For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

20 மத்திய அமைச்சர்கள்-ஒரு பார்வை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்குடன் முதல் கட்டமாக 19 மூத்த அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். திமுகவுடன் சிக்கல் தீர்ந்த பின் அடுத்து நடக்கவுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் நிறைய புது முகங்களுக்கும் காங்கிரஸ் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ரவுண்டில் பதவியேற்ற அமைச்சர்கள் குறித்து ஒரு பார்வை...

1. மன்மோகன் சிங் - பிரதமர்

2வது முறையாக பிரதமராகியிருக்கிறார் மன்மோகன் சிங்.

நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் பதவிக்கு வந்த முதல் பிரதமர் இவர்தான்.

1991ம் ஆண்டு முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார்.

மத்திய அரசின் வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.

திட்டக் கமிஷன் துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

பஞ்சாப், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்தவர். சிறந்த பொருளாதார மேதையாக பாராட்டப்படுபவர். நரசிம்மராவ்தான் இவரை தனது நிதியமைச்சராக நியமித்து இந்தியாவின் பொருளாதாரப் பாதையை மாற்றி அமைக்க முக்கிய காரணம்.

எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான மன்மோகன் சிங்குக்கு குர்சரன் கெளர் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

2. பிரணாப் முகர்ஜி (காங்கிரஸ்-ஜாங்கிபூர்)

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, வரலாறு, அரசியல் அறிவியல் பட்டங்களைப் பெற்றவர். சட்டமும் படித்தவர். அரசியலுக்கு வரும் முன்பு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இந்திரா காந்தியின் தீவிர விசுவாசி. கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக காங்கிரஸில் இருக்கிறார். 1970 முதலே அமைச்சராக இருந்து வருகிறார். பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

1969ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பியானார். அதன் பின்னர் ஐந்து முறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.

3. சரத் பவார் (தேசியவாத காங்.-மாதா)

மகாராஷ்டிர மாநிலம் பாராமதி தொகுதியிலிருந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சரத்பவார் தற்போது மாதா தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ளார்.

முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் பின்னர் அதிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியுன் உடன்பாடு வைத்து தற்போது மத்திய அமைச்சராக நீடித்து வருகிறார்.

கடந்த அமைச்சரவையில், உணவுத்துறை அமைச்சராக இருந்தார். 1984ம் ஆண்டு முதல் முறை லோக்சபா உறுப்பினரானார்.

38 வயதில் மகாராஷ்டிர மாநில முதல்வரானவர்.

4. ஏ.கே.அந்தோணி (காங்கிரஸ் - ராஜ்யசபா உறுப்பினர்)

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் சேர்தலாவைச் சேர்ந்தவர்.

37 வயதே ஆன நிலையில் கேரள மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அந்தோணி. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995ம் ஆண்டு மீண்டும் முதல்வரானார். ஒரு வருடம் அப்பொறுப்பில் இருந்தார்.

மிஸ்டர் க்ளீன் என்ற பெயரைப் பெற்றவர்.

நரசிம்மராவ் அமைச்சரவையில் முதல் முறையாக மத்திய அமைச்சரானார்.

கடந்த அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.

மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

5. ப.சிதம்பரம் (காங்கிரஸ் - சிவகங்கை)

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தவர். 1972 முதலே காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்.

பொருளாதாரம், சட்டம், பாதுகாப்பு என பல துறைகளில் நல்லனுபவம் பெற்றவர்.

சிவகங்கை தொகுதியிலிருந்து 7வது முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் ஐந்து முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 2 முறையும் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1999ம் ஆண்டு மட்டும் தோல்வியுற்றார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர், உள்துறை இணை அமைச்சர், நிதியமைச்சர் என பொறுப்புகளை வகித்துள்ள ப.சிதம்பரம், கடந்த அமைச்சரவையின் கடைசிக்காலத்தில் உள்துறை அமைச்சராக்கப்பட்டார்.

6. மமதா பானர்ஜி (திரினமூல் காங். - தெற்கு கொல்கத்தா)

திரினமூல் காங்கிரஸ் தலைவர். தெற்கு கொல்கத்தாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் 91 முதலே தேர்வாகி வருகிறார்.

1984ம் ஆண்டு இந்தியாவின் இளம் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போது அவர் தோற்கடித்தது பழம்பெறும் அரசியல் தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியை.

1999ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தார். மீண்டும் அதே துறைக்கு அவர் திரும்புகிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து வந்த மமதா இந்தத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து இடதுசாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

7. எஸ்.எம்.கிருஷ்ணா (ராஜ்யசபா - காங்.)

கர்நாடக மாநிலம் மான்டியா தொகுதியிலிருந்து பலமுறை லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார்.

மகாராஷ்டிர மாநில ஆளுநர், கர்நாடக மாநில முதல்வர், துணை முதல்வர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

8. குலாம் நபி ஆசாத் (காங். - ராஜ்யசபா)

2005ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தார்.

1980ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் வாசிம் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை கூட அவர் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9. சுஷில் குமார் ஷிண்டே (காங். - சோலாபூர்)

மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் தொகுதியைச் சேர்ந்தவர். முந்தைய அரசில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் தலித் முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.

2004ம் ஆண்டு ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

10. வீரப்ப மொய்லி (காங்.- சிக்கபல்லபூர்)

கர்நாடக முதல்வராக 1992 முதல் 94 வரை செயல்பட்டார். 1974 முதல் 95 வரை கர்நாடக அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

11. எஸ். ஜெயபால் ரெட்டி (காங்.- செபல்லா)

1984ம் ஆண்டு முதல் முறையாக ஜனதாக் கட்சி சார்பி்ல் ஆந்திர மாநிலம் மகபூப் நகர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1998ம் ஆண்டு ஜனதாதளம் சார்பிலும், 99 மற்றும் 2004ல் காங்கிரஸ் சார்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2005ம் ஆண்டு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக்கப்பட்டார். 2006ம் ஆண்டு முதல் அவர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

மிகச் சிறந்த பேச்சாளர். குறிப்பாக ஆங்கிலத்தில் இவர் பேசும் பேச்சைக் கேட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைப்பவர்.

12. கமல்நாத் (காங். - சிந்த்வாரா)

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியைச் சேர்ந்தவர் கமல்நாத். 1980ம் ஆண்டு முதல் முறையாக எம்.பி. ஆனார். கடந்த 29 ஆண்டுகளாக இதே தொகுதியில் உறுப்பினராக இருக்கிறார்.

கடந்த அமைச்சரவையில் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார்.

நரசிம்மராவ் அமைச்சரவையில்தான் முதன் முதலில் சேர்ந்தார்.

13. வயலார் ரவி (காங். - ராஜ்யசபா)

வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சராக இருக்கிறார். 1975ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரள மாநில உள்துறை அமைச்சராக இருந்துள்ளார். 1994 மற்றும் 2003ம் ஆண்டு ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

14. மீராகுமார் (காங். - சஸ்ராம்)

பாபு ஜெகஜீவன் ராமின் புதல்வி. சமூக நீதித்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

முதல் முறையாக 1985ம் ஆண்டு லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பீகார் மாநிலம் சஸ்ராம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார்.

15. முரளி தியோரா (காங். - ராஜ்யசபா)

மும்பை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவி வகித்து அரசியலில் படிப்படியாக உயர்ந்தவர் தியோரா. அடிப்படையில் இவர் ஒரு தொழிலதிபர். கடந்த அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தார். மீண்டும் அதே பொறுப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

16. கபில் சிபல் (காங். - சாந்தினி செளக்)

2வது முறையாக சாந்தினி செளக் தொகுதியிலிருந்து வென்றுள்ளார் கபில் சிபல்.

90களில் அரசியலுக்கு வந்த சிபல், 98ல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனார். 96ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். தெற்கு டெல்லியில் போட்டியிட்டு சுஷ்மா சுவராஜிடம் தோற்றார்.

கடந்த அமைச்சரவையில் அறிவியல்துறை அமைச்சராக இருந்தார்.

17. அம்பிகா சோனி (காங். - ராஜ்யசபா)

கடந்த அமைச்சரவையில், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்தார். பஞ்சாப் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1976, 2000, 2004 ஆகிய ஆண்டுகளில் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சோனியா காந்தியின் தீவிர விசுவாசி. இதனால்தான் எந்த சலசலப்பு ஏற்பட்டாலும் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடித்து வருகிறார்.

18. பி.கே.ஹண்டிக் (காங். - ஜோர்ஹத்)

அஸ்ஸாம் மாநலம் ஜோர்ஹத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர். கடந்த அமைச்சரவையில் சுரங்கத் துறை இணை அமைச்சராக இருந்தார். 1991ம் ஆண்டு முதல் ஜோர்ஹத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று வருகிறார்.

1972 முதல் 76 வரை எம்.எல்.ஏவாக இருந்தார். 1980 முதல் 86 வரை ராஜ்யசபா எம்.பியாக இருந்தார்.

வட கிழக்கு மாநிலங்களிலிருந்து கேபினட் அமைச்சராகியுள்ள ஒரே எம்.பி. இவர்தான்.

19. ஆனந்த் சர்மா (காங். - ராஜ்யசபா)

கடந்த அமைச்சரவையில் வெளியுறவு இணை அமைச்சராக இருந்தார்.

மிக மிக அமைதியானவர். பேச்ச விட செயல்பாடில் ஆர்வம் காட்டுபவர். ஆணித்தரமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார்.

பாகிஸ்தானுடான தூதரக உறவுகளை வலுப்படுத்த மிகவும் பாடுபட்டவர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலை வாங்கும் யோசனையைச் சொன்னவர் இவர்தானாம்.

20. சி.பி. ஜோஷி (காங். - பில்வாரா)

லோக்சபாவுக்கு முதல் முறையாக தேர்வாகியுள்ளார். இதற்கு முன்பு ராஜஸ்தான் மாநில அமைச்சராக இருந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டில் தோல்வியைத் தழுவினார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர். பில்வாரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ராகுல் காந்தியின் நட்புப் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசியலுக்கு வந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X