For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆணையம் அழைப்பு: ஓடி ஒளியவில்லை-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நேரில் விளக்குமாறு தேர்தல் ஆணையத்தின் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நான் ஓடி ஒளியவில்லை என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று கூறும் ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று டெல்லிக்குச் சென்று அதை நிரூபிக்க ஏன் தயங்குகின்றனர் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும், எனவே அது தேவையற்றது என்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால்தான் 1989 பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தாமல் தள்ளிப் போடப்பட்டது.

இப்போதும் காங்கிரஸ், திமுக தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் எனக் கூறி வருகின்றன. தேர்தல் ஆணையம் இதனை மறுத்து வருகிறது.

மின்னணு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுப்புவோர் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்துக்கு வந்து செயல்முறை விளக்கம் அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான அழைப்பு பாமகவுக்கும் வந்துள்ளது. அதனை பாமக ஏற்றுக் கொண்டுள்ளது. முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதைப்போல ஓடி ஒளியவில்லை.

வாக்குப் பதிவு எந்திரங்களை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் தேர்தல் நடைமுறைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே பாமகவின் கோரிக்கை. ஏனெனில் தேர்தலின் நேர்மையே இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.

தேர்தல் பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சில கோடி ரூபாய்களை செலவு செய்து, அடிப்பதுபோல அடி, நாங்கள் அழுதுவதுபோல அழுது காரியத்தை சாதித்துக் கொள்கிறோம் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டு ரூ. 100 முதல் ரூ. 500 வரை பணம் கொடுத்துதான் வெற்றிபெற முடிந்தது என்ற உண்மையாக வாக்களித்தவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், அவர்களை வாழ்த்தியவர்களுக்கும் தெரியும் என்று ஒரு தேர்தல் தோல்விக்குப் பிறகு அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம்சாட்டிய கருணாநிதி, இப்போது, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி சாராத அமைப்பு என்று உபதேசம் செய்கிறார்.

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை நன்றாக ஆய்வு செய்து பணபலம் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளுக்கும் தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இது எதிர்க்கட்சிகளின் பிரச்சனை, நமக்கு இல்லை என்று ஆட்சியில் உள்ளவர்கள் நினைக்கக் கூடாது. நாளை அவர்கள் எதிர்க்கட்சியாக மாறும்போது தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்த முடியாமல் போகும். இதனை உணர்ந்து தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டும். இதற்கான முயற்சிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X