For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ- வைகோவுக்கு கருணாநிதி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பச்சைப் பொய்யை அடுக்கி அறிக்கை வெளியிடுவதையே தொழிலாகக் கொண்டவருக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

கேள்வி: ஜெயலலிதா ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,000 விலை நிர்ணயிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறாரே?

பதில்: ரூ. 2,000 என்று விலை நிர்ணயம் செய்திருந்தால், மூவாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருப்பார். அது தானே எதிர்க்கட்சியின் இலக்கணம்!.

கேள்வி: அப்படியென்றால் ஆளுங்கட்சியின் இலக்கணம் என்ன?

பதில்: எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளில் நியாயம் இருந்தால் அவற்றை நிறைவேற்றுவது தான் ஆளுங்கட்சியின் இலக்கணம். உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சாரக் கட்டணத்தில் ஏழைகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் ஒரு சிறு உயர்வு விதிக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் அதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த அதே நாளில் அதுபற்றி விவாதித்து, அந்த சிறு கட்டண உயர்வையும் ரத்து செய்தது தான் திமுக அரசு.

கேள்வி: வைகோ சிறையிலே இருப்பதைக் கொச்சைப்படுத்துகின்ற வகையில் ஏதோ செய்தி வெளி வந்ததாகக் கூறி, தங்களைக் குற்றம்சாட்டி அதற்கு மறுப்பு ஒன்று மதிமுக சார்பில் வெளிவந்துள்ளதே?

பதில்: பச்சைப் பொய்யை அடுக்கி அறிக்கை வெளியிடுவதையே தொழிலாகக் கொண்டவருக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்?. அவர்களுக்கு சிறையில் கொடுக்கப்பட்டுள்ள முதல் வகுப்புக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்படும், எத்தகைய வசதிகள் செய்யப்படும் என்பது இவருக்கு மட்டுமல்ல- பொதுவாக எல்லா முதல் வகுப்புக் கைதிகளுக்கும் வழங்கப்படுகின்ற பொருட்களைத் தான் ஒருவேளை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருப்பார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு இவர் அரசுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் அவப் பெயர் உண்டாக்க ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார், அவ்வளவு தான்!

இவரோடு கைது செய்யப்பட்ட கண்ணப்பனுக்கு உடல் நலக் குறைவு என்றதும், அவரை மருத்துவர்களைக் கொண்டு சோதனை செய்யச் செய்து மருத்துவர்களின் அபிப்பிராயத்தைப் பெற்ற பிறகு காரிலோ, பேருந்திலோ, வேனிலோ, ரெயிலிலோ அவர் பயணம் செய்ய வேண்டாமென்று கோவையிலிருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார் என்பதை இதயம் உள்ளவர்களாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.

கேள்வி: வைகோ கைதானதைக் கண்டித்து டெல்லி மாநிலங்கள் அவையில் அதிமுக வெளிநடப்பு செய்ததைப் பற்றி?

பதில்: விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், நான் ஆட்சியிலே இருந்திருந்தால் அவர்கள் எல்லாம் அப்படிப் பேசியிருப்பார்களா?. நான் உடனடியாக கைது செய்திருப்பேனே என்றெல்லாம் அங்கலாய்த்து முதன் முதலாக அறிக்கை விட்டவரே ஜெயலலிதா தான்!. அவர் பேச்சை ஆதரிக்காமல் அவர் தலைமையில் உள்ள கட்சியினர் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்திருப்பது வேடிக்கை தான்.

கேள்வி: கொடுங்கையூரில் பிரதமர் ராஜீவ் காந்தி சிலையைச் சேதப்படுத்தியதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: இது கடுமையான குற்றம். தண்டிக்கத்தக்கது. தலைவர்களின் சிலைகளை உடைப்பவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யவும், குண்டர் சட்டத்தில் வழக்கு தொடரவும் காவல் துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி தங்கள் கடமையை அவர்கள் செய்யும் அதே நேரத்தில் யாரோ சில சமூக விரோதிகள் திட்டமிட்டு வேண்டுமென்றே ரரஜிவ் காந்தி சிலையை உடைத்திருக்கக் கூடும் என்று நினைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் காங்கிரசுக்கும் கழகத்திற்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படாதா என்று விஷமிகள் சிலர் தமிழ்நாட்டில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முகமூடி கிழியும் நாள் விரைவில் வரும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X