For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டை கெடுக்கும் ரசிகர் மன்றங்கள் தேவையே இல்லை: அன்புமணி ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: நமது இந்திய இளைஞர்களை கெடுக்கும் ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை. அவற்றை ஒழிக்க பாமக இளைஞர் அணியினர் உறுதி எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள கண்டோன்மென்ட் மைதானத்தில் பாமகவின் பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.

இளைஞர்கள் இடையே அதிகரித்து வரும் தீய பழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாடுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஏகே மூர்த்தி தலைமை தாங்கினார்.

பாமக தலைவர் ஜிகே மணி, ரயில்வே இணை அமைச்சர் வேலு, வன்னியர் சங்க மாநில தலைவர் குரு, டாக்டர் ராமதாசின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்தி மற்றும் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் காண்பதற்கு 4 பெரிய திரைகளில் மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. பாட்டாளி இளைஞர் சங்க தலைவரும், மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து இளைஞர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உறுதிமொழிகளை வாசித்தார்.

அதில்,

மது, புகை, பான்பராக், கஞ்சா, லாட்டரி போன்ற தீய பழக்கங்களுக்கு இளைஞர்கள் ஆளாவதை தடுப்போம். நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்து, அடுத்த தலைமுறையினருக்கு இந்த பூமியை பாதுகாப்பாக விட்டு செல்வோம்.

அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி கிடைக்க பாடுபடுவோம். சமூக நீதி எங்கள் உயிர்மூச்சு, கொள்கை என வீரமுழக்கம் செய்வோம். தனியார் நிறுவனங்களிலும்.

இடஓதுக்கீடு பெறுவது எங்கள் அடிப்படை உரிமை. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை சிதைத்து வரும் சக்திகளை அடையாளம் காட்டுவோம். இளைஞர்களுக்கு வழிகாட்டுவது படிப்பகங்கள்தான்.

அவர்களை கெடுக்கும் ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை. அவர்களுக்கு தேவையான படிப்பகங்களை தொடங்க வேண்டும். தீவிரவாதம், வன்முறை, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூக கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம்.

எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்து விரட்டுவோம். தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் வளர விளையாட்டுக்குழு அமைப்போம்.

வரதட்சணையை ஒழிப்போம். பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு வழங்க பாடுபடுவோம் என உறுதிமொழியை வாசித்தார். அதை தொண்டர்களும் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து அன்புமணி பேசுகையில்,

நீங்கள் மற்ற இளைஞர்களுக்கு நமது உறுதிமொழியை தெரிவிக்க வேண்டும். சினிமா என்பதை நிஜம் என்று நினைக்கிறார்கள். அது வேடிக்கைதான். புதிய திரைப்படம் வந்தால் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் என்று செய்யும் முட்டாள்கள் இருக்கிறார்கள். சினிமா மோகத்தில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அவர்களுக்கு நாம் அறிவு புகட்ட வேண்டும்.

இந்த மாநாட்டிற்கு 5 லட்சம் இளைஞர்கள் வந்திருக்கின்றனர். இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வெளியே இருக்கிறது. டாக்டர் ராமதாஸ் 10 கட்டளைகள் கொடுத்து அதை பின்பற்ற சபதம் ஏற்க கட்டளையிட்டுள்ளார்.

இது ஒரு வெற்றி மாநாடு. டாக்டர் ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டமாக இளைஞர்களை திரட்டி ஆக்கப்பூர்வ சிந்தனைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். 30 மாவட்டங்களில் 25 லட்சம் இளைஞர்களை நல்வழிப்படுத்தினார் என்றார் அன்புமணி.

ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது ...

மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,

ஒரு கொள்கை, கோட்பாடுக்காக இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்காக உறுதி ஏற்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

மெரினாவில் அரசியல் மாநாடு நடத்த தடை இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு கட்சிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மெரினாவில் மாநாடு நடத்த அனுமதிக்கலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் நடத்தலாம், அரசுக்கு ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்தி நடத்தலாம் என்று கூட அனுமதித்தால் அரசுக்கு வருமானமும் வரும்.

உண்ணாவிரதம் இருக்கவும் சேப்பாக்கம் தவிர வேறு இடம் தருவதில்லை. ஜனநாயக குரல்வளை நெரிக்கப்படுகிறது.

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் நேரு காலத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த அமிர்த்கவுர் என்பவருக்கு பிறகு சிறப்பாக பணியாற்றியவர் அன்புமணி தான் என்று கூறுகிறார்கள். இதை நீங்கள் இந்தியாவில் எந்த எம்.பி.யை கேட்டாலும், எந்த மந்திரியை கேட்டாலும் சொல்வார்கள்.

அன்புமணி பெரும் தலைவராக விளங்குவார் ..

அன்புமணி பதவி ஏற்று ஒரு ஆண்டிலேயே பிரதமர் என்னிடம், உங்களுடைய மகனைப் பற்றி நீங்கள் பெருமைப்படலாம் என்றார். அடுத்து இந்த நாடு பெருமைப்படுகிறது, அவர் இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவராக விளங்குவார் என்றார்.

அவர் பதவி ஏற்கும்போது நான் ஒரு கட்டளையிட்டேன். ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதி ஏழை குடியானவன் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்றேன். அதை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் ஒரு நாட்டின் பிரதமர், ஜனாதிபதியை தான் சந்திப்பார். ஆனால் அவர், சுகாதாரத்துறையில் உலகிற்கே இந்தியா வழிகாட்டுகிறது. இதற்கு காரணமான உங்களை பார்க்க வந்திருக்கிறேன் என்று அன்புமணியின் அலுவலகத்திற்கு வந்து பாராட்டியிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 5, 6 ஐ தவிர மற்ற மாநில முதல்வர்கள் அவரது அலுவலகத்திற்கு வந்து தங்கள் மாநிலத்திற்கு இவையெல்லாம் தேவை என்று கேட்டு, அவரை பாராட்டி வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள் கொண்ட கவுன்சிலில் பாராட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு அமைச்சர் இந்தியாவில் பிரதமர் வேட்பாளராகக் கூட இவர் வரக்கூடும் என்றார்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்ற மத்திய மந்திரிகளில் அன்புமணி முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கூறியுள்ளனர். இப்படிப்பட்ட தமிழனை பாராட்ட இங்கு யாரும் இல்லை.

இங்கு உறுதி மொழி எடுக்கும் போது எதை எல்லாம் ஒழிக்க வேண்டும், எதையெல்லாம் தடுக்க வேண்டும், எவையெல்லாம் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டதோ அந்த மூன்றும் நடந்தால் தான் நாட்டின் வளர்ச்சி மேம்படும், நாடு முன்னேறும், வளமை பெறும். அதற்காகத் தான் இந்த உறுதிமொழி. இதற்கு நீங்கள் எல்லோரும் உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

30 மாவட்டங்களில் இருந்து 27 லட்சம் இளைஞர்களை அழைத்து மதுவை ஒழிக்க உறுதி மொழி எடுத்துள்ளார்கள்.

சிறை செல்ல தயார்...

இப்படிப்பட்ட ஒரு காரியத்தை எந்த ஒரு அரசியல் கட்சியாவது செய்ததுண்டா? இனியாவது செய்வார்களா? என்று எண்ணிப்பாருங்கள். ஒரு குடிப்பழக்கம் உள்ளவனையாவது நீங்கள் திருத்த வேண்டும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு வருவதற்கு நாம் போராட வேண்டும். அந்த போராட்ட களத்தில் நாம் சிறை செல்லவும் தயாராக இருக்க வேண்டும். இதற்காக ஒரு மாதம் சிறையில் இருக்கவும் நான் தயார்.

நான் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நானும், அன்புமணியும் ஆசைப்படுகிறோம். அது நிறைவேற வேண்டுமானால் இந்த மது ஒழிய வேண்டும்.

அக்டோபர் 2-ந் தேதி என்றால் எப்படி காந்தி ஜெயந்தி நினைவுக்கு வருமோ அதுபோல, பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்ததும் நினைவுக்கு வரும். இதை இந்தியாவும், உலகமும் மறக்காது. இதற்காக அவர் பெற்ற பரிசுகள் ஏராளம்.

சமச்சீர் கல்விக்காக நீங்கள் போராட தாயாரா? அதற்காக சிறை செல்லவும் நான் தயார். போராட சிறை செல்ல தயாராகுங்கள்.

அரசியல் கட்சிகள் நம்பகத்தன்மை, பொறுப்புணர்வுகள் கொண்ட முழு அமைப்பாக மாற வேண்டும். அதுவே நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் வழிவகுக்கும். நம் கட்சியும் கொள்கை, லட்சியத்தை முன் வைத்திருக்கிறது. இதில் ஊசலாட்டம், குழப்பம் இல்லை.

2020-ல் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று திட்டங்கள் தீட்டியிருக்கிறோம். இந்த இளைஞர் சக்தி ஆக்கப்பணிகளை செய்து புதிய சமுதாயத்திற்கு வித்திடும் சக்தியாக மாற வேண்டும் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X