For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் முண்டாசுக்கு நீதி கேட்கத் தகுதி இல்லையா?-விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: என்னுடைய சொத்துக்கள் எல்லாம் என்னுடைய உழைப்பில் சேர்த்ததது. எனவே வருமான வரிக்கு பயந்து நான் யார் வீட்டு வாசலிலும் நான் காத்து கிடக்கவும் இல்லை, அதற்கு அவசியமுமில்லை என்று தேமுக தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார்.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில், வருமான வரி விவகாரத்தில் யார் வீட்டு வாசலில் யார் காத்திருக்கிறார்கள் என்பது தெரியும் என விஜய்காந்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு தாக்கியிருந்தார்.

இந் நிலையில் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேமுதிக சார்பில் தஞ்சையில் விவசாயிகளுக்காக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நான் பேசியதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இதனால், உண்மை நிலையை தெளிவுபடுத்தும் நிர்ப்பந்தத்திற்கு நான் ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

காவிரிப் பிரச்சனையில் நடுவர் மன்றம் அமைக்க கோரிய வழக்கை கருணாநிதி திரும்பப் பெறாமல் அன்றை தினம் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருந்தால் 1974ம் ஆண்டிலேயே இப்பிரச்சனையில் தீர்ப்பு கிடைத்திருக்கும்.

1974ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கைக்கு கச்சத்தீவை வழங்க கருணாநிதி உடன்பட்டார். இதனால் இன்று வரை கடலோர மீனவர்கள் உயிருக்கு போராடுகின்றனர்.

தமிழகத்தின் பங்கான ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை கருணாநிதி இன்றுவரை நிறைவேற்றாதது மட்டுமல்ல, சோனியா காந்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க அதற்கான தமிழக மக்களின் போராட்டத்தையும் ஒத்தி வைத்தார். இதனால் இத்திட்டம் கேள்விக் குறியாகி விட்டது.

ஆனால், 1998ம் ஆண்டு ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற்ற அனுமதி பெற்றிருந்தும் கூட கர்நாடகம் தனது பெங்களூர் குடிநீர் திட்டத்தை அதே ஒப்பந்தத்தின்படி 4 ஆண்டுகளில் நிறைவேற்றி முடித்துவிட்டது.

கருணாநிதி ஆட்சிக் காலங்களில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று நான் சொன்னால் அவர் அதை பிதற்றல் என்கிறார். பிறர் கேட்கிறபோது தனது சொந்த நலன்களை விட்டுக்கொடுக்கலாம். ஆனால் ஒரு முதலமைச்சர் நாட்டு நலனை விட்டுக்கொடுக்கலாமா என்பதே என் கேள்வி.

சாதனை என்பது மணம் வீசும் மலரை போன்றது. சாதனைகளைப்பற்றி மற்றவர்கள்தான் பேசவேண்டும். கருணாநிதி விவசாயிகளுக்கு அளித்த சலுகைகளை பட்டியல் போடுகிறார். ஆனால் விவசாயிகள், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடத்திய போராட்டங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் பட்டியல் எங்கே என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது என்பதை மறைப்பானேன்?

கருணாநிதியின் பட்டியல் ஏட்டில்தான் உள்ளது. உண்மையில் அவர் அறிவித்த சாதனைகள் விவசாயிகளைச் சென்றடைந்திருந்தால், நான்கு நாட்களிள் நான் தஞ்சையில் அறிவித்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள், அதுவும் கருணாநிதியின் சொந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் கூடி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு நான் மேடை அருகில் கூட செல்ல முடியாமல் திக்குமுக்காட வைத்தது ஏன்?

வருமான வரிக்கு பயந்து காங்கிரஸ்காரர்கள் வீட்டு வாசலில் நான் காத்துக் கிடப்பதாக கருணாநிதி கேலி பேசியுள்ளார். என்னுடைய சொத்துக்கள் எல்லாம் நான் உழைத்துச் சேர்த்த சொத்துக்கள். ஆகவே வருமான வரிக்கு பயந்து நான் யார் வீட்டுவாசலிலும் காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அப்படி காத்துகிடக்கவும் இல்லை. இன்றும் பதவிக்காக டெல்லியில் காங்கிரஸ்காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பது யார் என்று நாட்டுக்குத் தெரியும்.

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் ஆர்.எம்.வீரப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது திருச்செந்தூர் கோவிலில் வேல் காணாமல் போயிற்று என்றும் சுப்பிரமணிய பிள்ளை கொலை செய்யப்பட்டார் என்றும் கூறி கருணாநிதி நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். அப்போது அவராகவே முண்டாசு கட்டிக் கொண்டார்.

தஞ்சையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு சில ஏழை விவசாயிகள் தங்களது துண்டுகளை தூக்கி எறிந்து என்னை முண்டாசு கட்டிக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களின விருப்பதின்படி நான் முண்டாசு கட்டிக் கொண்டேன்.

இதை வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்றுகிறேன் என்கிறார் கருணாநிதி. அவராகவே கட்டிக் கொண்ட முண்டாசு நீதி கேட்கத் தகுதியுடையது என்றால், நான் கட்டிக் கொண்ட முண்டாசுக்கு நீதி கேட்கத் தகுதி இல்லையா?

ஏழை, எளிய விவசாய உழைக்கும் மக்களுக்கு வேண்டியவனாக தெரிகின்ற நான், முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் வேடதாரியாக தெரிகிறேன் போலும் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X