For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: எம்ஜிஆர் வழியில் ஜெ- வைகோ புகழாரம்

By Sridhar L
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க எம்ஜிஆர் வழியில் போராட்டக் களத்தில் குதித்துள்ளார் ஜெயலலிதா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

சென்னையில் ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை பழரசம் கொடுத்து முடித்து வைத்து வைகோ பேசுகையி்ல்,

ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் மக்களிடம் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தும்.

ஜெயலலிதாவின் போராட்டத்தை முதல்வர் கருணாநிதி விமர்சனம் செய்கிறார். ஜெயலலிதா திடீரென போராட்டம் நடத்தவில்லை. இந்திய ஆயுதங்களைக் கொண்டே இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதாக கடந்த 5 மாதங்களாகவே ஜெயலலிதா கூறி வருகிறார்.

போர் நிறுத்தம் குறித்த சட்டப் பேரவை தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவில்லை என கருணாநிதி கூறுகிறார். அது உண்மையில்லை.

சட்டப் பேரவையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி முதலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அதிமுக, மதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. ஆனால் அத் தீர்மானத்தை நிறைவேற்றும் எந்த முயற்சியிலும் கருணாநிதி ஈடுபடவில்லை.

மாறாக எம்பிக்கள் ராஜிநாமா, மனிதச் சங்கிலி, பிரதமருடன் சந்திப்பு என அடுத்தடுத்து நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார். எனவே அவரது நாடகங்களுக்கு துணைபோக முடியாது என்பதால்தான் சட்டப் பேரவையில் கடைசியாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அதிமுக, மதிமுக ஆதரிக்கவில்லை.

இலங்கை ராணுவத்தின் 48 மணி நேர கெடு என்ற அறிவிப்பை, போர் நிறுத்தம் என இந்திய அரசு பிரசாரம் செய்தது. அதைத் தொடர்ந்து மன்மோகன் சிங், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோரை கருணாநிதி புகழ்ந்து தள்ளினார். ஆனால் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்பதே உண்மை.

முந்தைய பாஜக அரசு இருந்தவரை, இலங்கைக்கு ஆயுத உதவியோ, ஆயுத விற்பனையோ கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு தாராளமாக ஆயுத உதவிகள் வழங்கப்பட்டன. பலாலி விமானப் படை தளத்தை இந்தியா புதுப்பித்துக் கொடுத்தது.

சொல்லப்போனால் இன்று இலங்கையில் போரை நடத்திக் கொண்டிருப்பதே இந்திய அரசுதான். அதற்கு கருணாநிதியும் உடந்தையாக உள்ளார். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மருத்துவமனைகள் கூட குண்டு வீசி அழிக்கப்படுகின்றன.

இந்தச் சூழலில்தான் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா போராட்டக் களத்தில் குதித்துள்ளார். அவரது உண்ணாவிரதப் போராட்டம் இலங்கையிலும், இந்தியாவிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கும், துரோகத்துக்கு துணைபோகும் திமுகவுக்கும் மக்களவைத் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார் வைகோ.

கருணாநிதிக்கு மனசாட்சி இல்லை-வைகோ:

முன்னதாக எழுத்தாளர் மதுராவின் நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நூல்களை வைகோ வெளியிட, முதல் பிரதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் வைகோ பேசுகையில்,

நான் புலிகளிடம் காசு வாங்கிக் கொண்டு செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். திருடனுக்குக் கூட புலிகளிடம் காசு வாங்க எண்ணம் வராது.

37 புலிகளை ஒன்றரை ஆண்டுகள் எனது வீட்டில் வைத்திருந்து, சோறு போட்டு, மருந்து கொடுத்து சிகிச்சை பார்த்திருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்குப் (ராஜிவ் படுகொலை) பிறகும் ஆறு மாதம் அவர்கள் என் வீட்டில் இருந்தனர்.அவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகி யார் என்பதை, காலம் வரும்போது கூறுவேன்.

அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டனர். பின்னர் 17 பேர் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்யும் வாய்ப்பு எழுந்தபோது, அவர்களிடம் சயனைட் கொடுத்து விடுமாறு கேட்டேன். இரவு முழுவதும் பேசி அவர்களிடமிருந்து சயனைட் ப்பியைப் பெற்றேன்.

என் தம்பி ரவி, அவர்களை நான் தான் பாதுகாத்து வைத்திருந்தேன். அது கடமை என கருதினேன் என்று கூறி, ஓராண்டு சிறை சென்றான். அவனுக்கு நான் பதவி வழங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவன் மதிமுக கட்சி அலுவலகமான தாயகத்தையே பார்த்ததில்லை.

நான் புலிகளிடம் காசு வாங்கியதாகக் கூறும் கருணாநிதிக்கு இதயம், மனசாட்சி கிடையாது. அவருக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

நாஞ்சில் சம்பத், சீமான், கொளத்தூர் மணி பேசியதில் தவறில்லை. நாட்டின் இறையாண்மையில், ஒருமைப்பாட்டில் எங்களுக்கு இல்லாத அக்கறையா?. இவர்கள் அனைவரும், நாட்டின் ஒற்றுமை காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையில் தான் பேசினர் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X