For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த மாதம் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் - கிளம்புகிறார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வியால் தொய்வடைந்துள்ள கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையிலும், மக்களை நேரில் சந்திக்கும் வகையிலும், சட்டசபை இடைத் தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தும் வகையிலும், அடுத்த மாதம் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாராம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

லோக்சபா தேர்தலை பெரும் நம்பிக்கையுடன் சந்தித்தார் ஜெயலலிதா. காரணம், பாமக, மதிமுக, இடதுசாரிகள் என பலம் வாய்ந்த கட்சிகளுடன் அமைத்த கூட்டணி.

இந்தக் கட்சிகள் எல்லாம் திமுகவை விட்டு விலகியதால் நிச்சயம் நமக்கே நாற்பதிலும் வெற்றி என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தார் ஜெயலலிதா.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், திமுக தலைமையிலான 3 கட்சி கூட்டணி அட்டகாசமாக வெற்றியைப் பெற்று, ஜெயலலிதாவுக்கும், தமிழக மக்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

தேர்தல் தோல்வியை அதி்முக கூட்டணி சற்றும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக பாமக 'வாஸவுட்' ஆனதால் அக்கட்சியினர் அதிர்ந்து போய் விட்டனர்.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் கொடநாடு எஸ்டேட்டுக்குப் புறப்பட்டுப் போன ஜெயலலிதா அங்கு ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தனது பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா. அதன் பின்னர் தமிழகம் முழுக்க அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

தொடர்ந்து மூன்று தேர்தல்களில் (2 சட்டசபை இடைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தல்) தோல்வியைத் தழுவியதால் தொய்வடைந்திருக்கும் கட்சியினரை ஊக்கப்படுத்தும் வகையிலும், மக்களை நேரில் சந்திக்கும் வகையிலும், சட்டசபை இடைத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையிலும் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் ஜெயலலிதா.

தனது சுற்றுப்பயணத்தின்போது திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி பொதுக்கூட்டங்களில் அவர் பேசவுள்ளார்.

கடந்த 1988ம் ஆண்டு தான் முதல் முறையாக தேர்தல் அல்லாத சமயத்தில் தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 3 மாதம் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதன் பினனர் அவர் தேர்தல் சமயங்களில் மட்டுமே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் தற்போது 2வது முறையாக அவர் தேர்தல் அல்லாத சமயத்தில் அவர் தமிழக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதால் அதிமுகவினர் இப்போதே உற்சாகமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கட்சித் தரப்பில் கூறுகையில், அடுத்த மாதம் அம்மா தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஆளும் கட்சிக்கு எதிராக தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபடவுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது மக்கள் பிரச்சினைகளைக் கேட்கவும், மக்களுடன் கலந்துரையாடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

1988ம் ஆண்டு ஜெயலலிதா மேற்கொண்ட அதிரடி பயணத்தால், அப்போது இரண்டாக பிளவுபட்டிருந்த அதிமுகவினர், ஜெயலலிதா பக்கம் மொத்தமாக திரண்டனர். ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுகவுக்கு தொண்டர்களிடம் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதிமுக ஜெயலலிதாவின் கைக்கு மொத்தமாக வந்தது.

அதேபோல இப்போதைய சுற்றுப்பயணமும் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் திருப்புமுனையைக் கொடுக்கும் என கட்சியினர் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.

மேலும், இந்த பயணத்தின்போது லோக்சபா தேர்தலின்போது கட்சிக்கு விசுவாசமாக இல்லாதவர்கள் யார் யார் என்ற கணக்கெடுப்பு பிளஸ் விசாரணையையும் மேர்கொள்ளப் போகிறாராம் ஜெயலலிதா.

துரோகிகள் விரைவில் களையெடுக்கப்படுவார்கள் என்று சமீ்பத்தில் ஜெயலலிதா பொள்ளாச்சியில் கூறியது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இன்னும் 2 ஆண்டுகளில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. அதற்குள் கட்சியில் துரோகிகளை களையெடுத்து கட்சியைப் பலப்படுத்தி, கட்சியினரை உற்சாகப்படுத்த அம்மா திட்டமிட்டுள்ளார்.

சட்டசபை பொதுத் தேர்தலை நம்பிக்கையுன் சந்திக்கும் வகையில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டவே இந்த ரோட் ஷோ என்கிறார் அவர்.

அதிமுக கூட்டணி தற்போது கலகலத்துக் கிடக்கிறது. பாமக இன்னும் தோல்வி பாதிப்பிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. இடதுசாரிகள் அம்மாவை விட்டு விலக ஆரம்பித்துள்ளனர். அதிலும் வரதராஜன் படு காட்டமாக அதிமுகவை விமர்சித்து விலகலுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.

மதிமுகவால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை, அதேசயம், லாபமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே அது உப்புக்குச்சப்பாணி கணக்காகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.

எனவே கூட்டணியிலும் குழப்பங்கள் இருப்பதால் அதிமுகவை பலப்படுத்தவும், மக்களுடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலும் நேரடியாக களம் இறங்கத் தீர்மானித்து விட்டார் ஜெயலலிதா எனத் தெரிகிறது.

கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வந்தாலும் கூட தாலுகா வாரியாக, மாவட்ட வாரியாக கட்சியினரை வரவழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டுதான் உள்ளார் ஜெயலலிதா. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து முதல் 10 மணி நேரம் வரை அவர் கட்சியினரை சந்திக்க நேரம் செலவழிப்பதாக கட்சியினர்
கூறுகிறார்கள்.

இந்த சந்திப்பின்போதுதான், அதிமுக தேர்தல் ஏஜென்டுகளில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேரை திமுகவினர் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விட்டதாக கட்சியினர் தெரிவித்தனராம்.

இப்படி பக்காவாக பல வகைகளிலும் கட்சியினரின் நிறை, குறைகளை அலசி ஆராய்ந்து முடித்துள்ள நிலையில்தான் அதிரடி சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகியுள்ளார் ஜெயலலிதா.

அம்மாவின் பயணம் அதிமுகவைக் காப்பாற்றுமா... பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X