For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலைவாய்ப்புக் கொள்கை - ஒபாமா சொல்வதும் சரிதான்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Obama
- ஷங்கர்

வாஷிங்டன்: இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து நர்ஸ்களை வரவழைத்துக் கொண்டிருப்பீர்கள்? நல்ல திறமையான நர்ஸ்களை இனி இங்கேயே உருவாக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. நமது குடியேற்றக் கொள்கைகளை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்! - வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அதிபர் ஒபாமா கூறிய வார்த்தைகள்தான் இவை.

இதைவிட 'ஷார்ப்'பான சில கமெண்டுகளையும் அவர் கூறியுள்ளார். அதை அப்புறம் பார்ப்போம்.

தனக்கு மிஞ்சியதுதான் தான தருமமெல்லாம் என்ற நம்ம ஊர் பழமொழியை மிகச் சரியாக செயல்படுத்துபவர் என்ற 'பாராட்டுக்கு' உரியவர் இன்றைய தேதிக்கு ஒபாமாதான்.

பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையிழப்பால் கடும் துன்பத்தில் தவிக்கும் அமெரிக்கர்களை மீண்டும் பணியிலமர்த்துவதும், தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கிவிட்ட அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் அதன் சரியான ட்ராக்குக்கு கொண்டுவருவதுமே அவர் முன் இப்போதுள்ள தலையாய பிரச்சினை. அதை வருகிற செப்டம்பருக்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்பது ஒபாமா தனது அரசுக்கு தானே வைத்துள்ள சுய இலக்கு!

இதன் அடிப்படையில்தான் சமீபத்தில் அவர் கொண்டுவந்த 790 பில்லியன் டாலர் பெயில் அவுட்டுக்கு (பல்வேறு வரிக்குறைப்புகள், நிதிச் சலுகைகள்) அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தது.

அமெரிக்க வேலை வாய்ப்புகள் அனைத்துமே அமெரிக்கர்களுக்கு மட்டும்தான் என அமெரிக்க அதிபர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மறைமுக உத்தரவு அதுதான் என்கிறார் டெட்ராய்ட்டில் கிறிஸ்லர் நிறுவனத்தில் நல்ல பணியிலிருந்து நீக்கப்பட்டு அல்லது கிட்டத்தட்ட துரத்தப்பட்டு இப்போது நாடு திரும்பத் தயாராக உள்ள சென்னை கீழ்கட்டளை இளைஞர் ராகேஷ்குமார்.

"அந்த நிறுவனத்துக்கு இன்றைய தேதிக்கு நான் தேவைதான். என்னைவிட பொருத்தமானவரைத் தேர்ந்தெடுக்க இன்னும் நாள் பிடிக்கும். ஆனால் மார்ச் 31-ம் தேதியோடு எனது காண்ட்ராக்ட் முடிகிறது. அதற்குமேல் எக்ஸ்டென்ஷன் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். சாதாரண நேரமாக இருந்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்காது.

அவர்கள் நாட்டில் உட்கார்ந்து கொண்டு உரிமை பற்றிப் பேசுவதில் உள்ள அபத்தம் புரிந்துதான் வெளியேறுகிறேன். ஒபாமா ஒபாமா என அவருக்கு ரசிகர் மன்றம் வைக்காத குறையாகப் பல இந்தியர்கள் பேசுவதைச் சொல்லி இங்குள்ளவர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

ஒன்றைத் தெரிந்து கொள்வது நலம், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றிருப்பது இந்தியர்களின் நலனைக் காக்க அல்ல. இந்தச் சூழலில் அவரைக் குறை சொல்வதிலும் அர்த்தமில்லை. அமெரிக்காவுக்கு சரியானதைச் செய்து வருகிறார். நாம் உண்மையை, நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவரது முக்கிய இலக்கு இந்த தேக்கத்திலிருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை பழைய டிராக்குக்கு கொண்டு வந்தாக வேண்டும். அனைத்து வழிகளிலும் அன்னியச் செலாவணி வெளியில் செல்வது தடுக்கப்பட்டாக வேண்டும் என்ற நிலைமை. உளவியல் ரீதியாக இதுவரை அமெரிக்க நிறுவனங்கள் பெரிய அளவு தொழிலாளர் மத்தியில் பிரிவினை பார்த்ததில்லை. ஆனால் ஒபாமாவின் அறிவிப்புகள், பேச்சுக்களால் இப்போது அமெரிக்க நிறுவனங்கள் 'சுதேசி' மனப்பான்மைக்குத் திரும்பியுள்ளன. அதை நாமும் புரிந்து கொள்வதே பாதுகாப்பானது", என்கிறார்.

சரி நர்ஸ்கள் விவகாரத்தில் ஒபாமாவின் நிலைப்பாடு என்ன?

"ஓரு வாரத்திலோ, மாதத்திலோ நர்ஸ்களை உருவாக்கிவிட முடியாது. குறைந்தது 3 முதல் 5 ஆண்டு காலமாவது தேவைப்படும் புதிய நர்ஸ்களை உருவாக்க (டிப்ளமோ மற்றும் டிகிரி). இந்த காலகட்டத்தில் அமெரிக்காவிலேயே தேவையான அளவு நர்ஸ்களை உருவாக்க முனைய வேண்டும்' என்கிறார் ஒபாமா. அதுவரை வெளிநாடுகளிலிருந்து நர்ஸ்களை வரவழைத்துக் கொள்ளலாம் என நேற்று நடந்த சுகாதரத் துறை சீர்திருத்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய கலிபேர்னியா செனட்டர் லோய்ஸ் கேப்ஸ், அமெரிக்கா கடும் நர்ஸ் பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறது என்றும், இன்னும் 7 ஆண்டுகளில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான நர்ஸ்களுக்கு இங்கு பற்றாக்குறை ஏற்படும். அந்த அளவு நம்மால் நர்ஸ்களைத் தயார்ப்படுத்த முடியாதே... என்று கூறினார்.

உடனே அதற்கு ஒபாமாவிடமிருந்து வந்த ஷார்ப் பதில் இது:

"இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த முட்டாள்தனத்தைத் தொடரப் போகிறோம்... வருடம்தோறும் நர்ஸ்கள் தேவை பெருகும் என்பது ஒரு அடிப்படை உண்மை. எல்லாருக்கும் புரிந்த உண்மை. இதைச் சமாளிக்க நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? இந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கலாம்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் நம் நாட்டிலேயே நமது மருத்துவமனைகளுக்குத் தேவையான நர்ஸ்களை நல்ல பயிற்சியோடு தயார்படுத்தி விடலாமே.. இத்தனை காலம் நாம் அடுத்தவர் கையை எதிர்பார்த்தே காலம் கடத்தியதால்தான் இன்று 7 லட்சம் நர்ஸ்கள் தேவை எனும் நிலை வந்திருக்கிறது. இந்த முட்டாள்தனத்தை இந்த அரசு இனியும் தொடராது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நாம் இப்போதே இதற்கான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும், என்றார் ஒபாமா.

யோசித்துப் பார்த்தால், இதில் ஒபாமாவின் தவறு ஒன்றுமில்லைதான். அவர் மிகச் சரியாகவே இருக்கிறார். அமெரிக்க அதிபராக இருந்து கொண்டு, இந்தியர் அல்லது ஆசியர் நலனுக்காக அவர் அமெரிக்காவில் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பதும், அப்படி ஒரு மாயையை தீவிரமாக நம்புவதும் எத்தனை அபத்தமானது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X