திருச்சி அருகே ஏரி உடைந்து வெள்ளம் - மாணவி பலி
திருச்சி: திருச்சி அருகே மழை காரணமாக ஏரி உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்துச் சென்ற மாணவி பரிதாபமாக இறந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அதிகாலை 1 மணிக்கு ஆரம்பித்த மழை காலை 4 மணிவரை இடைவிடாது பெய்து தள்ளியது. இந்த மழையால் உடைகுளம்புதூர் ஏரி நிரம்பி வழிந்தது. உபரி நீர் தோளூர்பட்டி ஏரிக்கு திரும்பியது. இந்த ஏரியும் நிரம்பியது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணிக்கு தோளூர்பட்டி ஏரியின் ஒருபகுதி சுமார் 50 அடி நீளத்துக்கு திடீரென்று உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து நீர் வேகமாக வெளியேறியது. பயிர் நிலங்களில் தண்ணீர் புகுந்ததில் சோளம், கடலை, கம்பு பயிர்கள் நீரில் மூழ்கின.
ஏரி உடைப்பால் தொட்டியம்-தோளூர்பட்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதித்துள்ளது. இதனால் தோளூர்பட்டி, மின்னத்தம்பட்டி, சஞ்சீவிபுரம், சிவந்திப்பட்டி, காமலாபுரம் ஆகிய பகுதிகள் போக்குவரத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவியும் பரிதாபமாக இறந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.