For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக 16 வயது சிறுவனைக் கடத்தி, மும்பையில் வைத்து கட்டாய ஆபரேஷன் செய்து அவனை அரவாணி ஆக்கிய கொடுமைக்கார அரவாணிகள் கும்பலை போலீஸார் கைது செய்தனர். இவர்களை போலீஸார் கோர்ட்டிலிருந்து அழைத்துச் செல்ல முயன்றபோது நூற்றுக்கணக்கான அரவாணிகள் ரகளை செய்ததால் எழும்பூர் கோர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த கோவளம் தர்கா தெருவை சேர்ந்தவர் நாகூரான். தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றுகிறார். இவரது மனைவி பெயர் ராணி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் வினோத்குமார் 16 வயது சிறுவனாக இருக்கும்போது காணாமல் போய்விட்டான்.

இந்த நிலையில், கடந்த மாதம் 14-ந் தேதி அன்று காணாமல் போன சிறுவன் வினோத்குமார் 19 வயது பெண்ணாக சேலை கட்டி பெற்றோர் முன்பு வந்து நின்றதைப் பார்த்து குடும்பத்தினர் பதறிப் போனார்கள்.

பதை பதைத்த அவர்கள் என்ன நடந்தது என்று கேட்டபோது வினோத் சொன்ன தகவல் அவர்களை உறைய வைத்தது.

சிறுவன் வினோத்தை, ஒரு கும்பல் புனேவுக்கு கடத்தி சென்று ஆபரேஷன் மூலம் அரவாணியாக மாற்றி விபசாரத்தில் தள்ளி சித்ரவதை செய்துள்ளது. அந்தக் கும்பலிடமிருந்து தான் தப்பி வந்து விட்டதாகவும், தனது பெயரை அக்கும்பல் திரிஷா என மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளான் வினோத்.

இதையடுத்து வினோத்தின் பெற்றோர் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்தை அணுகி புகார் அளித்தனர்.

இதையடுத்து அந்த கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

வினோத்குமாரிடம் போலீஸார் முதலில் விரிவாக விசாரணை நடத்தினர்.

அப்போது வினோத் குமார் கொடுத்த வாக்குமூலம் ..

9-ம் வகுப்பு படித்துவிட்டு, எனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தேன். பெற்றோர் பேச்சை கேட்காமல் ஊர் சுற்றி வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் வசித்த அரசி என்ற அரவாணியோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் அந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு பூஜை செய்வார். அரசி என்னிடம் ஆரம்பத்தில் அன்பாக பழகினார்.

எனக்கு இயற்கையிலேயே பெண்களை போல கூச்ச சுபாவம் இருந்தது. ஆண்களை கண்டால் வெட்கம் வரும். இந்த நேரத்தில் அரசியுடன் ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு என்னை தவறான வழிக்கு இழுத்து சென்றது. அரசி என்னுடன் தப்பான உறவு வைத்திருந்தார். அரசியுடன் பழகுவதை எனது பெற்றோர் கண்டித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.

என்னை மும்பைக்கு அழைத்து சென்று அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் நல்ல வேலை வாங்கித் தருவதாக அரசி என்னிடம் கூறினார். அதை நம்பி 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். அரசி என்னை ராயபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு அழைத்து சென்றார்.

அங்கு சுப்பு என்ற அரவாணியிடம் என்னை அறிமுகப்படுத்தினார். கோவில் திருவிழா முடிந்ததும் இரவு சுப்புவும், அரசியும், என்னை சென்னை பழைய மத்திய சிறை எதிரே உள்ள கல்லறை காந்தி நகருக்கு அழைத்து வந்தனர்.

அங்கு ராதா என்ற அரவாணியின் வீட்டில் தங்க வைத்தனர். ஒரு மாதம் அவரது வீட்டிலேயே தங்கியிருந்தேன். என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் நல்ல சாப்பாடு போட்டு சிறை வைப்பது போல வைத்திருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை அரவாணியாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மாதம் கழித்து புனேயில் இருந்து அங்காளம்மாள் என்ற அரவாணி, ராதாவின் வீட்டுக்கு வந்தார். அங்காளம்மாளிடம் என்னை ஒப்படைத்தனர். அங்காளம்மாள் என்னை புனேவுக்கு அழைத்து சென்றார்.

அதன் பிறகுதான் என்னை ரூ. 40 ஆயிரம் பணத்துக்கு விற்று விட்டதும், விபச்சாரத்தில் என்னை ஈடுபடுத்தப் போவதும் எனக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி வர முயன்றேன். ஆனால் முடியவில்லை. அடித்து சித்திரவதை செய்தார்கள். பிச்சை எடுக்க வைத்தனர். பின்னர் சாந்தி என்ற அரவாணியிடம் 1 லட்சத்திற்கு விற்றனர்.

சாந்தி, என்னை ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு அழைத்து சென்றார். கடப்பாவில் உள்ள ராமண்ணா மருத்துவமனையில் எனக்கு ஆபரேஷன் செய்து என்னை அரவாணியாக மாற்றி விட்டார்கள். கடப்பாவில் இருக்கும்போதே என்னை விபசாரத்தில் ஈடுபட வைத்தனர். அதன்பிறகு மீண்டும் புனே அழைத்து சென்றனர்.

புனே அருகே ஒரு இடத்தில் என்னை அடைத்து வைத்து விபசாரத்தில் தள்ளி கொடுமைபடுத்தினார்கள்.

இந்த நேரத்தில் மாலதி என்ற அரவாணியின் நட்பு எனக்கு கிடைத்தது. அவர் என்னை தப்பி செல்ல உதவுவதாக கூறினார். இதையடுத்து மார்ச் 10-ம் தேதி அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து தப்பி வந்தேன்.

மாலதி, என்னை சென்னைக்கு வரும் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தார். என்னை அரவாணியாக மாற்றி விபசாரத்தில் தள்ளிய அரசி, ராதா, சுப்பு உள்பட 13 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறினார்.

வினோத்குமார் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவரது தாயார் கொடுத்த புகார் மனு அடிப்படையிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸார் நடத்திய தீவிர வேட்டையில், அரவாணி அரசி என்ற அரசு (46), சுப்பு என்ற சுதாகர் (27), ராதா என்ற ராஜா (52), சாந்தி என்ற குட்டி (35), குட்டியம்மாள் (35), ஜோதி (42) ஆகிய 6 பேர் சிக்கினர்.

இவர்களில் சாந்தி புனேவிலிருந்து சென்னைக்கு தற்செயலாக வந்தபோது போலீஸ் பிடியில் சிக்கினார்.

கோர்ட்டில் அரவாணிகள் செய்த ரகளை..

கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் போலீஸார் எழும்பூர் 6வது கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர். அங்கு நீதிபதி அவர்களை 17ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸார் ஆறு பேரையும் வெளியே அழைத்து வந்தனர்.

அப்போது நூற்றுக்கணக்கான அரவாணிகள் அங்கு திரண்டு வந்தனர்.

அரவாணிகளை அழைத்து சென்ற 2 கார்களை கோர்ட்டைவிட்டு வெளியே போகவிடாமல், சுற்றி நின்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். ஜீப்பின் கண்ணாடிகளை அடித்தனர்.

ஜீப்பையும், கார்களையும் சுற்றி நின்று ஒப்பாரி வைத்தும், கூச்சலிட்டு அழுதபடியும் அவர்கள் கதறினர். பலர் மண்ணை வாரி தூற்றினார்கள்.

பின்னர் கோர்ட் கேட்டையும் சிலர் பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரவாணிகள் கூட்டத்துக்கிடையே சிக்கிக் கொண்ட போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைக்க விரும்பாமல் கைகளால் தள்ளி விலக்கிப் பார்த்தனர்.

முதலில் போலீஸார் கோர்ட் வளாகத்திற்குள் வரவில்லை. பின்னர் சீருடை அணியாத போலீஸாரும், சிபிசிஐடி டிஎஸ்பி பாலுச்சாமியும் உள்ளே புகுந்து அரவாணிகளை விலக்கி விட முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

கெட்ட கெட்ட வார்த்தைகளால் போலீஸாரைத் திட்டியபடி கைது செய்யப்பட்ட அரவாணிகளை விடுதலை செய்யும்படி அரவாணிகள் கூக்குரலிட்டனர்.

நிலைமை மோசமடைவதைப் பார்த்த போலீஸார் திமுதிமுவென உள்ளே புகுந்தனர். கஷ்டப்பட்டு அத்தனை பேரும் சேர்ந்து அரவாணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போலீஸாருக்கு உதவியாக வக்கீல்களும் களம் இறங்கி அரவாணிகளை ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து இழுத்து கார்களும், போலீஸ் ஜீப்பும் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர்.

இந்த தள்ளுமுள்ளு, அமர்க்களத்தில், திலகா என்ற அரவாணி மயக்கமடித்து விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரவாணிகள் நடத்திய இந்த பெரும் ரகளையால் எழும்பூர் கோர்ட் வளாகமே கலகலத்துப் போனது.

நீதிபதியிடம் கதறிய அரவாணி ராதா..

முன்னதாக, மாஜிஸ்திரேட்டு ராஜேஸ்வரி முன்பு ராதா என்ற அரவாணி கதறி அழுதபடி பேசினார்.

அவர் கூறுகையில், வினோத்குமார் விருப்பப்பட்டு அரவாணியாக மாறினார். அவரை ஒரு மாதம் எங்கள் வீட்டில் தங்க வைத்திருந்தோம். அரவாணியாக மாறினால் என்னென்ன கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்பதையெல்லாம் எடுத்து கூறினோம்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, வினோத்குமார் விருப்பப்படி தான் அவரை புனேவுக்கு அழைத்து சென்றோம். விபசாரத்தில் தள்ளியதாக பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் எங்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் உங்கள் மீது வழக்கு போடாமல் விட்டு விடுகிறோம் என்று கூறினார். எங்களால் பணம் கொடுக்க முடியவில்லை. அதனால் பொய் புகார் கொடுத்து போலீசில் எங்களை மாட்டிவிட்டு விட்டார் என்றார்.

இந்த வழக்கில் அங்காளம்மாள், கலைச்செல்வி மற்றும் வினோத்குமாரை ஆபரேஷன் செய்து அரவாணியாக மாற்றிய டாக்டர் உள்பட மேலும் 7 பேரை போலீசார் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக கடப்பாவுக்கும், புனேவுக்கும் 2 தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர்.

நூற்றுக்கணக்கில் சிறுவர்கள் கடத்தல்..?

அழகான சிறுவர்களை கடத்தி சென்று அரவாணிகளாக மாற்றும் கும்பல் சென்னை, பெங்களூர், புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோல நூற்றுக்கணக்கான சிறுவர்களை கடத்தி சென்று அரவாணியாக மாற்றி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பாதிக்கப்பட்ட வினோத்குமாருக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X