'சேது' வழக்கு-அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பிலான வக்கீல் வேணுகோபால ராவ் வாதாடினார். விவாதம் முடியாததால் அடுத்த வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான மனுக்கள் மீது இன்று இறுதி விவாதம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், பன்சால் ஆகியோர் முன்னிைலயில் விவாதத்திற்கு வந்தது.
அப்போது தண்டி சுவாமி, ஜெயலலிதா ஆகியோர் சார்பில் ஆஜராகிய வேணுகோபால ராவ் வாதாடினார். அவர் வாதிடுகையில், இந்திய தொல்துறை ஆய்வுக்கு உட்படுத்தாமல் ராமர் பாலத்ைத இடிக்க முடியாது. அது ராமரால் கட்டப்பட்டதோ அல்லது இயற்கையாக உருவானதோ, தொல்பொருள் துறை ஆய்வின் மூலம் தான் அதைக் கண்டறிய முடியும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு இந்த சோதனைக்கு முன்வர மறுக்கிறது. ஆனால் சேது சமுத்திரத் திட்டத்திற்காக மக்களின் வரிப்பணத்தில் ரூ. 2400 கோடியை வாரி இறைத்திருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டத்தின்படி கால்வாயின் நீளம் 270கிலோமீட்டராகும். இதில் ராமர் பாலத்தின் நீளம் 31 மீட்டர்.
ராமர் பாலத்தை இடிப்பதற்கு முன்பு, அது இயற்கையானதுதான், மனிதரால் கட்டப்பட்டதல்ல என்பதை அறிவியல்பூர்வமாக விளக்க
வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
பூகோளவியல் ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதுதான் என்று கூறியுள்ளார். இதை அரசு புறக்கணித்துள்ளது என்றார்.
இன்றைய விவாதம் முடிவடையாததால் வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.