For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேமுதிக இறுதி வேட்பாளர்கள் பட்டியல்- கள்ளக்குறிச்சியில் விஜய்காந்த் மச்சான்!

By Staff
Google Oneindia Tamil News

Sutish with Vijaykanth
சென்னை: தேமுதிக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை இன்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.

கள்ளக்குறிச்சியில் விஜய்காந்தின் மச்சான் சுதீஷ் போட்டியிடுகிறார். இங்கு விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவே போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. இந் நிலையில் மனைவியின் தம்பியை நிறுத்தியுள்ளார் விஜய்காந்த்.

சுதீஷ் தேமுதிகவின் இளைஞரணிச் செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற தொகுதிகளில் போட்டியிடுவோர் விவரம்:

வேலூர்-எஸ்.செளகத் ஷெரீப்

விழுப்புரம் (தனி)- பி.எம்.கணபதி

ஆரணி- மோகனம் (எ) மோகன்

தென்காசி (தனி)- இன்பராஜ்

திருப்பூர்-தினேஷ்குமார்

சிவகங்கை-பர்வத ரெஜினா பாப்பா

ஏற்கனவே 33 தொகுதிகளுக்கு 3 கட்டமாக வேட்பாளர்களை அறிவித்த விஜய்காந்த் இன்று மேலும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்ததோடு அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

தனது மச்சானை தேர்தலில் நிறுத்தியதன்மூலம் குடும்ப அரசியலுக்கு தானும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துவிட்டார்.

சொந்த பந்தங்கள்.. பிற கட்சிகள் மீது விஜய்காந்த் தாக்கு..

இந் நிலையில் இன்று பெரம்பலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சசிகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த விஜய்காந்த் பேசியதாவது:

காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சனை ஆகியவற்றை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. குறிப்பாக காவிரி பிரச்சனையை தீர்க்க திமுக அரசு தவறியதோடு, இலங்கை தமிழர் பிரச்சனையிலும் உரிய முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை.

அதை விட்டுவிட்டு தன் சொந்த பந்தங்களுக்கு முக்கிய இலாகாக்களை கேட்டு பெறவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திமுக ஆட்சி காலத்தின் போதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக சட்டசபையில் கருணாநிதி அறிவித்து விட்டு 25,000 பேருக்குக் கூட வேலைவாய்ப்பு தரவில்லை.

மனிதர்களுக்கு முக்கியமான 3 'இ' அவசியம். 1. எஜூகேஷன், எம்ப்ளாய்மென்ட், எண்டர்டெய்ன்மென்ட் (வாய்க்கு வந்ததை சொன்னார் போல!!). இந்த மூன்றையும் திமுக அரசு தரவில்லை. அதைவிட்டுவிட்டு வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கேட்டால் வீட்டுக்கு ஒரு கலர் டிவியை தருகிறார்கள். இதன் மூலம் மக்களுக்கு எப்படி கல்வி, வேலை வாய்ப்பு வழங்க முடியும்? என்றார்.

விஜய்காந்த் அறிக்கை:

இறுதி வேட்பாளர் பட்டியலோடு இன்று விஜய்காந்த் வெளியிட்ட அறிக்கையில்,

தேமுதிக முதன் முதலாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதர அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். ஆனால் தேமுதிக மக்களையும், தெய்வத்தையும் நம்பி தமிழ்நாட்டு மக்களின் சார்பாக இந்தத் தேர்தலை சந்திக்கிறது.

தேமுதிக தேர்ந்தெடுக்கப்பட்டால், இதுவரை தீர்க்கப்படாத காவிரிப் பிரச்சனை முதல் கச்சத்தீவு பிரச்சனை வரை அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கப் பாடுபடுவோம்.

நிர்வாகத்தில் லஞ்ச, ஊழலுக்கு இடமளிக்காமல் வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெட்ரோல் தட்டுப்பாடு, மின்சார பற்றாக்குறை, குடிதண்ணீர் இன்மை, சமச்சீர் கல்வி போன்ற மக்கள் பிரச்சனைகளில் அனைத்து மக்களும் சமவாய்ப்பு பெற வழிவகுப்போம்.

குறிப்பாக அன்றாடம் இலங்கையில் செத்துமடியும் தமிழர்களுக்கு, உரிய அரசியல் உரிமைகளைப் பெற தேமுதிக தோள் கொடுக்கும்.

பணநாயக அரசியலை அறவே ஒழித்து, ஜனநாயகம் மலரும் வகையில் ஒரு புதிய அரசியலைத் தருவோம். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் சமமாக பாவிக்கப்படுவர்.

உழைப்பவர்கள் வாடவும், ஊரை ஏமாற்றுபவர்கள் வாழவும் உள்ள நிலையை மாற்றி, அனைத்து மக்களும் சமவாழ்வு பெற, தேமுதிக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.

தேமுதிகவின் வேட்பாளர் பட்டியலை வெற்றியாளர் பட்டியலாக ஆக்கி தருமாறு தமிழ்நாட்டு மக்களை இருகரங் கூப்பி வேண்டுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X