For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தவன் சீட்டில் ரம்மி ஆடி தோற்ற அதிமுக - துரைமுருகன் நக்கல்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சீட்டாட்டத்தில் சிலர் அடுத்தவர்களின் சீட்டை வாங்கி விளையாடி தோற்பது போல் திருமங்கலம் தொகுதியில் மதிமுகவுக்கு பதிலாக தேர்தலில் போட்டியிட்டு அதிமுக படு தோல்வி அடைந்து விட்டது என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மாலை விவாதம் நடந்தது.

ஆர்.கே. நகர் அதிமுக எம்எல்ஏ சேகர்பாபு கூறுகையில்,

திருமங்கலத்தில் ஜனநாயகத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, மக்களுக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தி விட்டீர்கள்.

சமீபகாலமாக ஆசிரியர் தேர்வு நடத்தப்படவில்லை. அதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் கடும் நிதி நெருக்கடிக்கு இடையில் ஜெயலலிதா அரசு 62 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்தது.

கடந்த ஒருமாதமாக வேலூர், கோவையில் கேபிள் டி.வி. கழகத்தின் வயர்கள் அறுக்கப்படுகின்றன. இதுபற்றி போலீசில் தரப்பட்ட புகாருக்கு எந்த பதிலும் இல்லை.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்திக்க வந்த ஆபரேட்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பிரிட்ஜ் இருந்த இடத்தில் பானை; கிரைண்டர் இருந்த இடத்தில் உலக்கையும் உரலும்; மிக்ஸி இருந்த இடத்தில் அம்மி; மின்சார விசிறி இருந்த இடத்தில் கை விசிறிதான் உள்ளது. இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று கேட்டால், மாண்புமிகு அம்மா இருந்த இடத்தில் நீங்கள் இருப்பதால்தான் என்றார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பணி நியமனத் தடைச் சட்டம் கொண்டு வந்து யாரையும் நியமிக்காமல் இருந்தது. கல்லூரிகளில் கூலிக்கு ஆள் எடுப்பது போல கெஸ்ட் லெக்சர்' என்ற பெயரில் நியமனம் செய்தனரே தவிர நிரந்தரமாக நியமிக்கவில்லை என்றார்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், முதல்வரை சந்திக்க கோவை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நேரம், தேதி கேட்காமல் அவர்களாகவே சென்னைக்கு வந்தார்கள். அவர்களை போலீசார் திருமண மண்டபத்தில் கொண்டு வந்து கவுரவமாக நடத்தி சாப்பாடு கொடுத்தனர்.

அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றோம். அதில் உள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தோம். அதன் பின்னர் அவர்கள் மகிழ்ச்சியாக திரும்பிச் சென்றனர்.

வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க முன்வந்தால் சிறு தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள 20 சதவீத மின்வெட்டை ரத்து செய்ய அரசு தயாராக இருக்கிறோம். பெரிய தொழிற்சாலைகளுக்கு 10 சதவீதம் குறைக்கத் தயார். அவர்கள் ஒத்துக் கொண்டால் ஓரிரு நாட்களிலேயே அமல்படுத்த நாங்கள் தயார் என்றார் ஆற்காடு வீராசாமி.

மதிமுகவைச் சேர்ந்த கம்பம் ராமகிருஷ்ணன் கூறுகையில்,

இலங்கை போர் நிறுத்தத்திற்காக சாஸ்திரி பவனில் தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும்.

முல்லைபெரியாறு அணையை பார்வையிட வந்த பாராளுமன்ற நிலைக்குழுவை தமிழக அரசு ஏன் தடுக்கவில்லை?

தேர்தல் வரலாம் போகலாம். குறிப்பிட்ட கட்சிகள் வெற்றி பெறலாம். ஆனால் ஜனநாயகம் தோற்று விடக் கூடாது.

திருமங்கலத்தில் அதிமுக எம்எல்ஏ சாமி கடுமையாகத் தாக்கப்பட்டார்.

பால்வடியும் முகம், பச்சைத் தமிழன், மனச்சாட்சியுடன் பேசுபவர் என்றெல்லாம் முதல்-அமைச்சர் கருணாநிதியால் வர்ணிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது.

அதற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,

பாராளுமன்ற நிலைக்குழு வருவதை தடுக்க முடியாது. ஆனால் ஆட்சேபனை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். அவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

சீட்டு விளையாட்டில் ரம்மி ஆடும் போது, ரம்மி சேரா விட்டால் கார்டுகளை கவிழ்த்து விட்டு சிலர் அடுத்தவன் கார்டை வாங்கி ஆடுவார்கள். ஆனால் ஒழுங்காக ஆடாமல் அவர்களுக்கு அவுட்டாக்கி விடுவார்கள். அதுதான் அவர்களுக்கு திருமங்கலத்தில் நடந்தது.

இத்தனை நாட்கள் சட்டசபையில் அ.தி.மு.க.வினர் யாரும் சாமி பற்றி பேசவில்லை. ஆனால் இவர் வக்காலத்து வாங்குகிறார். எனவே அதில் உண்மை இருப்பதுபோல் தெரியவில்லை என்றார் துரைமுருகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X