For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மீனவர்களை காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களை இந்திய அரசு மதிக்கவில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு விட்டு கொடுத்ததனால் தான் அப்பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுகிறார்கள். இதை தடுத்து நிறுத்த கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராமேஸ்வரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த இரண்டு தினங்களாக மீன் பிடிக்கச் செல்லாமல், வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வரும் 23 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க தவறி விட்டதைக் கண்டித்தும் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதும், அவர்களை குருவி சுடுவது போல இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையில், 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசுதான் முக்கியமா?

தமிழர்களின் உயிரைவிட, அவர்களை காக்க வேண்டும் என்கிற அக்கறையைவிட இலங்கை அரசின் நட்பு தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டை இந்திய வெளி விவகாரத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதனை எத்தனையோ முறை சுட்டிக்காட்டியும், வெளி விவகாரத்துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை என்பது வேதனையான விஷயமாகும்.

தமிழக மீனவர்கள் அன்றாடம் தாக்கப்படுவதற்கும், சுட்டுக் கொல்லப்படுவதற்கும் இலங்கைக்கு கச்சத்தீவு 1974-ம் ஆண்டில் தாரை வார்க்கப்பட்டதே காரணம்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை சிங்கள இனவெறி அரசுகள் கட்டவிழ்த்து விட்டதற்கும், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தம் தான் காரணம் என்றால் மிகையாகாது.

தமிழர்களை இந்திய அரசு மதிக்கவில்லை...

இங்குள்ள தமிழர்களை இந்தியப் பேரரசு மதிக்கவில்லை; அவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதற்கு அடையாளமாகத்தான் கச்சத்தீவு நமக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது என்று எண்ணி தமிழர்களை அடக்கி ஒடுக்கும் செயலை மேற்கொள்ளும் துணிவை இலங்கையில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்துள்ள அரசுகள் பெற்றிருக்கின்றன என்று சுட்டிக் காட்டப்படுவதை புறந்தள்ளி விட முடியாது.

கச்சத்தீவை தாரை வார்த்தபோது, பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை. இப்போதும் கூட, தமிழக மீனவர்களின் உயிரைக் காக்க கச்சத்தீவை மீட்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடி உரிமையை பெற்றுத் தந்தால் போதும் என்கிற அளவில் மனநிறைவு அடைவது வருந்தத்தக்கது.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே உரிமையுடன் மீன் பிடிக்கவும், பாதுகாப்பாக திரும்பி வரவும் கச்சத்தீவு மீட்கப்படுவது ஒன்று தான் வழி. இதற்கும் தமிழகம் இழந்த இதர உரிமைகளை பெறவும் குரல் கொடுப்போர் யார்? என்பதை அறிந்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X