For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக எதிர்ப்பு அலை: இலங்கை அரசு பதற்றம்-சிவாஜிலிங்கம்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் எழுந்துள்ள அலை அந் நாட்டு அரசுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந் நாட்டு தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறினார்.

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் ராமேஸ்வரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் சிங்கள அரசால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

ஆனாலும் இதற்கு இலங்கை அரசு கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் தொடர்ந்து தமிழர்களை படுகொலை செய்து வருகிறது. இதற்கு சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு தரும் தைரியமே காரணம்.

எனவே இந்திய அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் உள்ள மக்களுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை அனுப்பி வைத்து ஐ.நா.சபை மேற்பார்வையில் அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ள இந்த எதிர்ப்பு அலை ராஜபக்சே அரசுக்கு அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புலிகள் மீதான தடையை நீக்க ஆலோசனை செய்வதாக மத்திய அரசு கூறினாலே போதும், இலங்கை அதிபர் ராஜபக்சே உடனடியாக டெல்லிக்கு ஓடி வந்து பிரச்சனைக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுப்பார்.

இலங்கை இந்தியாவின் மாநிலம் கிடையாது. இது உள்நாட்டு பிரச்சினை. இதில் இந்திய அரசு தலையிடுவது நியாயம் இல்லை என்று இலங்கை அமைச்சர் கூறுகிறார்.

2000ம் ஆண்டு யாழ்குடா பகுதியில் புலிகள் ஊடுருவி இலங்கை ராணுவ முகாமை கைப்பற்ற முயற்சி எடுத்தனர். அப்போது 40,000 வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தவுடன் வாஜ்பாய் தலைமையில் இருந்த இந்திய அரசிடம் அப்போதைய அதிபர் சந்திரிகா உதவி கோரியதை நினைத்து பார்க்க வேண்டும்.

இலங்கையில் கதிர்காமம் அம்மாந்தோட்டை பகுதியில் ரூ.11 கோடி செலவில் சீனா உதவியுடன் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இது அமைக்கப்பட்டால் ஈரானிலிருந்து சீனாவுக்கு எண்ணை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அந்த வழியாக செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறை ஏற்படுத்தும்.

இந்திய எதிர்ப்பு நாடுகளிடம் உறவு வைத்துள்ள இலங்கையிடம் இந்திய அரசு கவனமாக இருக்க வேண்டும்.

இலங்கையில் நடக்கும் போரில் ராணுவ தரப்பில் ஏற்பட்ட சேதத்தை கூறாமல் விடுதலைப் புலிகளை கொன்றது குறித்த செய்திக்கே அங்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம்தான் இலங்கையில் போரை நிறுத்த முடியுமே தவிர எந்த ஒரு காலகட்டத்திலும் இலங்கை அரசால் புலிகளை தோற்கடிக்க முடியாது.

தமிழ் ஈழம் கிடைத்தால் மீனவர்களுக்கு உயிர்ப்பலியே ஏற்படாது. இதற்கு உடனடியாக தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திராவிடர் கழகம் தீர்மானம்:

இதற்கிடையே திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழர்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை நிறுத்தாமலும், பாதிப்புக்கு ஆளாகிவரும் ஈழத் தமிழர்களுக்கு தேவையான நியாயமான உதவி கிடைக்காமல் போகும் நிலை ஏற்படுமாயின், அதற்கு அடுத்தக்கட்ட, கடுமையான நேரடி நடவடிக்கையில் ஈடுபடவும் மத்திய அரசு சற்றும் தயங்கக் கூடாது.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பது திராவிடர் கழக கொள்கைக்கு எதிரானது என்றாலும், பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருமானம் ரூ.21/2 லட்சத்தில் இருந்து ரூ.41/2 லட்சம் வரை உயர்த்தியதற்காக மத்திய அரசுக்கு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறது. அதே போல், தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.11/2 லட்சம் என்று இருந்து வரும் வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X