வெளிநாட்டு மாணவிகளை காரில் துரத்திய கும்பல் கைது
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவிகளை காரில் துரத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த மாணவி முசாபிமரியா என்ற மாரி ஜோஸி (22). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் கழகத்தில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோழிகளான கிளாரி (22), ஹோப் (22) ஆகியோருடன் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்கு அருகில் ஐந்து வாலிபர்களும் சாப்பிட்டனர். பின்னர் அந்த வாலிபர்கள் மாணவி மாரி ஜோஸியிடம் பேச்சுக் கொடுத்தனர். அவரும் அந்த வாலிபர்களிடம் நட்பாக பேசினார்.
சாப்பிட்டு முடித்த மாரிஜோஸி மற்றும் அவரது தோழிகள் 2 பேர் ஆட்டோவில் முத்தையா நகரில் உள்ள தங்களது வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற ஆட்டோவில் அந்த ஐந்து வாலிபர்களும் காரில் பின் தொடர்ந்தனர்.
நடராஜபுரம் அருகே சாலையின் குறுக்கே காரை நிறுத்தி ஆட்டோவை மறித்தனர். இதை பார்த்து மாணவிகள் 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அட்ரஸ், போன் நம்பர்களை கேட்டு மாணவிகளை வாலிபர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன மாணவிகள் 3 பேரும் தப்பி ஓடினர். பின்னர் தங்களது நாட்டை சேர்ந்த மோசஸ் முரோரி என்பவரிடம் சம்பவத்தை கூறினார்கள்.
இதையடுத்து மோசஸ் முரோரி தனது நண்பர்களுடன் சென்று அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்களில் ஒருவர் மோசஸலை கல்லால் தாக்கினார்.
சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்தனர். இதை பார்த்த வாலிபர்கள் காரை அங்கேயே விட்டு தப்பி ஓடின. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரையும் காருக்குள் இருந்த சிறிய ரக துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஐந்து பேரில் (34), மணிகண்டன் (35), இளையராஜா (29) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். சிசுபாலன் அண்ணாமலை பல்கலையில் பிசியோ தெரபிஸ்ட்டாக பணியாற்றுகிறார்.
தப்பியோடிய செந்தில்பிள்ளை, அர்ச்சுனனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சிதம்பரம் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.