வறுமையின் கோரப் பிடியில் வாடும் வ.உ.சி வாரிசுகள்

Subscribe to Oneindia Tamil
V.O.Chidambaram
மதுரை: கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன்களும், பேத்தியும் வறுமையின் கோரப் பிடியில், மதுரை அருகே கோவில் வாசலில் காலம் தள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டுக்காக உயிர் நீத்த, உடமைகளை இழந்த எத்தனையோ தியாக சீலர்களில் வ.உ.சிதம்பரனாரும் ஒருவர். தனது சொத்துக்களையெல்லாம் விற்று கப்பல் வாங்கி தூத்துக்குடிக்கும், பம்பாய்க்கும் இடையே ஓட்டி வெள்ளைக்காரர்களை விதிர்க்க வைத்தவர் இந்த கப்பலோட்டிய தமிழன்.

கோவை சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைத்து கொடுமைக்குள்ளாக்கப்பட்டதால் இவருக்கு செக்கிழுத்த செம்மல் என்ற பெயரும் உண்டு. ஆனால் எல்லாம் பழம் கதையாகிப் போய் விட்டது. இன்று இவரது வாரிசுகள் ஆளுக்கு திசையில் சிதறிப் போய்க் கிடக்கிறார்கள். வ.உ.சியின் பேரன்களும், பேத்தியும் மதுரை அருகே கோவில் வாசலடியில் அடைக்கலம் புகுந்து, சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பெயிண்ட் அடித்தும், கூலி வேலை பார்த்தும் நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனாரின் மூத்த மகன் ஞானவடிவேல். இவருடைய பேரப் பிள்ளைகள்தான் (அதாவது வ.உ.சியின் கொள்ளுப் பேரக் குழந்தைகள்) தனலட்சுமி (52), சங்கரன் (46), ஆறுமுகம் (42), சோமசுந்தரம் (40). இவர்களுடைய சகோதரியான ஞானாம்பாள் சிறு வயதிலேயே இறந்து விட்டார்.

ஞானவடிவேலின் குழந்தைகள் அனைவரும் இளம் வயதில் தங்களது தந்தைக்குச் சொந்தமான வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். பின்னர் வ.உ.சி. குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இடையே சொத்துப் பிரச்சினை ஏற்படவே வ.உ.சியின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து அனைவரும் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி என்ற இடத்தில் அவர்கள் அடைக்கலம் புகுந்தனர். அப்போது சங்கரனுக்குத் திருமணமானது. அவர் மதுரைக்கு இடம் பெயர்ந்தார்.

சோமசுந்தரமும் கல்யாணமாகி மனைவியுடன் சென்று விட்டார். ஆறுமுகம் கட்டடம் ஒன்றில் பெயிண்டராக வேலை பார்த்தபோது கீழே விழுந்து மன நிலை பாதிக்கப்பட்டு விட்டது. அவருக்கு கல்யாணம் ஆகவில்லை. மூத்தவரான தனலட்சுமியை அவரது கணவர் கைவிட்டு விட்டார்.

இந்த நிலையில் தனலட்சுமியும், அவரது மன நிலை பாதித்த சகோதரர் ஆறுமுகம் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் சகோதரருடன் மதுரைக்கு வந்தார் தனலட்சுமி. அங்கு புதூர் அருகே உள்ள மூன்றுமாவடி என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார்.

ஞானவடிவேலுக்கு வந்து கொண்டிருந்த குடும்ப ஓய்வூதியம் மிக மிக குறைவாக இருந்ததால் வாடகையைக் கூட கட்ட முடியாத நிலை. சாப்பாட்டுக்கும் பெரிய பிரச்சினை.

இதையடுத்து வீட்டைக் காலி செய்து விட்டனர். அப்பகுதியில் உள்ள பாழடைந்த, யாரும் கேட்பாரற்ற நிலையில் உள்ள கட்டடங்களில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுடன் சங்கரனும் வந்து சேர்ந்து கொண்டார். தனலட்சுமி முறுக்கு உள்ளிட்டவற்றை விற்று வருகிறார்.

இதுதான் வ.உ.சி கொள்ளுப் பேரக் குழந்தைகளின் இன்றைய நிலை. தற்போது இவர்கள் தங்கியிருப்பது மூன்றுமாவடி கண்ணன்கருப்பன் ஆஞ்சநேயர் கோவில் வாசல்தான். இரவு நேரங்களில் அங்குதான் தங்கியிருக்கிறார்கள் கப்பலோட்டிய தமிழனின் வாரிசுகள்.

தங்களின் நிலையை விளக்கி மாநில அரசுக்கு இவர்கள் பலமுறை கோரிக்கைகள் அனுப்பியுள்ளனராம். ஆனால் எதற்குமே பலன் இல்லாமல் போய் விட்டது. இவர்களுக்கு ரேஷன் கார்டு கூட கிடையாதாம்.

இவர்களின் நிலை குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹரிடம் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆட்சித் தலைவர் ஜவஹரின் உத்தரவின் பேரில் மதுரை வடக்கு தாசில்தார் செலவராஜ் மூன்று மாவடி விரைந்தார்.

அவர் போன சமயத்தில் சங்கரன் மட்டுமே இருந்தார். அவரிடம் அனைத்து விவரங்களையும் செல்வராஜ் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து ஆட்சித் தலைவர் ஜவஹர் கூறுகையில், தங்க வீடு, நிரந்தர வேலை, ஒரு ரேஷன் கார்டு ஆகியவற்றை மட்டுமே தனலட்சுமி, சங்கரன், ஆறுமுகம் ஆகியோர் கேட்டுள்ளனர். அவர்களின் விருப்பம் அப்படியே நிறைவேற்றப்படும். அவர்களின் கோரிக்கைகளை தற்போது முதல்வரின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

உதவிகள் குவிகின்றன:

இதற்கிடையே, வ.உ.சியின் வாரிசுகளை தத்தெடுக்கப் போவதாக புதியநீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். அதேபோல மாநில காங்கிரஸ் கட்சியும் வ.உ.சியின் வாரிசுகளுக்கு உதவுவோம், கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளது. இதுதவிர பல்வேறு அமைப்புகள், தனி நபர்களும் வ.உ.சியின் வாரிசுகளுக்கு உதவிக் கரம் நீட்ட முன் வந்துள்ளனராம்.

சுதந்திரப் பயிர் உறுதியுடனும், ஊக்கத்துடனும் வளர உரமாக இருந்தவர்கள் வ.உ.சி.யைப் போன்ற மாபெரும் தீரர்கள். ஆனால் அவர்களின் வாரிசுகள் இன்று வறுமையின் பிடியில் சிக்கி விடுதலையாக முடியாமல் அவதிப்படுவது வெள்ளையர்களுக்கும் கூட அதிர்ச்சி தரும் விஷயமாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...