For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் தேர்வு - தங்கபாலுவுக்கு நாடார்கள் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்காமல், நாடார் சமுதாயத்தைப் புறக்கணித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு பல்வேறு நாடார் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாடார் அமைப்புகளின் அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன் தலைமை தாங்கினார்.

இந்திய நாடார்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் பி.சின்னமணி நாடார், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், பேரவை தொண்டரணி தலைவர் ஜாகுவார் தங்கம், சென்னை வாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் பி.தங்கமுத்து நாடார், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை துணைத்தலைவர் இரா.அழகேசன், சான்றோர்குல பண்பாட்டு கழக தலைவர் ஏ.கணேசன் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இதுவரை நாடார் சமுதாயத்தின் பிரதிநிதியை கொண்டு இருந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு இப்போது நடைபெறும் இடைத்தேர்தலில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.

சுமார் 60 சதவீத சமுதாய மக்களை வாக்காளர்களாக கொண்ட சமுதாயத்தில் இருந்து காங்கிரஸ் பற்றுள்ள நாடார் சமுதாய வேட்பாளரை அறிவிக்காததற்கு காரணமான காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை கண்டிக்கிறோம்.

தனது தோல்விக்குப் பழி வாங்குகிறார் தங்கபாலு

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சேலத்தில் தன்னுடைய தோல்விக்கு நாடார் சமுதாய வாக்காளர்கள் தான் காரணம் என்று நினைத்து நாடார் சமுதாயத்தை பழிவாங்கும் தங்கபாலுவை நாடார் சமுதாயம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் பெரிய சமுதாயமான நாடார் சமுதாயத்தை புறக்கணித்து அகில இந்திய தலைமைக்கு உண்மைக்கு புறம்பான தகவலை கொடுத்த தங்கபாலுவை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் கருணாநிதியை பின்பற்றி அகில இந்திய அளவில் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி தினமாக அறிவிக்க துளிகூட முயற்சி செய்யாத, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் மீது பற்றில்லாத தங்கபாலு, காந்தி, நேரு, சர்தார் பட்டேல் போன்றோர் கட்டிக்காத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு லாயக்கற்றவர்.

தெருக்கள் தோறும் கொடும்பாவி எரிப்போம்..

காமராஜர் பிறந்த சமுதாயம் என்று கூட பார்க்காமல், காங்கிரஸ் கட்சியிலே இருந்து கொண்டிருக்கும் நாடார் சமுதாய இளைஞர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும் வாய்ப்பு கொடுக்காமல் காமராஜர் பிறந்த சமுதாயத்தை வீழ்த்த சூழ்ச்சி செய்ததை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நாடார் சமுதாயத்தினர் வாழும் அனைத்து கிராமத்திலும், தெருக்களிலும் தங்கபாலு உருவபொம்மை எரிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பத்மநாபன் பேசுகையில், ஸ்ரீவைகுண்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அன்று அனைத்து கிராமங்களிலும் தங்கபாலு உருவ பொம்மையை எரித்து விட்டு இந்த உண்ணாவிரதத்தில் நாடார் சமுதாயத்தினர் திரளாக கலந்து கொள்வார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X