For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக காவல்துறைக்கே அவமானம்-சரத்குமார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திருமங்கலம் இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் வரவழைக்கப்படுவது தமிழக காவல்துறைக்கே அவமானம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக காவல்துறை நடுநிலையோடு நடந்து கொள்ளாமல் தங்கள் கடமையை செய்யத் தவறுகின்றனர் என்பதை உண்மை என்று ஒத்துக் கொள்வதால்தான், தேர்தல் ஆணையம், துணை ராணுவத்தை கொண்டு திருமங்கலம் இடைத் தேர்தலை நடத்த முடிவு செய்திருக்கிறது.

எனவே காவல்துறையை வழிநடத்தும் முதல்வர் தனது நிர்வாக செயல்பாட்டில் தோற்றுவிட்டார் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

1965ம் ஆண்டு மொழிப்போராட்டத்திற்கு பிறகு 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பிற்காக கலவரத்தை அடக்கிட ராணுவம் வந்தது. ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகரான திறமைபடைத்த தமிழக காவல்துறையால், தற்போது ஒரே ஒரு தொகுதியில் நேர்மையாக நடத்திட இயலாத நிலை ஏற்பட்டு, துணை ராணுவம் வரவேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை உருவாகியுள்ளது.

இந்த தலைக்குனிவு அரசின் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல. பாரம்பரியமிக்க பெருமை கொண்ட தமிழக காவல்துறைக்கும்தான்.

இது ஒரு வரலாற்று அவமானம். இதற்கெல்லாம் திருமங்கலம் மக்கள் தங்களின் வாக்குகள் வாயிலாக பதிலளிப்பார்கள் என்று கூறியுள்ளார் சரத்.

தடுக்கும் போலீஸ்- தேமுதிக புகார்:

இதற்கிடையே திருமங்கலம் தொகுதியில் தங்களது கட்சியினரை பிரச்சாரம் செய்ய விடாமல் போலீசார் தடுப்பதாக அக்கட்சியினர், தேர்தல் பார்வையாளர் சுனில்குமார் குஜூரிடம் புகார் அளித்துள்ளனர்,

மாஜி மந்திரி கு.ப.கிருஷ்ணன் தலைமையில் சுனில்குமாரை சந்தித்து அவர்கள் அளித்த மனுவில்,

திருமங்கலத்தில் வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் பல இடங்களில் உள்ளன. போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஓட்டுப் பதிவுக்கு முன் போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கட்சியினரை பிரச்சாரம் செய்ய விடாமல் போலீசார் தடுக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கு.ப.கி,

ஓட்டுப் பதிவுக்கு 10 நாட்களிருக்கும் நிலையில், தொகுதி முழுவதும் வன்முறை தலை விரித்தாடுகிறது. ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் பணத்தை வாரி இறைக்கின்றன. இதே நிலையில் தேர்தல் நடத்தினால், ஜனநாயகம் ஜெயிக்காது.

எனவே, தொகுதியை துணை ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மேலும், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர் வைகோ போன்றவர்கள், இரவு குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதிக்கின்றனர். ஆனால், தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதாவை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே முடிக்கும்படி வற்புறுத்துகின்றனர். நேரம் ஒதுக்குவதில் கூட போலீசார் பாரபட்சம் காட்டுகின்றனர் என்றார்.

பயந்த ராமராஜன்.. லேட்டாக வந்தார்:

இதற்கிடையே அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக செக்கானூரணி பகுதியில் நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்ய மாலை 4.45 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் நேரத்துக்கு வரவில்லை.

இரண்டு மணி நேரம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு வந்தார். அந்தநேரத்தில் திமுக சார்பில் செக்கானூரணியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

எனவே போலீசார் ராமராஜனுக்கு அனுமதி மறுத்து, பொதுக்கூட்ட மேடை உள்ள பகுதியை தவிர்த்துவிட்டு வேறு பாதையில் திருப்பி விட்டனர்.

சிறிதுநேரம் வாக்குவாதம் செய்துவிட்டு கிளம்பிய ராமராஜன், கொக்குளம், பாறைப்பட்டி, தேன்கல்பட்டியில் பிரசாரம் செய்து விட்டு மீண்டும் செக்கானூரணி வந்து பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக கடந்த 29ம் தேதி எலியார்பத்தி அருகே ராமராஜனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பாதுகாப்பு கருதி செக்கானூரணி பகுதிக்கு வர ராமராஜன் முதலில் தயங்கினார்.

''ஒன்னும் ஆகாது அண்ணே'' என்று அவருக்கு தைரியமூட்டி மதுரையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரவே மிகவும் காலதாமதமாகிவிட்டதாக சொல்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X