For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர்நீதிமன்ற உத்தரவை தலைவணங்கி ஏற்கிறோம்: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: உயர்நீதிமன்ற மோதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை தமிழக அரசு தலைவணங்கி ஏற்கிறது. வக்கீல்கள் மக்கள் நலன் கருதி, அவர்கள் படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

17.2.2009 அன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் சுப்பிரமணியசுவாமி வந்த போது, சில வழக்கறிஞர்கள் முட்டைகளை வீசியதைத் தொடர்ந்து - 19.2.2009 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட சம்பவம் குறித்து-இன்று மாலையில் நீதிபதிகள் முகோபாத்தியா, வி.தனபாலன் மற்றும் கே.சந்துரு ஆகியோர் அடங்கிய அமர்வு (பெஞ்ச்) அளித்த ஆணையில் - காவல்துறை அதிகாரிகள் ஏ.கே.விஸ்வநாதன், மற்றும் எம்.ராமசுப்பிரமணி ஆகியோரை அரசு இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் பொதுமக்கள் நலன் கருதி பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

19.2.09 அன்று இந்த சம்பவம் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்தவுடன், அன்றையதினம் மாலையிலேயே உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதியிடம் நிலைமைகளை விளக்க அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை இயக்குனர் ஆகியோரை மருத்துவமனையில் இருந்தவாறே நான் அனுப்பி வைத்தேன்.

மேலும் அன்று இரவே நான் தலைமை நீதிபதிக்கு எழுதிய பேக்ஸ்' கடிதத்தில் - பிரச்சினைக்கான காரணங்களைக் கண்டறியவும் - அமைதியை நிலைநாட்டவும் நீதிபதியினுடைய ஒத்துழைப்பு மிகவும் தேவை என்றும், நீதிபதி விரும்பினால், நானே மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் வந்து நேரில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தேன்.

அதன் பின்னர் தலைமை நீதிபதி (பொறுப்பு) விரும்பியவாறு சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்து மத்திய அரசுக்கும் அதுகுறித்து தேவையான கடிதத்தை தமிழக அரசு சார்பில் எழுதப்பட்டது.

மேலும், நான் விளக்கமாக விடுத்த அறிக்கையில் வழக்கறிஞர்கள் - காவல் துறையினர் என்ற பாகுபாடு பார்க்காமல் இருவரும் நம்மவர்களே என்ற உணர்வோடு நடந்துகொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தேன். இதன் பின்னர் இந்த பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை சென்று - உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்தது.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரித்து உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்து - உச்சநீதிமன்றம் அந்த அறிக்கையை உயர்நீதிமன்றத்திற்கும், தமிழக அரசுக்கும் தக்க நடவடிக்கைக்காக அனுப்பியது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்துக்களை வழக்கறிஞர்கள் ஏற்காமல் இருந்தபோதிலும், தமிழக அரசு உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று சுமூகமான சூழ்நிலை உருவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நஷ்டஈட்டுத் தொகையாக 25 லட்சம் ரூபாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் செலுத்தியது.

மேலும், இந்த சம்பவத்தின்போது காவல்துறை அத்துமீறல் பற்றி கண்டறிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரதேவனை விசாரணை அதிகாரியாக நியமித்தது. சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் இதே நேரத்தில், சுந்தரதேவன் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

வக்கீல்கள் போல தமிழக அரசு சொல்லாது..

இவ்வளவிற்கும் பிறகு இன்றைய தினம் உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கின்ற ஆணையினை மதித்து ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கையை ஏற்க முடியாது என்று வழக்கறிஞர்கள் சொன்னதைப் போல தமிழக அரசு கூறாமல்; நீதிக்கு தலை வணங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டுள்ளதாக இரு அதிகாரிகளும் கருதினால் அதற்கு நிவாரணம் தேடிட வழியும் உரிமையும் அவர்களுக்கு உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.

அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் இதுவரை என்னுடைய உடல் நலிவைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் - உயர்நீதிமன்றம் தற்போது அளித்துள்ள அறிவுரையை ஏற்று பொது மக்களின் நலன் கருதி பணிக்குத் திரும்ப வேண்டுமென்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X