அனைத்துக் கட்சி கூட்டம்: பாஜகவும் புறக்கணிக்கிறது
சென்னை: ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பாஜக மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை ராணுவத்துக்கு துணை போகும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்த பயனும் இல்லை.
தனக்குள்ள அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மத்திய அரசு உடனடியாக தனது கடமையை செய்யும்படி வலியுறுத்துவதை விட்டுவிட்டு அனைத்து கட்சி கூட்டம் மூலம் எந்த தீர்மானம் நிறைவேறினாலும் அது ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் தராது.
ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் பாஜக உறுதியுடன் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
எனினும் செயல்படாத மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று மாநில உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பங்கேற்போம்-திருநாவுக்கரசர்:
அதேசமயம், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பியான திருநாவுக்கரசர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பாஜகவின் நிலை குழப்பமாக உள்ளது.