முன்னாள் எம்எல்ஏ மகன் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை உறுதி
மதுரை: மதுரை திமுக முன்னாள் எம்எல்ஏ மகன் கொலை வழக்கில் 2 பேருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை மதுரை உயர்நீதிமன்ற கிளை உறுதி செய்தது.
மதுரை நகர திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் ஹரீஸ்குமார். கடந்த 1998ம் ஆண்டு வீட்டில் இருந்த ஹரீஸ்குமார் கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில் வேலுச்சாமியின் உறவுப் பெண்ணை மோகன்குமார் என்பவர் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார். இந்த தகராறில் ஹரீஸ்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து மணிகண்டன், மலைச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், மணிகண்டன், மலைச்சாமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், சத்தியநாராயணன் ஆகியோர் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு கூறினர்.