For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் கட்ட தேர்தல்-124 தொகுதிகளில் வாக்குப் பதிவு ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: 17 மாநிலங்களைச் சேர்ந்த 124 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 17 மாநிலங்களில் இன்று 124 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு இங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இருப்பினும், நக்சலைட்டுகள் பாதி்ப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பீகார், உ.பி., ஒரிசாவில் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு முடியும்.

ஆந்திராவில் 22 தொகுதிகளுக்கும், கேரளாவில் 20, உத்தரப்பிரதேசத்தில் 16, மகாராஷ்டிராவில் 13, பீகாரில் 13, சட்டீஸ்கரில் 11, ஒரிசாவில் 10, ஜார்கண்டில் 6, அசாமில் 3, மேகாலயாவில் 2, அருணாசல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இவை தவிர ஜம்மு காஷ்மீர், அந்தமான், மணிப்பூர், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த முதல் கட்ட தேர்தலில் 1715 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 122 பேர் பெண்கள் ஆவர்.

மெகபூப் நகரி்ல அதிகம்..

ஆந்திராவின் மெகபூப் நகர் தொகுதியிலும், சட்டீஸ்கரின் ராய்ப்பூரிலும் தலா 32 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்றே வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில் இடதுசாரிகள் 19 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாரதிய ஜனதாக் கட்சி 20 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஆந்திராவில், காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி, பிரஜா ராஜ்ஜியம் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அங்கு 20 லோக்சபா தொகுதிகளுக்கும், 154 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

முக்கிய வேட்பாளர்கள் ..

இன்றைய தேர்தலில் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள்..

ரேணுகா செளத்ரி, ஜெயபால் ரெட்டி, புரந்தரேஸ்வரி, டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர ராவ், எர்ரான் நாயுடு, நடிகை விஜயசாந்தி, பண்டாரு தத்தாத்ரேயா, ராஜீவ் பிரதாப் ரூடி, யஷ்வந்த் சின்ஹா, திலீப் சிங் தியோ, மனோஜ் திவாரி, முரளி மனோகர் ஜோஷி, கரிய முன்டா ஆகியோர் முக்கியமானவர்கள்.

ஒரிசாவில் 70 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யபப்ட்டுள்ளன. வாக்குப்பதிவை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக துணை தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 17 மாநிலங்களில் 124 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறும் முதல் கட்ட தேர்தலில், 1 லட்சத்து 85 ஆயிரத்து 552 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

14 கோடியே 31 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட பாராளுமன்ற தேர்தலுடன், ஆந்திராவில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 154 தொகுதிகளுக்கும், ஒரிசாவில் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

3 லட்சத்து 166 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன. 9 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தீவிரவாதிகள் அல்லது நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணிக்குள் முடித்துக்கொள்ளப்படும் என்றார்.

16% வேட்பாளர்கள் குற்றவாளிகள்:

முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 16 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பீகாரில் போட்டியிடும் 200 வேட்பாளர்களில் 51 பேர் குற்றப் பின்னணியுடன் கூடியவர்கள். இதில் 10 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் வேட்பாளர்கள் அனைவருமே குற்றப் பின்னணி கொண்டவர்களாம்.

உ.பியில், ஏழு தொகுதிகளில் முற்றிலும் குற்றப் பின்னணி கொண்டவர்களே போட்டியிடுகிறார்கள்.

பீகார் மாநிலம் ஜகானாபாத் தொகுதியில் எட்டு வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள். உ.பியின் சந்தாலி, சந்திரபூர் தொகுதிகளில் தலா 7 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.

மொத்தத்தில் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 1440 வேட்பாளர்களில் தோராயமாக 222 பேர் அதாவது 16 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவர்.

இவர்களில் 21 பேர் மீது கொலை வழக்குகள் உள்ளன. 38 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும், 14 பேர் மீ்து கடத்தல் வழக்குகளும் உள்ளனவாம்.

அதிக உயரத்தில் அமைந்த வாக்குச்சாவடி ..

இந்தியாவிலேயே அதிக உயரத்தில் அமைந்த வாக்குச் சாவடி என்ற பெருமை லெகுபான்ட் என்ற இடத்திற்குக் கிடைத்துள்ளது. 13 ஆயிரத்து 157 அடி உயர மலையில் இந்த வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள 105 வாக்குச் சாவடிகளுக்கு படகுகள் மூலமாக மட்டுமே போக முடியும். மினிகாய் தீவுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன

அருணாச்சல் பிரதேசத்தில் மூன்றே மூன்று வாக்காளர்களுக்காக 3 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X