For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர்களை ஐ.மு.கூ. அரசு பாதுகாக்கும்: ராகுல் காந்தி

By Staff
Google Oneindia Tamil News

Rahul Gandhi
சிவகங்கை: உலககெங்கும் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களும் எங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களைக் காக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார்.

மாலை 3.55 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் மதுரை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்றார். பின்னர் தொண்டி சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த அவர் அங்கு ப.சிதம்பரத்தை ஆதரித்துப் பேசினார்.

ராகுல் காந்தி பேசுகையில், நான் தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பத்திரிகையாளர் சந்திப்பின்போது எப்போது தமிழகம் செல்வீர்கள் என்று கேட்டார்கள். விரைவில் வருவேன் என்று சொன்னேன்.

வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தமிழக மக்கள்தான். மத்தியில் அரசு அமைவதில் தமிழகம் முக்கியப் பங்காற்றுகிறது.

எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களும் எங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் வாழும் தமிழ்ச் சகோதரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு ஜனநாயக முறையில்தான் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய அமைச்சர்கள், அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. இலங்கை தமிழர்கள் அமைதியாக முறையில் வாழ மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

எங்களது முயற்சியால் தான் அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு தவிர்த்துள்ளது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. ஏனெனில் 5 வருடங்களுக்கு முன் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த அரசு சாதாரண மக்களுக்கு பல வகைகளில் தேவையான உதவிகளை செய்து வருகிறது.

தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கி நலத்திட்டங்களை நிறைவேற்றியது. பல ஆயிரம் கோடி தமிழக வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

சாதாரண மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிவகங்கை வேட்பாளர் ப.சிதம்பரம் உடன் இருந்து செயல்பட்டுள்ளார். உத்திரபிரதேசத்தில் அதிக நேரம் செலவழித்த நான் இனி தமிழகத்திற்காகவும் கூடுதல் ‌நேரம் ஒதுக்குவேன் என்றார்.

பின்னர் தனது சிவகங்கைப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்றார் ராகுல் காந்தி.

அங்கு உழவர் சந்தை திடலில் அவர் பேசினார். திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டமான், பெரம்பலூர் திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியன், கரூர் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து அவர் பேசினார்.

ராகுல் காந்தி பேசுகையில்,

திருச்சிக்கு எனது பாட்டி இந்திரா காந்தியும், தந்தை ராஜீவ் காந்தியும் பலமுறை வந்துள்ளனர். எனது குடும்பம் தமிழ் மக்களிடம் மிகுந்த பாசம் கொண்ட குடும்பம். தமிழக மக்களுடன் மட்டுமல்லாமல், உலகெங்கும் பரந்து விரிந்திருக்கும் தமிழ் மக்களுடனும் இந்த நெருங்கிய தொடர்பும், உறவும் உள்ளது. நான் இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துதான் பேசுகிறேன்.

இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியுடன் வாழ மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அங்குள்ள அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு முயற்சி எடுக்கும்.

இலங்கைத் தமிழர்கள் உரிய அரசியல் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற முயற்சிப்போம், போராடுவோம். பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய அரசும் இலங்கையில் தமிழ் மக்கள் நலமுடன் வாழ முயற்சிப்பார்கள், போராடுவார்கள் என்றார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி வருகையையொட்டி இரு ஊர்களிலும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X