நாளை கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
பெங்களூர்: கர்நாடக சட்டசபைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை பெங்களூரில் நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த நிலையில் பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு கூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கர்நாடக பாஜகவின் பிரசாரத்தையும், வேட்பாளரையும் திட்டமிட்டு நடத்தி, கட்சிக்கு வெற்றித் தேடித் தந்தவரான பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கலந்து கொள்கிறார்.
இதில் கட்சியின் சட்டமன்றத் தலைவராக பி.எஸ்.எதியூரப்பா தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. அதன் பின்னர் பாஜக சார்பில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் கடிதம் வழங்கப்படும்.
பங்காரப்பா- மகன்கள் தோல்வி:
இதற்கிடையே இந்தத் தேர்தலில் பங்காரப்பாவும் அவரது மகன்கள் இருவரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த பங்காரப்பா, காவிரிக் கலவரத்தின்போது அதைத் தடுக்காமல் மறைமுகமாக தூண்டியும் விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பாஜக தலைவர் எதியூரப்பாவை எதிர்த்து சமாஜ்வாடி கட்சியின் சார்பில் சிகாரிபூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதே போல பங்காரப்பாவின் மகன்கள் குமார் பங்காரப்பா, மது பங்காரப்பா இருவரும் சோரப் தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்டனர்.
குமார் பங்காரப்பா காங்கிரஸ் சார்பிலும், மது பங்காரப்பா சமாஜ்வாடி கட்சி சார்பில் தந்தை ஆதரவுடனும் போட்டியிட்டார். ஆனால், அவர்கள் இருவரும் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளனர்.
வீரப்பனால் கொல்லப்பட்ட லிங்காயத் சமூக மூத்த தலைவர் நாகப்பாவின் மனைவி பரிமளாவும் இந்த தேர்தலில் போட்டியிட்டார். அவரும் தோல்வியே தழுவினார்.