For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிஎம் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

Harkishan singh
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் நீண்ட நாள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

92 வயதாகும் சுர்ஜீத், உடல் நலக்குறைவு காரணமாக நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த மருத்துவமனையில்தான் அவர் கடந்த ஐந்து ஆண்டுளாகவே சிகிச்சை பெற்று வந்தார்.

கடைசியாக ஜூலை7ம் தேதி அவர் மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வாரம் அவரதுநிலை மோசமானது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 1.32 மணியளவில் சுர்ஜீத்தின் உயிர் பிரிந்தது.

சுர்ஜீத் மரணச் செய்தியறிந்ததும், சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி, பிருந்தா காரத், நிலோத்பால் பாசு, எஸ்.ஆர். பிள்ளை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

சுர்ஜீத்தின் உடல் சிபிஎம் தலைமையகமான ஏ.கே. கோபால பவனுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சுர்ஜீத்தின் இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎம்-மை தோற்றுவித்தவர்

1916ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள புந்தலா கிராமத்தில் பிறந்தார் சுர்ஜீத். இளம் வயதில், பகத்சிங்கைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார்.

1936ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் 28 ஆண்டுகள் கழித்து 1964ம் ஆண்டு கட்சி உடைந்தபோது, நம்பூதிரிபாட், ஜோதிபாசு, ஏ.கே.கோபாலன், சுந்தரய்யா ஆகியோருடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்.

1992ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ந்து 13 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகித்தார். 2005ம் ஆண்டு பிரகாஷ் காரத் அப்பதவிக்கு வந்தார்.

வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் கோவையில் நடந்த 19வது சிபிஎம். காங்கிரஸின்போது பொலிட்பீரோ உறுப்பினர்கள் குழுவிலிருந்து சுர்ஜீத்தின் பெயர் நீக்கப்பட்டது. இருப்பினும் மத்திய குழுவின் சிறப்பு அழைப்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.

கிங் மேக்கர் என்ற பெருமைக்குரிய பெயரைப் பெற்றவர் சுர்ஜீத். தேசிய அரசியலில் மிகப் பெரிய பங்கு அவருக்கு இருந்தது. கூட்டணிகளை உருவாக்குவதில் சுர்ஜீத் மிகச் சிறந்து விளங்கினார். குறிப்பாக 2004ம் ஆண்டு லோக்சபாத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக சுர்ஜீத் முக்கிய காரணம் ஆவார். அதேபோல, 1996ல் ஐக்கிய முன்னணி அரசு அமையவும் சுர்ஜீத்தான் முக்கிய காரணம்.

1978ம் ஆண்டு முதல் 84 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்த சுர்ஜீத், பஞ்சாப் மாநில சட்டசபை உறுப்பினராக 2 முறை பதவி வகித்துள்ளார்.

பஞ்சாப் கிஷான் சபாவை உருவாக்கியவர்களில் சுர்ஜீத்தும் ஒருவர். அகில இந்திய கிஷான் சபாவின் பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஏராளமான நூல்களை எழுதியுள்ள சுர்ஜீத், காஷ்மீர் பிரச்சினை குறித்தும் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

சுர்ஜீத்துக்கு ப்ரீத்தம் கெளர் என்ற மனைவியும், இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

பிரதீபா பாட்டீல் இரங்கல்:

ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்தின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மிகச் சிறந்த தலைவர்களில் சுர்ஜீத்தும் ஒருவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச் சிறந்த தலைவர். அவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பு என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X