For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொருளாதார குற்றங்கள்-போலீசுக்கு கருணாநிதி உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தங்கக்காசு மோசடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் கருணாநிதி, துறை வாரியாக தினசரி ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந் நிலையில் காவல்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் டிஜிபி ஜெயின், கூடுதல் டிஜிபிக்கள் விஜயக்குமார், லத்திகா சரண், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன், சென்னைப் புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் உள்ளிட்ட அதிகாரிகளும், தலைமைச் செயலாளர் திரிபாதி, உள்துறைச் செயலாளர் மாலதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அதில், மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்படுதல், சாதி, மதப்பூசல்கள் ஏற்படாமல் தடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்தல், அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்தல்,

தீவிரவாதக் குழுக்கள் தமிழகத்தில் காலூன்றாவண்ணம் தொடர்ந்து கண்காணித்தல் ஆகிய பல்வேறு பொருள்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

கள்ளச் சாராய சாவுகள் மாநிலத்தின் எந்த பகுதிகளிலும் நடைபெறாமல் தடுத்திட மாநிலம் முழுவதிலும் கள்ளச் சாராயம் காய்ச்சுவதில் எவரேனும் ஈடுபட்டாலோ, எவரேனும் அவர்களுக்கு துணைபுரிந்தாலோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கருணாநிதி உத்தரவிட்டார்.

நக்சல்களை ஒழிக்க..:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தீவிரவாதக் குழுக்களால் ஈர்க்கப்படுவதைத் தடுக்க தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் சிறப்பு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்திட அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, இந்த வளர்ச்சித் திட்டங்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் அந்தந்தப் பகுதிகளில் தீவிரவாத அமைப்புகள் தலைதூக்காவண்ணம் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என கருணாநிதி கூறினார்.

ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான பேர் பயணம் செய்வதைத் தடுத்தல், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கருணாநிதி வலியுறுத்தினார்.

பொருளாதாரக் குற்றங்கள்:

சமீபகாலத்தில் தங்கக் காசு விற்பது போன்ற பொருளாதார குற்றங்கள், படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறி ஏமாற்றுதல் போன்ற குற்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள்

நடைபெறாவண்ணம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும்,மாநிலத்தின் நெடுஞ்சாலைகளில் தற்போது ஏற்படும் சாலை விபத்துகளை குறைத்திட காவல்துறையும், போக்குவரத்துத் துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கருணாநிதி அறிவுறுத்தினார்.

ரவுடிகளை ஒழிக்க உத்தரவு:

ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அத்தகையோரின் சமூகவிரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழகக் கடலோரப் பகுதிகளில் சமூக விரோத நடவடிக்கைகள் எதுவும் நிகழாத வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும் என்றும்

திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடும் குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருணாநிதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X