காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது-வைகோ

Subscribe to Oneindia Tamil
Vaiko
சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்படப் போகிறது என்றார் வைகோ.

மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு சென்னையில் நடந்தது.
மாநாட்டில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் 141 பவுன் தங்க வாள் வைகோவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் நிதியாக ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

மாநாட்டில் வைகோ பேசியதாவது:

இன்றைக்கு சொல்ல முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏன் சொல்ல முடியவில்லை.

எது எதற்கோ அரசை மிரட்டிக் காரியம் சாதிக்கும் இவர்கள், அத்தியாவசியமான இந்த பிரச்சினைக்காக ஒரு முறை அரசை மிரட்டியிருக்கலாமே... அப்படிச் செய்திருந்தால் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருக்காது. எல்லோரும் திட்டமிட்டு நாடகம் ஆடுகிறார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படப் போகிறது. அப்போதுதான் இவர்கள் தங்களின் தவறுகளைப் புரிந்து கொள்வார்கள்.

விளை நிலங்களைப் பாதுகாப்போம்:

இன்றைக்கு நம் விவசாயத்தை அச்சுறுத்தும் பிரச்சினை மழையோ, தண்ணீரோ அல்ல. உழுவதற்கு நிலங்கள் இல்லாத நிலைதான். நகரங்களை ஒட்டி இன்று கிராமங்களோ வயல் வெளிகளோ இல்லை. அப்புறம் எப்படி விவசாயம் இருக்கும்?

விவசாயிகளே... உர விலை, விதைகளின் விலைகளை அரசு உயர்த்தி, உங்களை விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு தடுக்கப் பார்க்கிறது. அப்போதுதானே வெறுத்துப் போய் விவசாயத்துக் கைவிட்டு நிலத்தை விற்பீர்கள்... அப்போதுதானே இங்கு தொழிற்சாலை கட்டிவிட்டு, வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்ய முடியும்...! இது எத்தனை பெரிய சதி தெரியுமா?

நண்பர்களே... எவ்வளவு விலை கொடுத்தாலும் உங்களை நிலங்களை மட்டும் கொடுத்து விடாதீர்கள் என்றார் வைகோ.

அதிமுக சார்பில் அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.

முன்னாள் எம்.பி. இரா. செழியன், மதிமுக துணைப் பொதுச் செயளர் மல்லை சத்யா, கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...