For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டம்!

By Staff
Google Oneindia Tamil News

Income Tax Return
டெல்லி: மாத ஊதியதாரர்களின் வருமான வரியை பெருமளவில் குறைக்கும் வகையி்ல புதிய வருமான வரித் திட்டத்தை மத்திய அரசு அமலாக்கவுள்ளது.

வருமான வரியை மத்திய அரசு மிக எளிதாக வசூல் செய்வது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மாத ஊதியதாரர்களிடம் தான். இவர்களிடம் சம்பளம் தரும்போதே TDS என்ற பெயரில் வருமான வரியை பறித்துக் கொண்டு தான் சம்பளம் தரப்படுகிறது.

இவர்களுக்கு இணையாக அல்லது இவர்களை விட அதிகமாக ஊதியம் ஊட்டும் தனி நபர்களிடம் வருமான வரியை வசூலிக்க வழியில்லை என்பதால் அவர்கள் பக்கம் மத்திய அரசு திரும்பிக் கூட பார்ப்பதில்லை.

இதனால் நாட்டின் மக்கள் தொகையில் மிகக் குறைவான அளவினரே வருமான வரியை செலுத்துகின்றனர். இவர்களுக்கு ஏதாவது சலுகைகயாவது தரப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை (ஜெயிலுக்குப் போனால் முதல் வகுப்பு கிடைக்கும் என்பதைத் தவிர!).

இப்படி மாத ஊதியதாரர்களையும் தனியார் நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் வரியையும் மையமாக வைத்து மத்திய அரசின் வருமான வரித்துறை கட்டமைப்பு இயங்கிக் கொண்டுள்ளது.

இந் நிலையில் நிதியமைச்சராகவுள்ள பிரணாப் முகர்ஜி கொஞ்சம் மாத ஊதியதாரர்கள் பக்கம் கருணைக் கண் காட்ட ஆரம்பித்துள்ளார்.

மாதச் சம்பளதாரர்களின் வருமான வரிச் சுமையைக் குறைக்க புதிய வரி விதிப்பு முறையை அமலாக்கத் திட்டமிட்டுள்ளார் பிரணார்.

இதற்கான வழிகாட்டும் கையேடடை பிரணாப் முகர்ஜி டெல்லியில் வெளியிட்டார். கூடவே நம் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் இருந்தார்.

இந்த புதிய வரி விதிப்பு முறைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும் (அப்ப இன்னும் 2 வருஷம் ஆகும்!).

இந்தப் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால் மாத ஊதியம் வாங்குவோருக்கு பெரும் நி்ம்மதி பிறக்கும். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

இப்போது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் 20 சதவீதம் வருமான வரி செலுத்துகின்றனர். 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறவர்கள் 30 சதவீதம் வரி செலுத்துகின்றனர்.

இதில் திருத்தம் செய்து ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீதமே வரி விதிக்கப்படும். இதன் மூலம் இந்த வருவாய் பிரிவினருக்கு ஆண்டுக்கு ரூ. 1.17 லட்சம் வரை வரி குறையும்.

அதே போல ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2.67 லட்சம் வரை வரி குறைக்கப்படும்.

அதே போல வருமான வரி சட்டம் 80C-ன் படி ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரையுள்ள சேமிப்புகளுக்குத் தரப்படும் வரி விலக்கை ரூ. 3 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மாதச் சம்பளம் தவிர தரப்படும் இதர படிகள், மற்றும் பணச் சலுகைகளையும் வருமானத்துடன் சேர்த்தே வருமான வரிக்கு உட்படுத்தப்படும்.

நிறுவனங்கள் மீதான அதிகபட்ச வருமான வரி விதிப்பு தற்போது 30 சதவீதாக உள்ளது. இதை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

அரசு தரும் பல்வேறு வரிச் சலுகைகள் காரணமாக எந்த வரியையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத தொழில் நிறுவனங்கள் மீது குறைந்தபட்ச மாற்று வரி விதிக்கப்படும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான வரி 40 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கலாம்.

பங்கு பரிவர்த்தனை வரியை ரத்து செய்யவது, நீண்ட கால மூலதன ஆதாய வரியை மீண்டும் கொண்டு வருவது போன்ற பரிந்துரைகளும் இந்தக் கையேட்டில் கூறப்பட்டுள்ளன.

இது குறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், நாடாளுமனறத்தில் குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவைக் கொண்டுவர அரசு உத்தேசித்துள்ளது. வரிகளை இவ்வாறு குறைத்தால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீதான வரிச் சுமையும் குறைவதோடு, வரி கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் வரி வசூலும் அதிகமாகும்.

இது நாட்டின் இளம் தலைமுறையினருக்கு பெரும் வரப் பிரசாதமாக அமையும். அவர்களுக்கு கையில் கிடைக்கும் ஊதியம் அதிகமாகும் என்றார்.

அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், வருமான வரி சட்டத்தின் பொன் விழா ஆண்டான 2011 முதல் இந்த புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வரும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X