லிப்ட்டுக்குள் எட்டிப் பார்த்த மாணவன் பரிதாப சாவு
சென்னை: லிப்ட் வருகிறதா என்று எட்டிப் பார்த்த 17 வயது மாணவர், லிப்ட் மோதி பரிதாபமான முறையில் உயிரிழந்தார்.
சென்னை கிழக்குத் தாம்பரம், சேலையூரைச் சேர்ந்தவர் பரத்ராஜ். 10வது வகுப்பு முடித்துள்ளார். தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். சிறந்த கிரிக்கெட் வீரரான பரத்ராஜ், 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியிலும் தேர்வாகியுள்ளார்.
நேற்று சேலையூர் காவல் நிலையம் அருகே உள்ள ஜெயின் அபிஷேக் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பர் சித்தார்த்தை சந்திக்கா அங்கு சென்றார்.
சித்தார்த்தின் வீடு 3வது தளத்தில் உள்ளது. சித்தார்த்தைப் பார்த்து விட்டு வந்த பரத்ராஜ், லிப்ட் மூலம் கீழே செல்ல பட்டனை அழுத்தி விட்டுக் காத்திருந்தார்.
அப்போது லிப்ட்டுக்கு அருகே உள்ள கண்ணாடி அகற்றப்பட்டிருந்த ஜன்னல் வழியாக லிப்ட் வருகிறதா என்று எட்டிப் பார்க்க தலையை நுழைத்துள்ளார்.
ஆனால் லிப்ட் வேகமாக வந்து கொண்டிருந்தது அவருக்குத் தெரியவில்லை. வேகமாக வந்த லிப்ட் பரத்ராஜின் தலையை நசுக்கி சிதைத்தது. இதனால் நின்ற நிலையிலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் பரத்ராஜ்.
அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்போர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர். பார்ப்போர் நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து பரத்ராஜின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நல்ல மாணவராகவும், விளையாட்டில் கெட்டிக்காரராகவும் விளங்கிய பரத்ராஜின் இந்த அகால மரணம் அவரது குடும்பத்தினரை துடிதுடிக்க வைத்துள்ளது.