நொய்டாவில் மேலும் ஒரு நிறுவன அதிகாரி மீது தாக்குதல்
நொய்டா: சில தினங்களுக்கு முன் கிரேட்டர் நொய்டாவில் இத்தாலி நாட்டு நிறுவன தலைமை ெசயலதிகாரி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அமெரிக்க நிறுவன சிஇஓ ஒருவர் நொய்டா பகுதியில் மர்ம கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த எக்ஸ்பெடியன்ஸ் இ சொல்யூஷன்ஸ் இந்தியா லிட் என்ற ஐடி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார் கஷீர் த்விவேதி (37). அலுவலகத்துக்கு அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு வேலை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து சாய்பாபா கோவிலுக்கு புறப்பட்டார். வழியில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் இவரது காரை விரட்டி வந்தது. கஷீரின் காரை வழிமறித்துள்ளனர்.
காரில் இருந்து இறங்கி வந்த அந்த கும்பல், கஷீரை காரில் இருந்து வெளியே வரும்படி கூப்பிட்டுள்ளனர். இதனால் கஷீர் பீதியடைந்தார். அந்த கும்பல் கார் கதவை திறக்க முயன்றுள்ளது. அப்போது கார் கதவுகள் ஆட்டோமெட்டிகாக பூட்டிக்கொண்டன.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இரும்பு கம்பிகளால் கார் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்தது. காருக்குள் இருந்து கஷீரை தரதரவென வெளியே இழுத்து தள்ளியது.
பின்னர் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அவர்களது காருக்குள் அடைக்க முயன்றனர். காருக்குள் போகாமல் அவர்களோடு கஷீர் போராடினார். அவரது கூச்சலை கேட்டு அப்பகுதியினர் அங்கு குவிந்தனர்.
இதையடுத்து இரும்பு கம்பியால் கஷீரை பயங்கரமாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பியது. இதில் கஷீர் மயக்கமடைந்தார். தகவலறிந்த அவரது மனைவி மது, கஷீரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கஷீர் கூறுகையில், அலுவலகத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. யாருடனும் சண்டை இல்லை. நான் எதற்காக தாக்கப்பட்டேன் என்பது தெரியவில்லை. அலுவலகம் செல்லவே எனக்கு பயமாக இருக்கிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு இல்லை என்றார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த திங்கள் கிழமையன்று கிரேட்டர் நொய்டா பகுதியில் இத்தாலி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான லலித் கிஷோர் சௌத்ரி (47) என்பவர், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களால் கொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன் இப்போது மீண்டும் ஒரு சிஇஒ தாக்கப்பட்டுள்ளார்.