For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்டவர் நகை வியாபாரி சுரேஷ்

By Staff
Google Oneindia Tamil News

Suresh Kumar
சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்டு 3 தெருக்களில் உடல் பாகங்கள் வீசப்பட்ட சம்பவத்தில், கொலையான நபர் நகை வியாபாரி சுரேஷ்குமார் என்று தெரிய வந்துள்ளது.

சென்னை நகரையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது நேற்று கண்டுபிடிக்கப்பட்ட சுரேஷின் உடல்.

தியேட்டர் அருகே கைகள்...

சூளை நடராஜா தியேட்டர் அருகில் சுரேஷின் இரு கைகள் மட்டும் ஒரு பாலிதீன் பையில் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் அந்தக் கைகளை மீட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், யானை கவுனி போலீஸாருக்கு ஒரு போன் தகவல் வந்தது.

வெங்கட்ராமன் தெருவில் கால்கள்...

காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள வெங்கட்ராமன் தெருவில் ஒரு பார்சல் கிடப்பதாக போனில் பேசியவர் தெரிவித்தார்.

அங்கு சென்று பார்த்தபோது இரு கால்கள் ஒரு பார்சலில் இருந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணப்பா மேஸ்திரி தெருவில் உடல்...

இந்த நிலையில், என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் கிருஷ்ணப்பா மேஸ்திரி தெருவில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் அருகில் ஒரு சணல் பை அனாதையாக கிடப்பதாக தகவல் வந்தது.

போலீஸார் அந்த பையை மீட்டுப் பார்த்தபோது தலையில்லாத ஒரு உடல் மட்டும் கிடந்தது. இடுப்புக்கு மேல் உள்ள பகுதி அது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மூன்று உடல் பாகங்களும் ஒரே நபருடையவை என்ற முடிவுக்கு வந்தனர். விசாரணை முடுக்கி விடப்பட்டது.

அதில், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 56வது தெருவில் வசித்து வந்த நகை வியாபாரி மற்றும் டிராவல்ஸ் நிறுவன அதிபர் சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. சுரேஷின் வயது 40.

10வது வகுப்பு வரை படித்துள்ளார். டிராவல்ஸ் தொழிலில் போதிய வருவாய் கிடைக்காததால், பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கமிஷன் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்தார்.

2 நாட்களுக்கு முன்பு காலையில் அவர் வீட்டை விட்டு வெளியே போனார். பின்னர் பிற்பகலில் வீடு திரும்பி குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் வெளியில் சென்றார். ஆனால் இரவு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது மனைவி செல்போனில் பேச முயன்றார். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் சுரேஷின் மனைவி மற்றும் அவரது பெற்றோர் கவலை அடைந்தனர். இருப்பினும் போலீஸாரை அணுக அவர்கள் தயங்கினர்.

இந்த நிலையில்தான் நேற்று துண்டு துண்டாக சுரேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சுரேஷின் காலில் அணிந்திருந்த பேன்ட் பாக்கெட்டைப் பரிசோதித்த போலீஸார் அதில் நகை அடகு வைத்த ரசீது ஒன்று இருப்பதைப் பார்த்து அதில் இருந்த சுரேஷ் குமாரின் முகவரியை வைத்து அடையாளம் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதை உறுதி செய்ய போலீஸார் வீட்டுக்குச் சென்றனர். அங்கு சுரேஷின் குழந்தைகள் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்க, மனைவி குளித்து விட்டு தலையைத் துவட்டிக் கொண்டிருக்க, சுரேஷின் தாய், தந்தை ஓய்வாக அமர்ந்திருக்க சந்தோஷ சூழ்நிலையைப் பார்த்து போலீஸாருக்கு சங்கடமாகி விட்டது.

இதையடுத்து சுரேஷ் கொல்லப்பட்ட தகவலைத் தெரிவிக்காமல் வேறு மாதிரியாக சுரேஷ் குறித்து விசாரித்துள்ளனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு சுரேஷின் மனைவி, தந்தையை மட்டும் அழைத்துச் சென்றனர். சுரேஷ் குறித்து விரிவாக கேட்டறிந்த பின்னர் அவர் கொடூரமாக கொல்லப்பட்ட தகவலை போலீஸார் தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும் இருவரும் கதறி அழுதனர்.

இதுவரை சுரேஷ்குமாரின் தலை மட்டும் கிடைக்கவில்லை. அவர் நகை வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுரேஷ்குமாரின் தலை கிடைத்த பின்னர் தடயவியல் சோதனை மூலம் கொல்லப்பட்டவர் சுரேஷ்குமார்தான் என்பதை உறுதி செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சுரேஷ்குமாரின் மனைவி பாரதி தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு சரண், சஞ்சய் என இரு மகன்கள் உள்ளனர்.

தனது மகன் கொலையுண்டது குறித்து சுரேஷின் தாயார் யசோதா கூறுகையில், எங்களது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் கீழாமூர் ஆகும். ஜெயந்தி, ஷீலா, ஆஷா, ஆகிய மகள்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் ரவிக்குமார், சுரேஷ்குமார் 3-வதாக பிறந்தவர்.

அவருக்கு எதிரிகள் யாரும் இல்லை. நேற்று மாலை 5 மணி அளவில் சவுகார்பேட்டை பகுதியில் சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சுற்றியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

இரவு 8 மணிக்கு கூட செல்போனில் சுரேஷ்குமாரோடு பேசினோம். இரவு 11 மணிக்கு பிறகு தான் அவரது செல்போனில் இருந்து சுவிட்ச் ஆப்' என்று தகவல் வந்தது.

திமுகவைச் சேர்ந்தவர்...

சுரேஷ்குமார் தி.மு.க.வில். தீவிரமாக செயல்பட்டு வந்தார் என்றார்.

மனைவி பாரதி கூறுகையில், எனது கணவர் மிகவும் நல்லவர். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர். 2 கார்கள், 2 வேன்கள் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் சொந்த வீட்டில் வாழ்கிறோம்.

நேற்று காலை 10 மணிக்கு எனது கணவர் டிபன் சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்றார். அதன் பிறகு பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்தார்.

பிற்பகல் 1 மணிக்கு மூத்த மகன் சரணுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக எனது 10 பவுன் நகைகளை அடகு வைப்பதற்காக சென்றார். சவுகார்பேட்டையில் மார்வாடி கடையில் நகையை அடகுவைத்து ஸ்கூல் பீஸ் கட்டி விட்டதாக போனில் மாலை 6 மணிக்கு என்னிடம் தகவல் சொன்னார்.

பிறகு, இரவு 8 மணிக்கு ஒரு முறை போனில் பேசியபோது, பின்னர் பேசுகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார். அது தான் அவருடன் நான் கடைசியாக பேசிய பேச்சு ஆகும்.

அதன்பிறகு அவருடன் செல்போனில் பேச முடியவில்லை. சுவிட்ச் ஆப் என்று தகவல் வந்தது. இரவு சில நேரங்களில் தொழில் விஷயமாக வெளியில் சென்றால் வீடு திரும்ப மாட்டார். மறுநாள் காலையில் வருவார்.

அது போல் இப்போதும் வந்து விடுவார் என்று நாங்களும் தைரியமாக இருந்தோம். ஆனால் அவர் பிணமாக வருவார் என்று எதிர்பார்க்கவில்லை.

அவரது பேண்ட் பையில் இருந்த நகை அடமான ரசீது, ஸ்கூல் பீஸ் கட்டிய ரசீது மற்றும் அவரது உடைகள், கையில் அணிந்திருந்த பித்தளை மோதிரம், வலது கையில் கட்டி இருந்த சிகப்பு கயிறு ஆகியவற்றை வைத்து எனது கணவர் சுரேஷ் குமார் உடல் பாகங்கள் தான், தெருவில் வெட்டி வீசப்பட்டது என்று நான் அடையாளம் கண்டேன்.

நகை வாங்கி விற்பதில் தான் பகைமை கொண்டு, சவுகார்பேட்டையை சேர்ந்த யாரோ எனது கணவரை இப்படி கொடூரமாக கொன்று இருப்பார்கள் என்று கருதுகிறேன் என்றார் பாரதி.

முதல் முறையல்ல...

சென்னை இதுபோன்ற மோசமான கொலையை பார்ப்பது இது முதல் முறையல்ல.

இந்தத் தலைமுறையினர் முதன் முதலில் சந்தித்த அனுபவம் மாணவர் நாவரசு படுகொலை.

மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் நாவரசு, மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, டிரங்குப் பெட்டியில் போட்டு ரயிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் அது. அந்தக் கொலை வழக்கில் கைதான மாணவர் டேவிட் பின்னர் நிரபராதி என்று கூறி விடுதலையாகி விட்டார். இன்று வரை நாவரசு படுகொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை.

அதேபோல அந்தக் காலத்தில், சென்னை நகரில் ஆளவந்தார் என்ற பெரும் பணக்காரர், அவரது கள்ளக் காதலியால் படுகொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக உடல் துண்டிக்கப்பட்டார்.

ஆளவந்தார் படுகொலைச் சம்பவம் அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு குப்பை மேட்டில் போடப்பட்ட சம்பவம் அயனாவரத்தை உலுக்கியது.

இப்போது சுரேஷ்குமாரின் கொடூரக் கொலை சென்னையை உலுக்கியுள்ளது. கொலையாளி, சுரேஷ்குமாரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். எனவேதான் இவ்வளவு குரூரமாக கொலை செய்துள்ளான் என்று போலீஸார் கூறுகிறார்கள்.

ரவுடிக் கும்பல் காரணமா?

வட சென்னையைச் சேர்ந்த ரவுடிக் கும்பலுக்கு, கொடுங்கையூர் நகை வியாபாரி சுரேஷ் குமார் கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

இதையடுத்து வட சென்னை இணை ஆணையர் ரவி தலைமையில் போலீஸார், வட சென்னையில் மிகக் கொடூரமான ரவுடிகள் குறித்த பட்டியலை கையில் எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

வியாசர்பாடி வெட்டி கிருஷ்ணா, ஏரிக்கரை சண்முகம், அபு கண்ணன், கத்திக் குத்து கலைமணி என முக்கியமான ரவுடிகளை போலீஸார் தங்களது சந்தேகப் பார்வையில் கொண்டு வ்துள்ளனர்.

இந்த ரவுடிகளுடன் தொடர்புடைய சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பழைய நகைகளை வாங்கி விற்று வந்த சுரேஷ்குமார், மார்வாடிகளிடம்தான் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றி விற்று வந்துள்ளார். பெரும்பாலும் திருட்டு நகைகளைத்தான் இவர் வாங்குவாராம்.

ஆனால் திருடிக் கொண்டு வந்து கொடுக்கும் திருடர்களுக்கு குறைந்த பணத்தை கொடுத்து விட்டு பெரும் பணத்தை சுரேஷே எடுத்துக் கொள்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

எனவே திருட்டு நகைகளை கொண்டு வந்து கொடுக்கும் திருட்டுக் கும்பல் சுரேஷை கொன்றிருக்கலாமா என்ற சந்தேகத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகக் கோரமாக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தால், மிகப் பெரிய அளவிலான பாதிப்பை கொலையாளிகளுக்கு சுரேஷ்குமார் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்றும் போலீஸார் உறுதியாக நம்புகின்றனர்.

தலை இன்னும் கிடைக்கவில்லை..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X