For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி திமுக தொண்டர் தீக்குளித்து மரணம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனித சங்கிலியின்போது தரமணியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.

சென்னை தரமணி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(55). மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து 1999ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.

இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.நேற்று திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் சிவப்பிரகாசமும் கலந்து கொண்டார்.

கிண்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க அவர் சென்றார்.

அப்போது திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீயைக் கொளுத்தி வைத்துக் கொண்டார்.

உடலில் பரவிய தீயால் கதறியபடி அங்கும் இங்கும் ஓடினார். இதைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர், சிவப்பிரகாசத்தை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கிண்டி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சிவப்பிரகாசம் தி.மு.க. பகுதி பிரதிநிதியாகவும், டாக்டர் கலைஞர் மன்ற செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவப்பிரகாசத்தை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக சிவப்பிரகாசம் தீக்குளித்துள்ளார்.

இலங்கையில் கொடுமைக்கு ஆளாகும் தமிழர்களைக் காப்பாற்றவும், இரண்டு தரப்பினரும் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு போரை நிறுத்தவும் முதல்வர் கலைஞர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அதனையொட்டி இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி சார்பில் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இளைஞர் அணியின் மனித சங்கிலி நடைபெற்றது.

இதில் பங்கேற்க தரமணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களோடு சிவப்பிரகாசம் கிண்டிக்கு வந்துள்ளார். கிண்டிக்கு வந்து எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அருகே நின்றார். திடீரென அவர் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் கிடைத்துள்ளது.

முதலமைச்சர் கலைஞருக்கு எழுதிய அந்த கடிதத்தில், இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். தமிழர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று எழுதியுள்ளார். சிவப்பிரகாசம் தீக்குளித்தது வருந்தத்தக்கச் செயல் என்றார் ஸ்டாலின்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வாக்கில், சிவப்பிரகாசம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மருத்துவமனை வளாகத்தில் குழுமியிருந்த திமுகவினரும் பெரும் சோகமடைந்தனர்.

முதல்வர் இரங்கல் - ரூ. 2 லட்சம் நிதியுதவி

சிவப்பிரகாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக, நேற்றைய தினம் நடைபெற்ற இளைஞர் சங்கிலியின் போது வேளச்சேரி பகுதி கழகத் தோழர் சிவப்பிரகாசம் தீக்குளித்து மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு மறைந்து விட்ட செய்தியினை அறிந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் மனம் வருந்தி அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்து இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவரை இழந்து வாடும் அந்த குடும்பத்தினருக்கு தி.மு.க. நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கிடவும் ஆணை பிறப்பித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X