சிரஞ்சீவி கட்சிக்குத் தாவினார் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ
ஹைதராபாத்: விசாகப்பட்டனம் மாவட்டம் சோதாவரம் தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. காந்த சீனிவாச ராவ் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் அவர் இணையவுள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார் ராவ். தனது எம்.எல்.ஏ பதவியையையும் அவர் ராஜினாமா செய்து விட்டார்.
விலகல் குறித்து அவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பரிதவித்தேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
சந்திரபாபு நாயுடுவுடன் எனக்கு எந்தப் பிரச்சினையம் இல்லை. ஆனால் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுடன் என்னால் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக முடியவில்லை.
விரைவில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளேன் என்றார் ராவ்.
தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகி பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இணையவிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ராவ் தவிர, விசாகப்பட்டனம் மாவட்ட தெலுங்கு தேசம் தலைவர் ஜாகிர் அகமதுவும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். முன்னாள் எம்.எல்.ஏவான கானபாபுவும் கட்சியிலிருந்து விலகி வட்டார். அனைவரும் சிரஞ்சீவி கட்சியில் ஐக்கியமாகிறார்கள்.
ஏற்கனவே இதே மாவட்டத்தைச் ேசர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ரஹ்மான் கட்சியிலிருந்து விலகி சிரஞ்சீவி கட்சிக்குத் தாவினார். இப்போது எம்.எல்.ஏ உள்ளிட்ட 3 முக்கிய தலைவர்கள் விலகியுள்ளது தெலுங்கு தேசம் கட்சிக்கு பெருத்த அடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.