நர்கீஸ் புயலுக்கு மியான்மரில் 400 பேர் பலி
யாங்கூன்: மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நர்கீஸ் புயல் நேற்று முன்தினம் மியான்மரைத் தாக்கியது. தலைநகர் யாங்கூன் மற்றும் அருகில் உள்ள தீவு புயலுக்கு இலக்காகியது.
புயல் தாக்கியதால் யாங்கூன் கடும் சேதமடைந்தது. சேத விவரங்கள் முழுமையாக உடனடியாக தெரிய வரவில்லை. இந்த நிலையில் சேத விவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
புயலுக்கு யாங்கூனில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அயேயவடி என்ற இடத்தில் 200 பேர் இறந்துள்ளனர். ஹையாங் கியி தீவில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இங்குதான் முதலில் புயல் தாக்கியது.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதிகள் அனைத்தும் தீவு போல காட்சி அளிக்கிறது.
யாங்கூன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு கப்பல்கள் கடலில் மூழ்கி விட்டன. மின்சார வயர்கள் கடுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யும் பணியில் மியான்மர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல தொலைத் தொடர்பும் கடுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் போர்க்களம் போலக் காணப்படுவதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கு ஏற்பட்டுள்ள சேதம், நாட்டுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தை நோக்கி நர்கீ்ஸ்:
தற்போது நர்கீஸ் புயல் தாய்லாந்து கடற்கரையை நோக்கி நகர்ந்து விட்டது. இதையடுத்து தாய்லாந்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.