For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். திமுக அணி வேட்பாளர்களுக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்ற 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. தோழமைக் கட்சிகள் போட்டியிடும் 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் சில நாட்களில் வெளிவரவுள்ளது.

தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரப்படுமா என்று வழக்கம் போல நிருபர்கள் என்னிடம் கேட்டபோது, 'புது முகங்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு அளிக்கப்படும்" என்று கூறியிருந்தேன்.

21 பெயர்கள் கொண்ட பட்டியலில் 13 பேர் 14வது நாடாளுமன்றத்தில் இடம் பெறாதவர்கள். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 15 பேரில் 8 பேர் மட்டுமே இப்போதைய பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

அதாவது பழைய முகம் 8 புதிய முகம் 13.

கடந்த முறை பட்டியலிலே இடம் பெற்றிருந்த ஏழு பேருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்தான். இவர்களில், ரகுபதி, வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ராதிகா செல்வி ஆகியோர் அமைச்சர்களாக இருந்து திறம்பட செயல்பட்டவர்கள்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே என்னைச் சந்தித்து இந்த முறை குடும்ப சூழ்நிலை காரணமாக நான் போட்டியிடவில்லை, வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம் என்று கைப்பட கடிதமே எழுதி கொடுத்தார். இப்படியே ஒவ்வொருவரும் இருந்தால் என்று ஒரு கணம் நினைத்தேன்.

அமைச்சராக இருந்த ரகுபதியின் புதுக்கோட்டை தொகுதியே இந்த முறை காணாமல் போய் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியே திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குப் போய்விட்டது.

அதோடு திருச்சி நாடாளுமன்ற தொகுதியும், வேங்கடபதி போட்டியிட்ட கடலூர், ராதிகா செல்வி கோரிய திருநெல்வேலி ஆகிய மூன்று தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு தரப்பட்டு விட்டது.

இவர்கள் தவிர கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த குப்புசாமிக்கு வயது, உடல் நிலை காரணமாகவும், ஒரு பெண்ணுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக கிருஷ்ணசாமிக்கும், புதியவருக்கு ராமநாதபுரம் தொகுதியிலே வாய்ப்பு தர வேண்டும் எபதற்காக பவானி ராஜேந்திரனுக்கும் இம்முறை வாய்ப்பளிக்க முடியாமல் போய் விட்டது.

இவர்கள் இப்போது பயன்படுத்தப்படா விட்டாலும், அடுத்தடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் வாய்ப்பு பெறுவார்கள்.

கிருஷ்ணசாமி நேற்று காலையில் என்னை சந்தித்தபோது, உன் தொகுதியில் ஒரு பெண்ணை நிறுத்தலாம் என்று நினைக்கிறேன், யாரை நிறுத்தலாம்?" என்று கேட்டவுடன், அவரும் மாவட்ட செயலாளர் சிவாஜியும் சென்று காயத்ரி ஸ்ரீதரனை அழைத்து வந்தார்கள்.

அந்தக் காயத்ரி யார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த கிண்டி கோபாலின் பேத்தி. கிருஷ்ணசாமியின் பெருந்தன்மையை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டேன்.

இது போலவே தூத்துக்குடியில் பெரியசாமியின் புதல்வர் மனு செய்திருந்தார். அந்தத் தொகுதியிலிருந்து வந்திருந்த நிர்வாகிகள் எல்லாம் அவரைத்தான் பரிந்துரை செய்திருந்தார்கள்.

ராதிகா செல்விக்கு தூத்துக்குடி தொகுதியிலாவது வாய்ப்பு தரலாமா என்றும் யோசிக்கப்பட்டது. அவரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது. அவர் தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதைவிட, அந்தத் தொகுதியிலே கழகம் வெற்றிபெற வேண்டியது முக்கியம் என்பதை நினைவூட்டினார்.

பின்னர் பெரியசாமியை வரவழைத்துப் பேசினேன். அவர், நானோ மாவட்டக் செயலாளர், என் பெண்ணோ அமைச்சராக இருக்கிறார், இதிலே என் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றால் ஒரு சிலர் அசூயை கொள்ள நேரிடும் என்று எழுதிக் கொடுத்தார்.

பின்னர் அவரே ஒருவரை அழைத்து வந்து, இவரை நிறுத்தலாம், வெற்றிக்கனியைக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார். தன் குடும்ப நலனைவிட, கழகத்தின் நலனைப் பெரிதாகக் கருதிய அவரை வாழ்த்திவிட்டு, அவர் அழைத்து வந்தவரையே வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்.

அவரைப் போலவே வாய்ப்பு கிடைக்காத மற்றவர்களும் பெருந்தன்மையாக இந்தமுறை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அடுத்தமுறை நிச்சயம் கிடைக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் 1999ம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஆதிசங்கருக்கு 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆதிசங்கர் கோபித்துக் கொண்டு சோர்வுற்று விடவில்லை. ஆர்வமுடன் தொடர்ந்து கட்சிப் பணி ஆற்றி வந்தார். இப்போது மீண்டும் ஆதிசங்கருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

கழக வேட்பாளர்கள் 21 பேரில் ஒருவரைத் தவிர அனைவருமே பட்டதாரிகள். சிலர் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். தேர்தல் அறிக்கை வெளியிட்டு, வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டோம்.

வாக்காளர்களிடம் சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டு இத்தகைய சாதனைகள் மேலும் தொடர்ந்திட இந்த அணியினை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு வெற்றியைத் தேடித்தர வேண்டிய பொறுப்பு கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தோழர்களுக்கும் இருக்கிறது.

அதற்கான உந்து சக்தியை தோழமைக் கட்சியினருக்கு வழங்க வேண்டிய பொறுப்பு திமுகவினருக்கு உண்டு என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X