For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக-காங்கிரஸை 'புரட்டி எடுத்த' தேமுதிக!

By Staff
Google Oneindia Tamil News

Vijaykanth
-தட்ஸ்தமிழ் சிறப்புக் கட்டுரை


சென்னை: தமிழகத்தில் 13 தொகுதிகளில் அதிமுக கூட்டணியின் வெற்றியை விஜயகாந்த்தின் தேமுதிக வேட்பாளர்கள் சிதறடித்துள்ளனர்.

அதே போல திமுக கூட்டணிக்கு 11 தொகுதிகளிலும், பாஜகவுக்கு 1 தொகுதியில் கிடைக்க வேண்டிய வெற்றியையும் தேமுதிக பறித்துள்ளது.

இதில் அதிமுகவுக்குத்தான் அதிகபட்சமாக 8 தொகுதிகளிலும், காங்கிரசுக்கு 7 தொகுதிகளிலும் சேதத்தை உருவாக்கியுள்ளார் விஜய்காந்த். ஆனால் விஜய்காந்தால் திமுகவுக்கு 3 இடங்களிலும் பாமகவுக்கு 2 இடங்களிலும் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தோல்விக்கும் தேமுதிகவே காரணம்.

மொத்தத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றியை மாற்றி அமைக்கும் சக்தியாக தேமுதிக இருந்துள்ளது.

தேமுதிகவினரின் தயவினால் தயாநிதி மாறன், டிஆர் பாலு, ப.சிதம்பரம், செம்மலை, தம்பிதுரை போன்ற முக்கிய தலைவர்களின் தலை தப்பியுள்ளது. அதேபோல் விருதுநகரில் வைகோ தோல்வியடைய தேமுதிக முக்கிய காரணமாக இருந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் நான்கு முனை போட்டி ஏற்பட்டது. இதில் திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையே தான் நேரடி போட்டி என்றாலும் தேமுதிக, கொங்கு முன்னேற்ற பேரவை, பாஜக போன்ற கட்சிகள் சில இடங்களில் வெற்றியின் போக்கை மாற்றும் சக்திகளாக திகழ்ந்துள்ளன.

அதிமுக கூட்டணிக்கு 13 சீட் காலி...

கடந்த 2006 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிமுகவின் வாக்குகளை கணிசமாக பிரித்த விஜயகாந்த் இம்முறையும் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்.

அவரது தேமுதிக வேட்பாளர்கள் 13 இடங்களில் அதிமுகவுக்கும், கன்னியாகுமரி தொகுதியில் பாஜகவுக்கும் கிடைக்க வேண்டிய வாக்குகளை பிரித்து திமுக கூட்டணியினருக்கு மறைமுகமாக உதவியுள்ளனர்.

தப்பிய தயாநிதி, டி.ஆர் பாலு, ப.சிதம்பரம்...

தேமுதிக வேட்பாளர்களால் சில முக்கிய திமுக கூட்டணி தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் ஓட்டை பிரிக்கவில்லை என்றால் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூரில் வென்ற கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் சிவகங்கையில் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் மானம் கப்பல் ஏறியிருக்கும்.

இந்த மூன்று தொகுதிகளிலும் தேமுதிகவினர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.

தம்பி காலை வாரிய அண்ணன்....

கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.அழகிரி 3,20,473 வாக்குகள் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை பிடித்த அதிமுக வேட்பாளர் எம்.சி. சம்பத் 2,96,941 வாக்குகள் பெற்று, 23,532 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதற்கு தேமுதிக சார்பில் போட்டியிட்ட சம்பத்தின் அண்ணன் எம்.சி. தாமோதரன், தனது தம்பிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் 93,172 வாக்குகளை பிரித்தது தான் காரணம். இதன்மூலம் விஜயகாந்த், அண்ணனை வைத்து தம்பி சம்பத்தின் காலை வாரி விட்டுள்ளார்.

வைகோவை வீழ்த்திய தேமுதிக...

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக பொது செயலாளர் வைகோ 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அத்தொகுதியில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய அவர் தேமுதிக வேட்பாளர் மாபா பாண்டியராஜன் சுமார் 1,25,229 வாக்குகளைப் பிரித்ததன் காரணமாக தோல்வியடைய நேர்ந்துள்ளது.

பாமகவுக்கு 2 தோல்வி...

தற்போதைய தேர்தலில் தேமுதிகவினர் பாமகவுக்கு பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கள்ளக்குறிச்சி என இரண்டில் மட்டுமே தேமுதிகவினர் அதிக வாக்குகளை பிரித்துள்ளனர். மற்ற தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை விட குறைவான வாக்குகளையே பிரித்துள்ளனர்.

ஒரு வேளை அதிமுக கூட்டணி, விஜயகாந்தை தன் பக்கம் இழுத்திருந்தால் இந்த 13 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 25 தொகுதிகளில் வென்றிருக்கலாம்.

திமுக கூட்டணி வேட்பாளர்கள் வென்ற தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை விட தேமுதிக அதிக வாக்குகள் வாங்கிய தொகுதிகள் விபரம்:

1. வட சென்னை

டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக) 2,81,055
தா. பாண்டியன் (இ.கம்யூனிஸ்ட்): 2,61,902
யுவராஜ் (தேமுதிக): 66,375
வாக்கு வித்தியாசம்: 19,153

2. மத்திய சென்னை

தயாநிதி மாறன் (திமுக) 2,85,783
எஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா(அதிமுக): 2,52,329
வி.வி.ராமகிருஷ்ணன் (தேமுதிக): 38,952
வாக்கு வித்தியாசம்: 33,454

3. ஸ்ரீபெரும்புதூர்

டி.ஆர்.பாலு (திமுக) 3,52,641
ஏ.கே.மூர்த்தி (பாமக): 3,27,605
மு.அருண்சுப்பிரமணியம் (தேமுதிக): 86,530
வாக்கு வித்தியாசம்: 25,036

4. காஞ்சிபுரம்(தனி)

பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்) 3,30,237
இ. ராமகிருஷ்ணன் (அதிமுக): 3,17,134
டி. தமிழ்வேந்தன் (தேமுதிக): 1,03,560
வாக்கு வித்தியாசம்: 13,103

5. கிருஷ்ணகிரி

இ.ஜி. சுகவனம் (திமுக) 3,35,977
கே. நஞ்சேகவுடு (அதிமுக): 2,59,379
டி.டி. அன்பரசன் (தேமுதிக): 97,546
வாக்கு வித்தியாசம்: 76,598

6. கள்ளக்குறிச்சி

ஆதி சங்கர் (திமுக) 3,63,601
கோ. தன்ராஜ் (பாமக): 2,54,993
எல்.கே. சுதீஷ் (தேமுதிக): 1,32,223
வாக்கு வித்தியாசம்: 1,08,608

7. கடலூர்

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்) 3,20,473
எம்.சி. சம்பத்(அதிமுக) 2,96,941
எம்.சி. தாமோதரன் (தேமுதிக) 93, 172
வாக்கு வித்தியாசம்: 23,532

8. திண்டுக்கல்

என்.எஸ்.வி. சித்தன் (காங்.) 3,61,545
பி. பாலசுப்ரமணி (அதிமுக): 3,07,198
பி. முத்துவேல்ராஜன் (தேமுதிக): 1,00,788
வாக்கு வித்தியாசம்: 54,347

9. நாகப்பட்டினம் (தனி)

ஏ.கே.எஸ்.விஜயன்(திமுக) 3,69,915
எம். செல்வராசு (இந்திய கம்யூ.): 3,21,953
எம். முத்துக்குமார் (தேமுதிக): 51,376
வாக்கு வித்தியாசம்: 47,962

10. சிவகங்கை

ப. சிதம்பரம் (காங்கிரஸ்) 3,34,348
ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (அதிமுக): 3,30,994
பர்வத ரெஜினாபாப்பா (தேமுதிக) 60,084
வாக்கு வித்தியாசம்: 3,354

11. தேனி

ஜே.எம்.ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்) 3,40,575
தங்கதமிழ்செல்வன் (அதிமுக): 3,34,273
எம்.ஜி. சந்தானம் (தேமுதிக): 70,908
வாக்கு வித்தியாசம்: 6,302

12. விருதுநகர்

மாணிக் தாகூர் (காங்.) 3,07,187
வைகோ (மதிமுக): 2,91,423
மாபா பாண்டியராஜன் (தேமுதிக) 1,25,229
வாக்கு வித்தியாசம்: 15,764

13. திருநெல்வேலி

எஸ். ராமசுப்பு (காங்கிரஸ்) 2,74,932
கே.அண்ணாமலை (அதிமுக) 2,53,629
மைக்கேல் ராயப்பன் (தேமுதிக) 94,562
கரு. நாகராஜன் (சமக) 39,997
வாக்கு வித்தியாசம்: 21,303

39ல் வென்றிருக்கலாம்...

அதிமுக கூட்டணியினர் வென்ற தொகுதிகளில் உள்ள வெற்றி வித்தியாசத்தை விட 11 தொகுதிகளில் தேமுதிகவினர் அதிக ஓட்டு வாங்கியிருந்தனர்.

காங்கிரஸ் விரும்பியதை போல் தேமுதிக, திமுக கூட்டணி பக்கம் வந்திருந்தால் திமுக கூட்டணி இம்முறை பொள்ளாச்சியை தவிர்த்து மற்ற 39 தொகுதிகளில் (தற்போது வென்ற 28+ தேமுதிக பிரித்த 11 தொகுதிகளிலும்) வென்றிருக்கலாம்.

மேலும், தேமுதிக தனியே நின்றதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வி அடைந்துள்ளனர். தங்கபாலு, இளங்கோவன், பிரபு, மணிசங்கர் அய்யர், கார்வேந்தன், சாருபாலா தொண்டைமான் என இந்த பட்டியல் நீள்கிறது.

காங்கிரசுக்கு அதிக சேதம்...

தேமுதிகவால் தோல்வியடைந்த 11 திமுக கூட்டணி வேட்பாளர்களில் மூவர் மட்டுமே திமுகவை சேர்ந்தவர்கள், ஒருவர் விடுதலை சிறுத்தை கட்சிக்காரர் மற்ற 7 பேரும் காங்கிரசை சேர்ந்தவர்கள்.

தேமுதிகவினரால் தாங்கள் அதிகம் பாதிக்கப்படுவோம் என்பதை முதலிலேயே உணர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியினர் அவரை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால், அது முடியாமல் போய்விட்டது.

அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வென்ற தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை விட தேமுதிக அதிக வாக்குகள் வாங்கிய தொகுதிகள் விபரம்:

1. திருவள்ளூர் (தனி)

வேணுகோபால் (அதிமுக) 3,68,294
காயத்ரி ஸ்ரீதரன் (திமுக): 3,36,621
சுரேஷ் (தேமுதிக): 1,10,452
வாக்கு வித்தியாசம்: 31,673

2. தென் சென்னை

எஸ். ராஜேந்திரன் (அதிமுக) 3,08,567
ஆர்.எஸ். பாரதி (திமுக): 2,75,632
வி. கோபிநாத் (தேமுதிக): 67,291
வாக்கு வித்தியாசம்: 32,935

3. விழுப்புரம் (தனி)

எம். ஆனந்தன் (அதிமுக) 3,06,826
கே. சாமிதுரை (விடுதலைச் சிறுத்தைகள்): 3,04,029
பி.எம். கணபதி (தேமுதிக): 1,27,476
வாக்கு வித்தியாசம்: 2,797

4. சேலம்

எஸ். செம்மலை (அதிமுக) 3,80,460
கே.வீ. தங்கபாலு (காங்கிரஸ்): 3,33,969
ஆர். மோகன்ராஜ் (தேமுதிக): 1,20,325
வாக்கு வித்தியாசம்: 46,491

5. ஈரோடு

அ.கணேசமூர்த்தி (மதிமுக) 2,84,148
ஈவிகேஎஸ். இளங்கோவன் (காங்.): 2,34,812
முத்து வெங்கடேஸ்வரன் (தேமுதிக): 91,008
வாக்கு வித்தியாசம்: 49,336

6. திருப்பூர்

சி.சிவசாமி (அதிமுக) 2,95,731
எஸ்.கே. கார்வேந்தன் (காங்) : 2,10,385
தினேஷ் குமார் (தேமுதிக) : 86,933
வாக்கு வித்தியாசம்: 85,346

7. கோவை

பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்) 2,93,165
ஆர்.பிரபு (காங்) : 2,54,501
ஆர்.பாண்டியன் (தேமுதிக) : 73,188
வாக்கு வித்தியாசம்: 38,664

8. கரூர்

மு. தம்பிதுரை (அதிமுக) 3,80,461
கே.சி. பழனிசாமி (திமுக): 3,31,312
ஆர். ராமநாதன் (தேமுதிக): 51,163
வாக்கு வித்தியாசம்: 49,149

9. திருச்சி

ப. குமார் (அதிமுக) 2,98,710
சாருபாலா ஆர். தொண்டைமான் (காங்): 2,94,375
ஏ.எம்.ஜி. விஜயகுமார் (தேமுதிக): 61,742
வாக்கு வித்தியாசம்: 4,355

10. மயிலாடுதுறை

ஓ.எஸ். மணியன் (அதிமுக) 3,64,089
மணிசங்கர் அய்யர் (காங்): 3,27,235
ஜி.கே. பாண்டியன் (தேமுதிக): 44,754
வாக்கு வித்தியாசம்: 36,854

11. தென்காசி (தனி)

பி. லிங்கம் (இந்திய கம்யூ.) 2,81,174
ஜி. வெள்ளைப்பாண்டி (காங்.): 2,46,497
கே. இன்பராஜ் (தேமுதிக): 75,741
வாக்கு வித்தியாசம்: 34,677

கன்னியாகுமரி தொகுதியில் இரண்டாவது இடம்பிடித்த பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் சுமார் 65,687 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால், தேமுதிக வேட்பாளர் ஆஸ்டின் இதைவிட சுமார் 2,785 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்துள்ளார்.

கன்னியாகுமரி:

ஜெ. ஹெலன் டேவிட்சன் (திமுக) 3,20,161
பொன். ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.): 2,54,474
ஏ.வி. பெல்லார்மின் (மார்க்சிஸ்ட்): 85,583
எஸ். ஆஸ்டின் (தேமுதிக): 68,472
வாக்கு வித்தியாசம்: 65,687.

31 லட்சம் வாக்குகள்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தேமுதிக வேட்பாளர்கள் பெற்றுள்ள மொத்த வாக்குகள் 31 லட்சத்து 28 ஆயிரத்து 93 வாக்குகள் ஆகும்.

40 வேட்பாளர்களில் 9 பேர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X