For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசை விளாசிய எம்.பிக்கள்

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு செயல்பட்டு வரும் மகா அமைதியான போக்குக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள், பாஜக, பிஜூ ஜனதாதளக் கட்சிகளின் எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் இலங்கை விவகாரத்தை எழுப்பினர்.

பா.ஜ.க உறுப்பினர் சந்தோஷ் கங்வார் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்களத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என்றார்.

பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பர்துஹாரி பேசுகையில், இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு தவறி விட்டது. இலங்கை தமிழர் நலம் காக்கப்பட வேண்டும் என்றார்.

திமுகவின் ஏ.கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழர்கள் மீது எரிகுண்டுகளை ராணுவம் பயன்படுத்துகிறது. இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அப்பாத்துரை, தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டு இருக்கிறது என்றார்.

மதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி கிருஷ்ணன் பேசுகையில், இலங்கைக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி தாராள கடன் கொடுத்து இருக்கிறது. ஆனால் அந்த பணத்தின் மூலம், சீனா, பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கி, அதை விடுதலைப்புலிகளுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பயன்படுத்துகிறது என்றார்.

காங்கிரஸ் எம்.பி. என்.எஸ்.வி. சித்தன் எழுந்து, இலங்கையில் அமைதி திரும்பவும், தமிழர்கள் பாதுகாக்கப்படவும் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

கார்வேந்தன் (காங்.) பேசுகையில், தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அனாதையாக நிற்கிறார்கள். தமிழர்கள் இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் என்றார்.

புதுச்சேசரி பாமக எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சினை, இங்குள்ள தமிழர்களின் பிரச்சினை மட்டும் அல்ல. அது இந்தியர்களின் பிரச்சினை. இதை இலங்கையின் உள் நாட்டு பிரச்சினை என்று நாம் ஒதுக்கி விட முடியாது என்றார்.

திமுகவின் விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னுச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்பாத்துரை மத்திய அரசைக் கண்டித்துப் பேசினர்.

அதேபோல ராஜ்யசபாவிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பா.ஜ.க.வின் திருநாவுக்கரசர் பேசுகையில், இந்தியாவில் இருந்து, இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கப்படுகிறது. இதை இலங்கை அரசு, தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது. எனவே, மத்திய அரசு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும்.

இலங்கையில், தமிழர்களை கொல்லும் அரசுக்கு, இந்தியா உதவக்கூடாது. அங்கு மனித உரிமைகளை, ராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செஞ்சிலுவை சங்கத்தினர் கூட செல்ல முடியவில்லை.

மனித உரிமை மீறலை தடுக்க முக்கியத்துவம் கொடுத்து, மனிதாபிமான உணர்வுடன் இந்தியா செயல்பட வேண்டும். ஐக்கிய நாட்டு சபைக்கு இந்த பிரச்சினையை, மத்திய அரசு எடுத்து சென்று, தீர்வு காண வேண்டும்.

இலங்கை பிரச்சினை பற்றி அதிபர் ராஜபக்சேயுடன் பேச பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அவர் இலங்கை செல்லவே ஒரு மாதம் ஆகி விட்டது. மேலும் அவர், அங்கே என்ன பேசினார் என்று தமிழக முதல்வருக்கே தெரிவிக்கப்பட வில்லை. இரு வருந்தத்தக்கது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா பேசுகையில், இலங்கையில், 3 லட்சம் தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி இல்லை. அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வையாளராக மட்டும் இந்தியா இருக்க கூடாது.

இலங்கை அரசின் மீது மத்திய அரசு தற்போது கொண்டு இருக்கும் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கையில் உள்ள பிரச்சினை, அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினை என்று கருதி மத்திய அரசு ஒதுங்கி விடக்கூடாது.

இலங்கைக்கு இந்தியா ரேடார் கருவிகளை கொடுத்தது முற்றிலும் தவறான காரியம். இந்திய கடற்படை கப்பல்கள், இலங்கைக்காக ரோந்து பணியில் ஈடுபடுவதும் நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள 70 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு மேலும் உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.

அப்போது அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் எழுந்து, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் என்றார்.

விவாதத்திற்குப் பதிலளித்து, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

தமிழர்கள் மீதான தாக்குதலை, இந்தியா ஒருபோதும் ஆதரித்தது இல்லை. தமிழர் பிரச்சினையில், மத்திய அரசின் நிலைப்பாடு, கொள்கை பற்றி, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் பேசுகையில் குறிப்பிட்டு இருக்கிறார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X