்ல்,
பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இத் திட்டத்துக்கு 160 ஏக்கர் தேவைப்படும். இதில் 140 ஏக்கா அரசு நிலம். மீதமுள்ள 20 ஏக்கர் 90 குடும்பங்களிடம் இருந்து பெறப்படவுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்படும் நிலத்துக்கு மார்க்கெட் விலை கொடுப்போம். வாடகை கட்டிடங்களில் வசிப்போருக்கு மாற்று இடத்தில் வசிப்பதற்கான வாடகையும் வழங்கப்படும். இந்தப் பாதையில் கடைவைத்து பிழைப்பு நடத்துவோருக்கு மெட்ரோ ரயில் வளாகங்களில் கடைகள் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
திட்டத்தை நிறைவேற்றும் முன் அந்தப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல், மண்ணின் தன்மை, காற்று மாசு, ஒலி மாசு போன்று அடிப்படை கட்டமைப்புகள் ஆராயப்படும்.
திட்டம் தொடர்பாக வரைபடங்கள், எந்தெந்த சர்வே எண் நிலங்கள் திட்டத்துக்காக எடுக்கப்படுகின்றன என்ற விவரங்கள் அடுத்த கூட்டங்களில் பார்வைக்கு வைக்கப்படும்.
மின்சார ரயில் செல்லும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படாது. ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து பேசித்தான் இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறோம். எனவே ஒன்று வந்தால் மற்றொன்று இருக்காது.
மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதால், கத்திப்பாரா சந்திப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சில இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டும்போது, மெட்ரோ ரயில் நிறுவன கிளியரன்ஸ் வாங்கிவரும்படி எம்.எம்.டி.ஏ. நிர்வாகம் கேட்பதாக இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். எங்களுக்கு இதுவரையில் 25 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றுக்கு கிளியரன்ஸ் வழங்கிவிட்டோம். பொதுமக்களை பாதிக்காமல் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
ஜூன் மாதம் வரையில் மக்கள் கருத்து அறியும் கூட்டம் நடத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கான வேலைகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கும்.
கோயம்பேடு-பறங்கிமலைக்கு இடையேயும், சைதாப்பேட்டை-விமான நிலையத்துக்கு இடையேயும் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும். பூமிக்கு அடியில் செல்லக்கூடிய போக்குவரத்துக்கான வேலைகள் 6 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றார் ஹோடா.