For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையுடன் சேர்ந்து தமிழர்களைக் கொல்லும் இந்தியா: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

Jayalaitha
சென்னை: இலங்கை அரசுக்கு ஆயுதம், ரேடார், ராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி, அங்கு தமிழர்களைக் கொல்லும் இலங்கையின் இனப்படுகொலையில் இந்திய அரசும் முக்கியப் பங்குதாரராக செயல்பட்டு வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை இனப் பிரச்சினையில் ஜெயலலிதா இதுவரை தமிழர்களுக்கு சாதகமாக பகிரங்கமாக பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக இலங்கைத் தமிழர்களைக் கொல்ல இலங்கை அரசுக்கு ஆயுதப் பயிற்சி, ரேடார் கருவிகள், ஆயுதங்களை இந்திய அரசு வழங்கி, அங்கு இனப்படுகொலையை இலங்கை அரசுடன் சேர்ந்து நடத்தி வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து சமீபத்தில் சிபிஐ நடத்திய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அதிமுக அறிவித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அதிமுக வரவில்லை. இதனால் சலசலப்பு எழுந்தது.

இந்த நிலையில் இலங்கை விவகாரம் குறித்து ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

இலங்கையில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்திய மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை. இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதையெல்லாம் மத்திய அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக்கு உடந்தையாகவும் செயல்பட்டு வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக முக்கிய கட்சியாக இருந்தால், உடனடியாக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்க வேண்டும்.

ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக, தமிழக மீனவர்களுக்காக இப்படி ஒரு முடிவை கருணாநிதி எடுக்க மாட்டார். மாறாக, முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காக மட்டும் ஆதரவு வாபஸ் என்ற மிரட்டல் அஸ்திரத்தை அவர் பயன்படுத்துவார். தமிழர்களின் நலம், பாதுகாப்பு, நல்வாழ்வு என்று வரும்போது மட்டும் கருணாநிதி பேச்சிழந்து விடுவார்.

ஹரியானா மாநிலத்தில் 100 இலங்கை வீரர்களுக்கு ரகசிய ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவத்தின் அதி நவீன படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அளித்துள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.

ஒரு நாட்டுக்கு ஒரு நாடு ராணுவப் பயிற்சி, ஆயுதப் பயிற்சியை அளிப்பது சாதாரணமான விஷயம்தான். ஆனால் இலங்கை விவகாரம் முற்றிலும் வேறுபட்டது. இலங்கையில் யாரை குறி வைத்து போர் தொடுக்கப்பட்டுள்ளது?

தமிழர்களைக் குறி வைத்துத்தான் இலங்கை அரசு, தனது ராணுவத்தை முழுமையாக களம் இறக்கி விட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. விடுதலைப் புலிகளின் வீரர்களை மட்டும் குறி வைத்து இலங்கை படைகள் தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஒட்டுமொத்த படையும், அனைத்துத் தமிழர்களையும் எதிரிகளாக பாவித்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இலங்கை படைகளால் கொன்று குவிக்கப்படுகிறவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, அப்பாவித் தமிழ் மக்களும்தான் அதிகளவில் கொல்லப்படுகின்றனர்.

இந்திய அமைதி காக்கும் படையின் தவறான அணுகுமுறை, ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்துக்குப் பின்னர், இலங்கை இனப் பிரச்சினை உள்ளூர் பிரச்சினை என்ற முடிவுக்கு விட்டது இந்திய அரசு. இலங்கை விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற முடிவுக்கும் இந்திய அரசு வந்துள்ளது. ஆனால் அதே இந்திய அரசுதான், தற்போது இலங்கை படைகளுக்கு ஆதரவும், பயிற்சியும், ஆதரவும் அளித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுத சப்ளை செய்கிறது, ரேடார் கருவிகளை வழங்கி வருகிறு என்று செய்திகள் வெளியானவண்ணம் உள்ள போதிலும், அதை இந்திய அரசு இதுவரை திட்டவட்டமாக மறுக்கவில்லை. மேலும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும், பிரதமருக்கு நெருக்கமான உதவியாளர்களும் இலங்கைக்கு பயணம் செய்து வருவதையும் இந்திய அரசு மறுக்கவில்லை.

ஆனால் இலங்கை பாதுகாப்புப் படையினர் படு சுதந்திரமாக இந்தியாவுக்கு வருகின்றனர், பயிற்சியும் பெற்று வருகின்றனர். இதை மீடியாக்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்தியாவிடமிருந்து ஆயுதங்களையும், பயிற்சியையும் பெற்று, தமிழர்களைக் கொன்று குவிப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய மீனவர்களையும் அதே ஆயுதங்களால் கொன்று குவித்து வருகிறது இலங்கை படை.

சமீபத்தில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமான தீவு. இந்தத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டனர். இந்த விவகாரம் குறித்து இலங்கையிடம் பேசப்படும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

ஆனால் இதுவரை உருப்படியாக எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. என்ன ஒரு சோகம் இது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசையும், தமிழக அரசையும் கடுமையாக குறை கூறி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X