For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவிலிருந்து அவர்களாகவே நீக்கட்டும்-எஸ்விசேகர்

By Staff
Google Oneindia Tamil News

SV Sekar
-ஷங்கர்

சென்னை: அதிமுகவில் இருந்துகொண்டு ஜெயலலிதாவின் அதிருப்திக்கு ஆளாவதைவிட, ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவனாக வெளியிலிருப்பதையே விரும்புகிறேன் என்று அதிமுக எம்எல்ஏ எஸ்வி.சேகர் கூறினார்.

நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். ஜெயலலிதாவை நேரடியாகச் சந்தித்துப் பேசக் கூடியவர் என்ற அளவுக்கு செல்வாக்குடன் திகழ்ந்த சேகர், சில மாதங்களாக கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்படுவதாக பேச்சு நிலவுகிறது.

அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்றும், கட்சியிலிருந்து விலகப் போகிறார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் சேகரை நீக்குவது பற்றி, கட்சியில் அவரது நிலை என்ன என்பது குறித்தோ அதிமுக தலைமை தொடர்ந்து மெளனம் சாதிக்கிறது.

இந் நிலையில் நேற்று தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த எஸ்விசேகர், இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதிக்கு தனது பங்களிப்பாக ரூ.25,000த்தை வழங்கினார்.

இந்நிலையில் தனது அரசியல் நிலைப்பாடு தட்ஸ்தமிழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

முதல்வரைச் சந்தித்து நிதியளித்திருப்பது உங்கள் கட்சித் தலைவரின் உத்தரவை மீறியதாகாதா?

இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு உதவ முதல்வர் கருணாநிதியை சந்தித்து நிதி கொடுத்தேன். தீவிரவாதம், வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளவன் நான். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நான் நிதி அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு தமிழன் என்ற முறையில் நான் அளித்த நிதியை முதல்வர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

ஒரு கட்சியிலிருப்பவர்கள் அடுத்த கட்சிக்காரர்களுடன் பேசிக் கொள்ளவே கூடாதா...இன்றைக்கு அரசின் பல்வேறு நிலைக் குழுக்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே மாட்டார்களா... இது குழந்தைத்தனமாக உள்ளது. இதில் உத்தரவை மீறுதல் எங்கே வந்தது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதல்வரைச் சந்தித்து என் பங்களிப்பைக் கொடுத்தேன். அவ்வளவுதான். உடனே இதை வைத்து நான் திமுகவில் சேரப் போவதாக யாரும் நினைக்க வேண்டாம்.

அதிமுகவில் உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்சினை...?

ஜெயலலிதாவுடன் எனக்கிருந்த நேரடித் தொடர்பு சிலருக்குப் பிடிக்கவில்லை. அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ஒரு குறிப்பிட்ட அதிகார மட்டத்தைத் தாண்டி, நான் செல்வாக்குடன் வளைய வருவது சிலருக்குப் பிடிக்கவில்லை.

கட்சியில் உறுப்பினராக சேருவதற்கு முன்பு வரை 25 தடவையாவது ஜெயலலிதாவை நான் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்த அளவு எனக்கு சுதந்திரமும், செல்வாக்கும் இருந்தது. ஆனால் அதிமுகவில் சேர்ந்து எம்எல்ஏவான பிறகு ஐந்தாறு முறைகூட ஜெயலலிதாவைச் சந்திக்க முடியவில்லை. சந்திக்க விடுவதில்லை. நானும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு 15 கடிதங்களுக்கும் மேல் எழுதிவிட்டேன். ஆனால் எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. அதிமுக தலைமை கழகத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் எனக்கு அனுப்பப்படுவதுமில்லை. நான் ஓரம் கட்டப்படுகிறேன்.

இதைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அரசியலில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விலை கொடுக்கின்றனர். என்னுடைய விலை என் சுயமரியாதை. அந்த விலையை நான் தர விரும்பவில்லை.

எதற்கு இப்படி கஷ்டப்பட வேண்டும்... கட்சிக்குள் இருந்து கொண்டே ஜெயலலிதாவின் அதிருப்திக்கு ஆளாவதை விட, கட்சிக்கு வெளியே பழையபடி ஜெயலலிதாவின் அன்புக்குப் பாத்திரமானவனாக நீடிப்பதையே நான் விரும்புகிறேன்.

சுயேட்சையாக நின்று தோற்ற நீங்கள் எம்எல்ஏவாக இருப்பது அதிமுகவால்தானே?

இருக்கலாம். ஆனால் நான் சுயேச்சையாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது 1,400 ஓட்டுக்கள் பெற்றேன். அதிமுக சார்பில் போட்டியிட்ட போது நான் பெற்ற ஓட்டு 62,794. எனக்கும் நெப்போலியனுக்கும் இருந்த ஓட்டு வித்தியாசம் வெறும் 1,200 ஓட்டுக்கள்தான். அதிமுக என்ற கட்சியின் வாக்கு எனக்குக் கிடைத்தாலும், என் வெற்றியைத் தீர்மானித்தது அந்த 1,200 வாக்குகள்தான். அது என் சொந்த பலம். தேர்தலில் ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் வெற்றிதானே!

இவ்வளவு கஷ்டப்படுவதற்கு நீங்கள் பதவி விலகிவிடலாமே...?

அப்படிச் செய்ய மாட்டேன். நான் மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குபவன். அவர்கள் ஓட்டு வேண்டும் என்றுதான் வீதிவீதியாக வலம் வந்தோம். இப்போது அரசியல் காரணங்களுக்காக ஓட்டுப் போட்ட மக்களை நான் அவமதிக்க முடியாது. நான் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அதை ஜெயலலிதாவே அறிவிக்கட்டும். நானாக ராஜினாமா செய்ய மாட்டேன்.

உங்கள் அடுத்த கட்ட முயற்சி என்ன?

எனக்கு விதி மீது ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அடுத்த தேர்தலில் நான் டெல்லிக்குப் போவேன் (எம்பி ஆவேன்). அதற்கு யார் மூலம் எனக்கு டிக்கெட் கிடைக்கும் என்பதை காலம் சொல்லும். காரணம் யார் எப்போது எந்த உயரத்துக்குப் போவார்கள் என்று இப்போது சொல்ல முடியாது.

இந்த அரசியல் நெருக்கடிகள் உங்கள் கலையுலக வாழ்க்கையை எந்தளவு பாதித்துள்ளது?

என் கலையுலக பயணம் ரொம்ப தெளிவானது. அதில் ஒருபோதும் பாதிப்பு வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு தன்னம்பிக்கை மிக அதிகம். நானும் ஒரு போராளிதான். வேண்டுமானால் 'ஷத்திரிய பிராமணன்' என்று வைத்துக் கொள்ளுங்களேன். எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல, If God be with us who can defeat us!, என்றார் இப்போதும் தன்னை அதிமுக எம்எல்ஏ என்றே சொல்லிக் கொள்ளும் எஸ்வி சேகர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X