For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிக்கலில் டிஎல்எப் சென்னை புராஜக்ட்!-வாடிக்கையாளர்கள் போர்க்கொடி!!

By Sridhar L
Google Oneindia Tamil News

DLF Hamilton Court
சென்னை: டெல்லி லீஸ் பைனான்ஸ் எனப்படும் டிஎல்எப் நிறுவனத்துக்கு எதிராக அதன் சென்னை வாடிக்கையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஒரு வாரத்துக்குள் தங்களுக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை ஒதுக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

டி.எல்.எப்., நிறுவனம் சார்பில் சென்னை சோழிங்கநல்லூரை அடுத்துள்ள அடுத்த செம்மஞ்சேரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3,493 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட 2008ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட குடியிருப்புகளுக்கு 40 லட்சம் முதல் 75 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்தார்கள். சென்னையில் வசிக்கும் உயர் நடுத்தர பிரிவு மக்கள் 1,800 பேர் பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் 95 சதவீதம் வரை பணம் கட்டிவிட்டார்களாம். ஆனாலும் அதற்குத் தகுந்த அளவு கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த கேள்விகளுக்கு பதில் சொல்வதையும் தவிர்த்து வருகிறதாம் டிஎல்எப்.

எனவே பணம் கட்டியவர்களில் 1,100 பேர் ஒரு குழுவாக இயங்க முடிவு செய்துள்ளனர். இக்குழுவுக்கு ஜான்சன் தலைவராகவும், வக்கீல் சியாம்சுந்தர் உள்ளிட்ட நால்வர் முக்கிய பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் கூறப்பட்டதாவது:

டி.எல்.எப்., நிறுவனம் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு 13 மாதங்களாகியும் நகர ஊரமைப்பு பிளான் வரவில்லை. டி.எல்.எப். நிறுவனம் - லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவனங்கள் கூட்டாக முதலீடு செய்துள்ளன.இதில் லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானது அனைவரும் அறிந்ததே.

இதனால் மீண்டும் செம்மஞ்சேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட நாம் கொடுத்த பணம் ஏமாற்றப்பட்டதா... அல்லது வரும் 2011-ம் ஆண்டுக்குள் வீடு கைக்கு வருமா என்ற பயம் வந்துவிட்டது இப்போது.

அடுத்தது விலைக் குறைப்பு. பெங்களூரில் டி.எல்.எப். நிறுவனம் 32 சதவீதம் வரை மொத்த தொகையிலிருந்து குறைத்துள்ளது. ஆனால் சென்னையில் 10 சதவீதம் தான் மொத்த தொகையில் குறைத்துள்ளது. பெங்களூரைப் போல் சென்னையிலும் மொத்தத் தொகையில் குறைக்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன், 'தேவைப்படுபவர்கள் முழுப் பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளலாம்' என அறிவித்தது டிஎல்எப்.இதை நம்பி நிறையபேர் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக கடிதம் அனுப்பினர். ஆனால், அவர்களுக்கு எந்தவிதப் பதிலும் வரவில்லை. ஒருவேளை எங்கள் பணத்தை முழுவதுமாகக் கொடுத்துவிட்டாலும் வெளியேறி விடுவோம்', என்றனர்.

டிஎல்எப் நிறுவனம் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளைப புறக்கணித்தால் சட்டத்தின் உதவியை நாட வேண்டி வரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X