தேமுதிகவால் மட்டுமே நல்லாட்சி சாத்தியம்-பிரேமலதா
திண்டுக்கல்: தமிழகத்தில் எந்தக் கட்சியாலும் நல்லாட்சி தர முடியாது. தேமுதிகவால் மட்டுமே அது சாத்தியம் என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கார் டிரைவர் ஜெயக்குமார் - ஜெயலட்சுமி திருமணம் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் இன்று நடந்தது. பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் மணமக்களை வாழ்த்தி பிரேமலதா பேசுகையில், தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தேமுதிகவை பார்த்து பயந்து கொண்டிருக்கின்றன.
தொண்டர்களின் கடுமையான உழைப்புதான் தேமுதிகவின் வளர்ச்சிக்கு காரணம். பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் தொண்டர்களின் உழைப்பால் நிச்சயம் தமிழகத்தில் நம் தலைவரால் ஒரு நல்லாட்சி தர முடியும். வெகு விரைவில் அந்தக்காலம் வருகிறது.
நம் தலைவர் டெல்லி சென்றாலும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அவரிடம் கூட்டணி குறித்துதான் பேசுகிறார்கள்.
சீட்டுக்காக விலைபோகும் தலைவர் நம் தலைவர் அல்ல. மக்களுடன்தான் நம் கூட்டணி. தொண்டர்களை வைத்துதான் நல்லாட்சி கொடுக்க முடியும். இப்பொழுது இருந்தே எம்.பி. தேர்தலுக்கான பணியை நீங்கள் தொடங்க வேண்டும்.
நம் தலைவர் ஒவ்வொரு ஊராக வந்து உங்களை சந்திக்க இருக்கிறார். நீங்கள் இப்பொழுதே எம்.பி. தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிடுகிறேன்.
விலைவாசி தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. 2 ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என்கிறார்கள். ஆனால் ஒரு சாதாரண குடும்பத்தில் ஒருநாள் சமையல் செய்வதற்கு மற்ற பொருட்களின் விலை ரூ. 25 கூடுதலாகிறது. இப்படி இருந்தால் சாதாரண மக்களால் என்ன செய்ய முடியும்.
தமிழகத்தில் நம்மால் மட்டுமே நல்லாட்சி தர முடியும். மற்ற கட்சிகளால் இது முடியாது என்றார் பிரேமலதா.