படம் எடுக்க கேமராமேனுக்கு அனுமதி மறுப்பு: வரதராஜனைச் சந்திக்காமல் திரும்பிய விஜய்காந்த்!

இதிலும் அரசியல் புகுந்து விளையாடுகிறதோ என்று வேதனையும், நோய்வாய்ப்பட்டுள்ள தலைவரைப் பார்க்க அனுமதி மறுப்பதா என கண்டனமும் தெரிவித்துள்ளார் விஜய்காந்த்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை முதலமைச்சர் கருணாநிதி நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
அதேபோல நேற்றிரவு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்பட 6 பேர் மருத்துவமனைக்கு சென்று வரதராஜனை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 11.45 மணிக்கு நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். வரதராஜனை சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி கேட்டார். அவருடன் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, தேர்தல் பிரிவு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக அலுவலக புகைப்படக்காரர் முத்துக்குமார் ஆகியோரும் சென்றனர்.
வாசலிலேயே ஸ்டாப்:
ஆனால் அவர்களை மருத்துவமனை வாசலிலேயே காவலாளி தடுத்துவிட்டதாகவும், வரதராஜனைப் பார்க்க உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. வேண்டுமானால் ஒருவர் மட்டும் செல்லலாம் என்று அவர் கூறினார்.
உடனே கொதித்துப்போன விஜய்காந்த், முதல்வருடன் மட்டும் 6,7 பேர் சென்று பார்க்க அனுமதித்தீர்களே என வாக்குவாதம் செய்துள்ளார்.
ஆனால் அதற்கெல்லாம் அசையாத மருத்துவமனை ஊழியர்கள் விஜய்காந்த ஒருவர் மட்டும் செல்ல அனுமதிப்பதாக்க் கூறியுள்ளார். வேறு வழியின்றி அதற்கு ஒப்பு கொண்ட விஜயகாந்த், தன்னுடன் புகைப்படக்காரரை மட்டுமாவது அழைத்துச் செல்ல அனுமதி கேட்டுள்ளார் (மாலைப் பத்திரிகைகளுக்கு புகைப்படம் தர!).
ஆனால் மருத்துவமனைக்குள் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்று காவலாளி மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த விஜய்காந்த் வரதராஜனைச் சந்திக்காமலேயே வீடு திரும்பி விட்டாராம்.
இதுகுறித்து பின்னர் பேசிய விஜய்காந்த், மருத்துவமனைக்குள் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போன்றவர்கள் நிறைய பேருடன் சென்றுதான் பார்த்துள்ளனர். புகைப்படமும் எடுத்துள்ளனர். ஆனால் எனக்கு மட்டும் ஏன் தடை? இதிலுமா அரசியல்? என கேள்வி எழுப்பியுள்ளார்.