For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேதுவை எதிர்க்கும் தளுக்கு நடை தந்திரக்காரர்கள்...!

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சேது திட்டத்தினால் வளமான வாழ்வு பெறப்போகும் தமிழகத்தையும், தமிழக மீனவர்களையும் ஏமாற்ற தளுக்கு நடைப்பேச்சு நடத்தும் தந்திரக்காரர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

2001 மற்றும் 2004ம் ஆண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று காரசாரமாக குறிப்பிட்டிருந்த அதிமுக தலைவி ஜெயா தன்னுடைய தேர்தல் கூட்டங்களில் சேது சமுத்திர திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்ற பகுதிகளில் கடலோர சுற்றுச்சூழல் மோசமாகும் என்றும் கூறி இத்திட்டத்தை எதிர்ப்பதாக கூறி வருகிறார்.

இத்தேர்தலில் அவரது கூட்டணி வெற்றி பெற்றால் சேது சமுத்திர திட்டத்தை அதிமுக ரத்து செய்யும் என்றும் அறிவித்திருக்கிறார்.

இதற்கான விளக்கம் பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும், ஒவ்வொரு கூட்டத்திலும் ஜெயா இதையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பப் பேசி வருகிறார்.

இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த விவரங்கள் வருமாறு:

-இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில், மொத்த கடலோரப் பரப்பினோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான கடல் நுண்ணுயிர்கள் மற்றும் குறைவான ஆழ்கடல் உயிரினங்கள் மட்டுமே உள்ளன.

-10,500 சதுர கிமீ பரப்பளவுள்ள மன்னார் வளைகுடா உயிர்கோள மண்டலத்தில் 6 சதுர கிமீ பரப்பளவு மட்டும் பாதிக்கப்படலாம். இது, மொத்த பரப்பில் மிகக் குறைந்த பகுதியே ஆகும்.

-மன்னார் வளைகுடா உயிர்கோள மண்டலம் தேசிய கடற்பூங்கா பகுதியாகும். இதில் பவளப் பாறைகள் மற்றும் கடல் பொருட்கள் உள்ளன. இந்திய கடல் பகுதியில் கடற் புற்கள், வேதாரண்யத்தை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதி தவிர இப்பவளப் பாறைகள் சில வகையான மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த பகுதியாக உள்ளது.

மேலும் சேது சமுத்திர கால்வாய் அமைக்கப்படும் பகுதி இந்த இனப்பெருக்க பகுதிகளிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திட்டத் திற்காக கடற்பகுதியை ஆழப்படுத்துதல் மற்றும் கப்பல் இயக்க நடவடிக்கைகளினால் பவளப் பாறைகளுக்கோ அல்லது சதுப்பு நிலக் காடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

-சதுப்பு நிலக் காடுகள், கடற்புற்கள், பவளப்பாறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய செழிப்பான கடல் வளம் கொண்ட இப்பகுதி எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் பணி வடிவமைக்கப்பட்டதால் இப்பகுதியில் மீன் வளம் உறுதியாகப் பாதுகாக்கப்படுகிறது.

மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதால் அப்பகுதியிலுள்ள கடல் சுற்றுச்சூழல் எந்த வகையிலும் பாதிப்படையாது என்பதை நிரூபிக்கின்றன.

சேது சமுத்திர திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையில் சமுதாய மேம்பாட்டு திட்டம், திட்டம் செயலாக்கப்படும் பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குதல் போன்ற வசதிகளை ஏற்படுத்துவதற்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் மீனவர்கள் நேரடியாக பயன்பெறுவர். சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின்கீழ், பின்வரும் வசதிகள் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

-ரூ. 40 கோடி மதிப்பீட்டில் ராமேசுவரத்தில் பல்நோக்கு துறைமுக வசதியை ஏற்படுத்துதல்

-ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மூக்கையூர், தொண்டி, சேதுபவாசத்திரம் மற்றும் முத்துப்பேட்டையில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள் ஏற்படுத்துவதற்கு நிதி உதவி அளித்தல்,

- ரூ. 5 கோடி மதிப்பீட்டில் மீனவ மக்கள் தொகை அதிகமாக உள்ள ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ரூ. 5 லட்சம் வீதம் சமூக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.

- ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மாவட்டங்களில் கடலோர சமுதாய மேம்பாட்டு திட்டம் கைத்தொழில் மற்றும் வாழ்வாதார பயிற்சிகள் அளித்தல்

மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் மற்றும் உதவிகள் மூலமாக கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உறுதி செய்யப்பட்டது.

வளர்ச்சியடையும் உலகத்தில் கடல் வழி போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கருத்தின் அடிப்படையில் பல்வேறு வல்லுநர்களின் அறிவுரைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் சேது சமுத்திர கால்வாய் திட்டம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜெயா ஊருக்கு ஊர் சென்று மீனவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று உண்மைக்கு மாறாக பிரசாரம் செய்து வருகிறார். இதனை மீனவர்களுக்கு நினைவு படுத்த வேண்டிய கடமையை அந்த சமுதாய நண்பர்களே செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சேது திட்டத்தினால் வளமான வாழ்வு பெறப்போகும் தமிழகத்தையும், தமிழக மீனவர்களையும் ஏமாற்ற தளுக்கு நடைப்பேச்சு நடத்தும் தந்திரக்காரர்களை தமிழ்ச் சாதியே; அடையாளம் கண்டு கொள்க என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X