For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக பிரசாரத்தில் 'டன்டனக்கா, டனக்குனக்கா'!

By Staff
Google Oneindia Tamil News

Alagiri
சென்னை: திமுகவுக்காக பிரசாரம் செய்ய 60 கிராமியக் கலைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் இவர்கள் கிராமியக் கலைகள் வடிவில் ஆட்டம், பாட்டத்துடன் பிரசாரம் செய்வார்கள்.

திமுக பிரசாரத் திட்டம் பக்காவாக தயாராகி வருகிறது. மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க என்னென்ன ஊடகங்கள் உள்ளதோ அத்தனையையும் பயன்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக 600 கிராமியக் கலைஞர்களைக் கொண்ட 60 குழுக்களை அமைத்துள்ளனர். இந்தப் பிரசாரத்தை திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பிரசாரக் குழு மேற்பார்வையிட்டு நடத்தும்.

இவர்களுக்காக திமுக சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்ட வேனும் வழங்கப்பட்டுள்ளது.

கோலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், குறவன்- குறத்தி ஆட்டம் என கிராமியக் கலைகள் மூலம் திமுக அரசின் சாதனைகளை இந்த கலைக்குழுவினர் விளக்கி பிரசாரம் செய்வார்கள்.

இந்த பிரசார கலை குழுவினர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நேற்று, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தங்கள் பிரசார நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினார்கள்.

அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பூங்கோதை, கவிஞர் கனிமொழி எம்.பி., கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வாராரய்யா வயது மூத்த பகத் சிங்..

வாராரு வாராரய்யா வயது மூத்த பகத்சிங், சாதனைகள் கலைஞரின் சாதனைகள் உள்ளிட்ட பிரசார பாடல்களை கிராமிய நடனங்கள் மூலம் ஆடிக் காட்டி அசத்தினர் இந்தக் குழுவினர். அதில் ஒருவர் கருணாநிதி போலவே வேடமணிந்து வந்தது முதல்வரையே கவர்ந்தது.

கிராமிய நடனங்களை ரசித்து பார்த்த கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை அழைத்து சில திருத்தங்களை செய்ய கூறினார். மேலும், கிராமிய கலைஞர்களையும் அழைத்து அறிவுரைகள் வழங்கினார்.

இந்த வித்தியாசமான பிரசாரம் குறித்து அதன் மூளையான கனிமொழி கூறுகையில், பிரசாரத்தில் 600 கிராமிய கலைஞர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் 60 குழுக்களாக பிரிந்து வியாழக்கிழமை முதல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

5 ஆண்டு சாதனைகளையும், நலத்திட்டங்களையும், நாடகம் மற்றும் பாடல்கள் மூலம் மக்களிடம் விளக்குவார்கள் என்றார் அவர்.

கனிமொழியால் சென்னையில் ஆண்டுதோறும் அரங்கேற்றப்படும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் பாதிப்பாகவே இந்த வித்தியாசமான கலை பிரசாரத்தில் திமுக இறங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

அழகிரி 24ம் தேதி மனு தாக்கல்:

மதுரையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.க.அழகிரி வருகிற 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 24ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம்.

இந்த நிலையில் மு.க.அழகிரி வருகிற 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அரசியல் அனாதையாகி விடுவார்.

திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நடந்த போது அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என கூச்சலிட்டு வந்தார். ஆனால் அங்கு படுதோல்வியைச் சந்தித்தார்கள். அப்போது போலதான் இப்போதும் நடக்கும்.

வரும் 24ஆம் தேதி நான் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். திமுகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும்.

திமுக அலுவலங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் பயந்துவிட மாட்டோம். இந்த தாக்குதல் குறித்து முறைப்படி புகார் தரப்பட்டுள்ளது என்றார் அழகிரி.

18ம் தேதி திமுக வேட்பாளர்கள் அறிமுகம்:

இதற்கிடையே திமுக கூட்டணியின் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் வரும் 18ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெறுகிறது.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மாநிலம் எங்கும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X