பிரணாப் காரை மறித்து டி.ஆர்.எஸ். ரகளை
நிஜாமாபாத் (ஆந்திரா): ஆந்திர மாநிலம் நிஜமாபாத் வந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தொண்டர்கள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் டி.சீனிவாஸின் 60வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி நிஜாமாபாத் வந்தார்.
அப்போது அங்கு தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக கூறி அவர்கள் பிரணாப் முகர்ஜியை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் தலையிட்டு டி.ஆர்.எஸ். கட்சித் தொண்டர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். அப்போது சிலர் காயமடைந்ததால் பரபரப்பு கூடியது. பின்னர் நிலைமை சகஜமானது.
ஹைதராபாத்தில் வன்முறை ...
அதேபோல ஹைதராபாத்தில், விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராஜகோபாலின் வீட்டில் டி.ஆர்.எஸ். தொண்டர்கள் கல்வீசித் தாக்கியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
ராஜகோபால், பிரணாப் முகர்ஜியின் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரது கார் மோதி சில தொண்டர்கள் காயமடைந்ததாக செய்தி பரவியதால் இந்த சம்பவம் நடந்தது.