For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் பஸ்கள் மீது தொடர்ந்து தாக்குதல்: பயணிகள் பீதி-அவதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Attack on buses
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 4 நாளாக சென்னை அருகே மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பஸ் எரிப்பு, பஸ்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

கோயம்பேட்டில் பஸ் எரிப்பு:

சென்னையில் நேற்றிரவு கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்லும் (எம்.70) அரசு பஸ் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவு 11 மணியளவில் இந்த பஸ்சில் ஏறிய ஒரு கும்பல் இருக்கைகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடிவிட்டது.

பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே குதித்து உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 65வது வட்ட அமைப்பாளர் வெற்றி செல்வன், இளங்கோ, கொளஞ்சி, ரமேஷ், சேகர், சுந்தரம், சங்கர், ராஜ்குமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கல்வீச்சு-கண்ணாடி உடைப்பு:

அதே போல தாம்பரத்திலிருந்து கோயம்பேடு வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது விருகம்பாக்கம் அருகே கல் வீச்சு நடந்தது. இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் விடிய விடிய ரோந்து சுற்றி வந்தனர். இன்றும் பஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் அருகே 2 பஸ்கள் எரிப்பு:

இதற்கிடையே திண்டிவனத்தையடுத்த வானூர் அருகே நேற்று பிற்பகலில் அரசு பஸ் நல்லாவூர் என்ற இடத்தில் 20 பேரால் வழி மறிக்கப்பட்டது. பயணிகளை இறங்க சொன்ன அந்தக் கும்பல் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு ஓடிவிட்டது.

இதி்ல் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. இது தொடர்பாக கிளியனூரை சேர்ந்த தணிகைவேல், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், நல்லாவூரை சேர்ந்த பழனி, மகாலிங்கம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் வானூர் அருகே குன்னம் கிராமத்திலிருந்து திண்டிவனத்திற்கு சென்ற அரசு பஸ் ஆதங்கப்பட்டு அருகே முகமூடி அணிந்த 20 பேரால் வழிமறிக்கப்பட்டது. அந்தக் கும்பல் பஸ் மீது சரமாரியாக கல் வீசித் தாக்கியது.

இதில் டிரைவர் ஏழுமலையின் மண்டை உடைந்தது. பின்னர் பஸ்சில் ஏறிய அந்தக் கும்பல் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடியது. அந்த பஸ்சும் முழுவதும் எரிந்து போனது.

இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நள்ளிரவில் திண்டிவனம் அரசு போக்குவரத்துக்கழக பஸ் டெப்போவில் நிறுத்தி வைத்திருந்த டவுன் பஸ்சுக்கு ஒரு கும்பல் தீயிட்டுவிட்டு ஓடிவிட்டது.

கடலூர்-இரவு நேர பஸ்கள் நிறுத்தம்:

அதே போல நேற்றிரவு கடலூர் சேப்னாநத்தம் அருகே அரசு பஸ் கல்வீச்சு நடந்தது. இதில் கண்ணாடி நொறுங்கியது. குள்ளஞ்சாவடி உள்பட 3 இடங்களிலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பஸ்கள் தாக்கப்படுவதால் நேற்றிரவு 3வது நாளாக கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

தொலைதூர பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. முக்கிய வழித் தடங்களில் 5 பஸ்கள் சேர்த்து அனுப்பப்பட்டன. சென்றன. அவற்றுக்கு முன்னும் பின்னும் போலீஸ் வேன்கள் பாதுகாப்பாக சென்றன.

புதுவையிலும்...:

புதுவையிலும் நேற்று பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. விழுப்புரத்திலிருந்து புதுவை சென்ற தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் உழவர்கரை அருகே 10க்கும் மேற்பட்ட கும்பலால் வழிமறிக்கப்பட்டன.

பின்னர் அந்தக் கும்பல் உருட்டுக் கட்டைகளால் கண்ணாடிகளை உடைத்தது. பஸ்களில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.

அதே போல வில்லியனூர் ரயில்வே கேட் அருகே 15க்கும் மேற்பட்ட கும்பல் அந்த வழியாக வந்த பஸ், கார்களை அடித்து நொறுக்கியது.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த கும்பல் ஓடிவிட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக உத்தரவாகினி பேட் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். 20 பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

இதனால் புதுவை கிராமப் பகுதியிலும் நேற்றிரரவு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இன்று காலை 10.10 மணியளவில் புதுச்சேரியில் இருந்து மரக்காணம், சூனாம்பேடு, மதுராந்தகம் வழியாக சென்னைக்கு செல்லும் அரசு பஸ் கொள்ளுமேடு என்ற இடத்திற்கு வந்தபோது ஒரு கும்பல் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள்:

இதனால் திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டையிலிருந்து சென்று கொண்டிருந்த டவுன் பஸ் மீது இன்று காலை ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.

சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை-கடலூர் இடையே ஐந்தைந்து பஸ்களாக போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.

மதுரையில் இரவில் பஸ்கள் நிறுத்தம்:

மதுரையில் கடந்த 2 நாட்களில் 29 பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக அம்பேத்கார், ரகுபதி, மாயாண்டி, தமிழ் அழகன், இனியன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளளனர். 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் இரவு நேர பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. புறநகர் பகுதிகளான அவனியாபுரம், பெருங்குடி, சத்திரப்பட்டி, அழகர்கோவில், கள்ளந்திரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நேற்று இரவு 7 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டு இன்று காலை 7 மணிக்கு மேல்தான் பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் நிலையங்களை இணைக்கும் நகர் பஸ்கள் 11 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டன.

தர்மபுரியில்...

தர்மபுரி மாவட்டம் தண்டுகாரன்பட்டியில் அரசு டவுன் பஸ் (5-சி) பயணிகளை இறக்கிவிட நின்றது. அப்போது 6 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டைகளுடன் வந்து 2 பஸ்களின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்துவிட்டு ஓடிவிட்டது.

கோவையிலும்....

கோவையில் நேற்று இரவு 3 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கோவை உக்கடத்தில் இருந்து காளப்பட்டிக்கு சென்ற பஸ் காந்திபுரம் 100 அடி ரோடு சிக்னல் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு தப்பினர்.

காந்திபுரத்தில் இருந்து கோவனூருக்கு சென்ற பஸ் மீது சுங்கம் பகுதியில் வைத்தும், காந்திபுரத்தில் இருந்து பாலத்துரை சென்ற பஸ் மீது அரசு மருத்துவமனை அருகில் வைத்தும் கல்வீசி தாக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X