For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் நாளை எழுச்சி பேரணி-வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் மீதியிருக்கும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என கோரி மதிமுக சார்பில் நாளை தலைநகர் சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் எழுச்சி பேரணி நடத்தப்படும் என அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக சரித்திரத்தில் கடந்த 100 ஆண்டுகளில் எங்குமே நடைபெற்று இராத கொடூரமான இனப்படுகொலையால் ஈழத்தமிழினம் பேரழிவுக்கு ஆளாகி விட்டது. கடந்த 12ம் தேதி மாலையில் இருந்து 18ம் தேதி நண்பகல் வரையில் 42 ஆயிரம் தமிழர்கள் சிங்கள ராணுவ தாக்குதலால், விமான குண்டுவீச்சால் உலக நாடுகள் தடை செய்துள்ள குண்டுவீச்சால் கோரமாக கொல்லப்பட்டு உள்ளனர்.

தமிழர்களை எரித்து கடலில் கரைத்துவிட்டனர்...

ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ஆய்வாளர்கள் இந்த உண்மையை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக இறந்தவர்களின் உடல்களை எடுத்து, அந்த சாம்பலையும் கடலில் கரைக்கும் மாபாதக செயலை சிங்கள அரசு நடத்தி கொண்டு இருக்கிறது. பதுங்கு குழிகளில் படுகாயமுற்று மரண ஓலம் இட்டவர்களையும் சுட்டுக்கொன்று எரித்து விட்டனர்.

31/2 லட்சம் தமிழ் மக்கள் முல்லை தீவில் சிங்கள ராணுவத்தின் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என்று ஜனவரி தொடக்கத்தில் இருந்து நான் கூறியபோது, வெறும் 70 ஆயிரம் தமிழர்கள் அங்கு இருப்பதாக சிங்கள அரசும் இந்த கூட்டு சதியின் பங்காளியாக இந்திய அரசும் கூறியதை நினைவூட்டுகிறேன்.

இப்போது, 1 லட்சத்து 20 ஆயிரம் தமிழர்கள் அண்மையில் பாதுகாப்பு வளையப்பகுதிக்கு வந்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறியதில் இருந்தே எத்தகைய கொடூரமான இனப்படுகொலையை நடத்தி உள்ளனர் என்பது மறக்க முடியாத உண்மையாகிவிட்டது.

இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலைக்கு ஆளாகும் பேராபத்து அவர்கள் தலைக்கு மேல் கொலைவாளாக தொங்கி கொண்டு இருக்கிறது.

இலங்கையின் கைகூலிகள்...

எதிரியின் குண்டு தன் மீது பாய்வது, தன் வீரத்துக்கு இழுக்கு என்று கருதுகிறவர் பிரபாகரன். உலகம் கண்டிராத அந்த மாவீரன் போரில் தப்பி ஓடினார் என்று சிங்கள அரசு இழிவு படுத்த முயல்கிறது. அவரை பொறுத்தமட்டில் இது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத செயலாகும். இலங்கை அரசு பரப்புவது அயோக்கியதனமான பித்தலாட்டம்.

இந்த நிலையில், உலக மகா வீரரான பிரபாகரனை இழிவுபடுத்தும் நோக்கத்தில் தப்பி ஓட முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டதாக சிங்கள அரசு கூறும் நச்சு பிரசாரத்தை, இந்தியாவில் குறிப்பாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொலைக்காட்சி ஊடகங்களும், சில ஏடுகளும் ராஜபக்சே அரசின் கைக்கூலிகளாக வெளியிட்டு கொண்டு இருக்கின்றன.

ஈழத்தமிழர்களை அழிக்க சிங்கள அரசு நடத்துகிற இனக்கொலை யுத்தத்தை முழுக்க முழுக்க இயக்கியதும், ஆயுதங்கள் வழங்கியதும் இந்திய அரசுதான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன.

உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனமெல்லாம் நொறுங்கி மரண இருளாக துயர் மேவியுள்ள இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி அந்த இருளுக்கு மத்தியில் வெளிச்சமாக தென்பட்டாலும், கொடூரமாக கொல்லபட்ட தமிழ் மக்களுக்காகவும், போராளிகளுக்காகவும் வீரவணக்கம் செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.

ஒட்டு மொத்த ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டுவிடாமல் எஞ்சி உள்ள தமிழர்களையாவது காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு துன்பம் சூழ்ந்த வேளையில் குரல் கொடுத்து அமெரிக்க அரசையும், பிரிட்டன் அரசையும் வற்புறுத்தவும், இதுவரை கடமையாற்றாத ஐநா இனிமேலாவது தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் தாய் தமிழகத்துக்கு மக்கள் நம்சொந்த சகோதரர்களை பாதுகாக்க சூளுரைக்க செய்யவும் 21ம் தேதி மாலை 4 மணியளவில் தலைநகர் சென்னையிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எழுச்சி பேரணியை நடத்த இருக்கிறோம்.

இந்த பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் தோழர்களும், கழக கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

ராஜபக்சே போர் குற்றவாளி...திருமா:

இந்நிலையில் நேற்று இலங்கை தமிழர்களுக்கு ஆதவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது திருமாவளவன் கூறுகையில்,

இலங்கையில் ராணுவத்தினரின் கொடுமை உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இதில் இறந்த போராளிகளுக்கு எங்களது வீரவணக்கத்தை செலுத்துகிறோம். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழர்களை கொன்று குவித்து வரும் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என ஐநாவை வலியுறுத்துகிறோம். ஈழத்தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, மருந்த ஆகியவை தேவைப்படுகிறது. அதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அடிபணிய மாட்டேன் என்று ராஜபக்சே கூறியுள்ளார். இது அவருடைய ஆணவத்தை காட்டுகிறது என்றார் திருமாவளவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X